புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த குவாரி முறைகேடுகளை புகார் செய்த விவகாரத்தில், சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைவதால் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகமான கல்குவாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் இருக்கின்றன. அதிக முறைகேடுகள் நடப்பதும் இங்கேதான். மலைகளில் பாறைகளை உடைக்க அனுமதிபெறும் நிறுவனங்கள், அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் பாறைகளை உடைத்துக் கொண்டு போகிறார்கள். மாதாமாதம் அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டிய தொகையை தாமதமின்றி குவாரி உரிமையாளர்கள் கொடுத்துவிடுவதால், கனிமவள அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
கிராமங்கள், கோயில்கள், பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் மலைகளில் அதிக சக்தி கொண்ட வெடிகள் வைத்து பாறைகளை உடைக் கும்போது வீடுகளும், கோயில்களும் சேதமடை கின்றன, தண்ணீர், உணவு நாசமாகிறது என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், அந்த புகாரை சம்பந்தப்பட்ட குவாரிகளுக்கே அதிகாரிகள் அனுப்புவதால், புகார் கொடுப்பவர் களை குவாரிகளின் உரிமையாளர்கள் அடிக்கடி மிரட்டுவதும் வழக்கமாக உள்ளது. மிரட்டலுக்குப் பயந்து மறு புகார் கொடுப்பதில்லை.
இதற்குமுன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதித்த அளவைவிட பாறைகள் உடைத்து அள்ளியது ஆய்வில் தெரியவந்த பிறகு, குவாரிக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அந்த குவாரிகள் செயல்படத் தொடங்கின. அதேபோல திருமயம் தாலுகாவில்தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் சொந்த கிராமமான லெட்சுமிபுரம் உள்ளது. அந்த கிராமத்தில் அ.தி.மு.க. மா.செ. வைரமுத்து உள்பட பலர் குவாரி தொழில் நடத்துவதோடு, அதிக சக்தி உள்ள வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதால் அந்த கிராமத்திலுள்ள பாதுகாக்கப்படவேண்டிய பாரம் பரியமிக்க செட்டிநாட்டு வீடுகள் சேதமடைந்து வருகின்றன. அதனால் மலையடி குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யவேண்டும் என்று பொது மக்கள் கொடுத்த புகார்கள் காற்றோடு போனது. அமைச்சர் ரகுபதியும் கண்டுகொள்ளவில்லை.
ஜகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. ஆனால் பெரும் கட்சியான அ.தி.மு.க. எடப்பாடி யின் அறிக்கை, மாஜி விஜயபாஸ்கரின் ஆறுத லோடு நின்றுபோனது. புதுக்கோட்டையிலுள்ள அதிக குவாரிகள் மாஜி விஜயபாஸ்கர், மா.செ. வைரமுத்து உள்ளிட்ட பலரிடம் இருப்பதுதான் காரணம். அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் நமது குவாரிகளுக்கும் ஆய்வுகள் வந்துவிடும் என்ற அச்சம் உள்ளது.
ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட பிறகு குவாரிகளில் ஆய்வுகளை செய்துவருகின்றனர் அதிகாரிகள். ஆய்வில் முறைகேடுகள் நடந்துள் ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜகபர் அலி சொன்னதுபோல குவாரிகளில் வெட்டி எடுக்கப்பட்டு பதுக்கப்பட்டிருந்த கற்கள் மீண்டும் குவாரிகளுக்குள்ளேயே கொட்டப்பட்டிருக்கிறது. பல இடங்களில் குவாரியின் ஆழம் தெரியாமலிருக்க மண் கொட்டி வைத்துள்ளனர் என்கின்றனர் ஆய்வுக்குழுவினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “"ஜகபர் அலியின் புகார்கள், அதிகாரிகள் மூலம் ஆர்.ஆர் கிரஷர் உரிமையாளர்கள் ராசு, ராமையாவுக்குப் போனதும் அவர்கள், இனியும் ஜகபர் அலியை விட்டுவைக்கக்கூடாது என்று மேலும் சில குவாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து கொல்லத் திட்டமிட்டுள்ளனர். மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் ஒரு விலைபேசி, அந்த பணியை நான் முடிக்கிறேன் என்று முன்வந்துள்ளார். அதனால்தான் எப்பவுமே ஓடாத அந்த 407 மினி லாரியை கொலைக்குப் பயன்படுத்தி மோதியுள்ளார். முதலில் மோதும்போது இறந்தாரா என்பது உறுதியாகாததால் மீண்டும் ஒருமுறை மோதியிருக்கிறார்.
இந்த கூட்டுச் சதியில் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மட்டுமின்றி அரசு அதி காரிகளுக்கும் பங்கு உள்ளது. இதனை அந்தப் பகுதி போலீசாரும் அரசல்புரசலாகத் தெரிந்துவைத்துள்ளனர். ஆனால் போலீசார் கிரஷர்காரர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து 4 பேரை கைதுசெய்து ஒருவரைத் தேடுவதாக சொல்கிறார்கள். மறைமுகமாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகளை போலீசாரும் கண்டுக்கலை, அரசும் கண்டுக்கலை. தற்போது விசாரணைக்கு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிரஷர் உரிமையாளர்களான ராசு, ராசு மகன் தினேஷ், ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் போன்றவர்களின் செல்போன்களை ஆய்வு செய்யவேண்டும். இவர்களின் செல்போன்களுக்கு சி.டி.ஆர். போட்டுப் பார்த்தால் வேறு யாரிடமெல்லாம் பேசி சதியில் ஈடுபட்டுள்ளனர், இதில் அதிகாரிகள் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். அதேபோல புகாருக்கு உள்ளான குவாரிகளில் மட்டும் ஆய்வை முடித்துவிட்டுச் செல்லாமல் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வுசெய்து முறைகேடுகள் நடந்துள்ள குவாரி, கிரஷர்களை கண்டுபிடித்து அனுமதியை ரத்துசெய்வதுடன் பூட்டி சீல் வைக்கவேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள குவாரிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்கக்கூடாது. இதுபற்றி தமிழ்நாடு முதலமைச்சர் வரை புகார் கொண்டுபோவோம்''” என்கின்றனர்.
செல்போன்களுக்கு சி.டி.ஆர் போட வேண்டும் என்ற கோரிக்கையால் பல அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
-செம்பருத்தி