2025, ஜூன் 7-10 நக்கீரன் இதழில் தஞ்சாவூர் சுரங்கத்துறை அதிகாரி ஏ.டி. பிரியா குறித்தும், அவர் வழங்கிய கிராவல் பர்மிட் குறித்தும், "சுரங்கத்துறை ஊழல்! சுதாரிக்குமா அரசு?'’என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்திக்குப் பிறகு இந்த துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சரவணவேல்ராஜ் உடனடியாக நடடிக்கை எடுத்துள்ளார். எனவே அவருக்கு நக்கீரன் இதழ் சார்பாக பாராட்டு.
தஞ்சாவூரில் கிராவல் மண் எடுப்பதற்கான சட்டதிட்டங்கள், எப்படி கிராவல் மண் எடுக்கவேண்டும் என்பது குறித்து விண்ணப் பித்திருந்த அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார் சரவணவேல்ராஜ். ஆனால் ஏ.டி. பிரியா அவருக்கு வேண்டப்பட்ட 3 நபர்களை மட்டும் பயிற்சிக்கு அழைத்துவிட்டு, லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள் என போலியான ஆட்களை வைத்து பயிற்சி வழங்கியதாகக் கூறி போட்டோ எடுத்து அதிகாரிக்கு அனுப்பிவிட்டு அதிகாரியை ஏமாற்றியுள்ளார்.
சென்னையிலிருந்து ஆடிட் செய்ய வந்த அதிகாரிகள் ஒட்டு மொத்த ஆவணங்களை எடுத்துச்சென்று ஆய்வு செய்துவரும் நிலையில், பல புதிய பிரச்சனைகளையும் ஏ.டி.பிரியா உருவாக்கிவருகிறார்.
இந்த விவகாரத்தை திசைதிருப்பத் திட்டமிட்ட பிரியா, தஞ்சாவூர் ஏ.டி.யாக பணியாற்றிய சீனிவாசராவ் என்பவர், தன்னு டைய அலுவலகத்திற்கு தன் உடைமைகளை எடுக்கவந்துள்ளார். அவர் வந்த சி.சி.டி.வி. வீடியோவை எடுத்து ஒரு தனிநபரிடம் கொடுத்து, சீனிவாசராவ் செய்த ஊழல்களை மறைப்பதற்காக அது தொடர்பான ஆவணங் களை அலுவலகத்திற்கு வந்து எடுத்துச் செல்வதாகக் கூறி செய்தியாக வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு தனிநபருக்கு பிரியா லீஸ் கொடுத்த விவகாரம் மேலிடத்திற்குத் தெரியவந்ததால், அதை திசைதிருப்ப இப்படி ஒரு வேலையைச் செய்துள்ளார். இவர் கொடுத்த ஒப்பந்தம், வருகின்ற 27.06.2025 வரை செல்லும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் முழுவதும் கிராவல் எடுக்கும் பணி நடை பெற்றுவருகிறது. மாவட்டம் முழுவதும் கிராவல் எடுப்பதற்கான லைசன்ஸ் கொடுக் கப்படவில்லை என்றாலும், ராஜ்குமார் குழுவைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்டவர்கள் ஒரு பர்மிட்டை உச்சபட்சமாக 5ஆயிரம் வரை விற்பனை செய்வதோடு, போலியான பர்மிட்டுகளும் போட்டு விற்பனை செய்துள்ளதால், தஞ்சாவூர் முழுவதும் கிராவல் மண் அள்ளிவருகின்றனர். ஏ.டி. பிரியாவின் நம்பிக்கைக்குரிய ஆளான சிவதாஸ் என்பவரை கையில் வைத்துக்கொண்டு தினேஷ் யாருக்கும் பயப்படாமல் துணிந்து செயல்பட்டுவருகிறார்.
இந்த சுரங்கத்துறை அலுவலகத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஊழியர் கலை. அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை கையில் வைத்துக்கொண்டு, வரும் அதிகாரி சாதகமான ஆளாக இருந்தால், ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொடுப்பது, ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து வாங்குவது என்று அதிகாரம் காட்டிவருகிறார். அதேசமயம், அதிகாரி இவருக்கு சாதகமாக இல்லை என்றால், அதிகாரியைக் குறித்து தவறான தகவல்களை வெளியே கொடுத்து, அவர் குறித்து செய்தி வெளியிடுவது, ஒப்பந்ததாரர்கள் மூலம் உயரதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதம் போடுவது என்று செயல்படுவதாக இவர்மேல் புகார்கள் குவிகின்றன.
பொதுவாக ஒரு துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை 3 வருடத்திற்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்வார்கள். ஆனால் இவர் தொடர்ந்து 10 வருடத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இவரைப் பணியிடமாற்றம் செய்தால் பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறுகிறார்கள்.
அதேபோல் திருச்சியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் டி.எஸ்.பி. என்கிற சீனிவாசப்பெருமாள் சிறுகனூர் பகுதியிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியின் பின்புறம் அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி கிராவல்மண் அள்ளி வருகிறார். இப்படி டெல்டா பகுதி முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கிராவல்மண் தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல கோடிகளில் பணம் புரளுவதால், அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பணம் சம்பாதிப்பதோடு, தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பங்கும், தன்னுடைய துறைசார்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் என்று யார் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு பங்கும் கொடுத்து அவர்கள் வாயை அடைத்துவிடுகின்றனர்.
இத்தகைய ஒரு அதிகாரி மேல் நடவடிக்கை எடுத்தும், அவருக்குக் கீழிருக்கும் அதிகாரிகள் பயமில்லாமல் துணிந்து செயல்படுகிறார்கள். பிரியா போன்ற அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் களையெடுக்கப்பட வேண்டும். கிராவல் மண் அள்ளுவதற்கான நடைமுறையை அரசு முறைப் படுத்திட வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடம் எழுந்துள்ளது.