இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான எழுத்தாளர் பாலகுமாரன் மே 15-ஆம் தேதி மரணமடைந்தார். தஞ்சை மாவட்டம் பழமார்நேரியைச் சேர்ந்த பாலகுமாரன், முதலில் கவிதைகளில் தனது ஆர்வத்தை வெளிக்காட்டினார். பின்பு சிறுகதைகள், நாவலில் கவனம் திருப்பிய அவர் "மெர்க்குரி பூக்கள்', "இரும்புக்குதிரை' நாவல்களின் மூலம் வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றார்.
திரைத்துறையில் இயக்குநர் இமயம் பாலச்சந்தரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தாலும் திரைப்பட வசனகர்த்தாவாகவே பிரபலமடைந்தார். நாயகன், "குணா', "காதலன்', "பாட்ஷா' படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன. இயக்குநர் பாக்யராஜின் "இது நம்ம ஆளு' திரைப்படத்தை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. தன் திரை அனுபவங்களை, "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற பெயரில் தொடராக எழுதினார்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, தமிழக அரசின் விருதுகள், இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கும் பாலகுமாரன் "உடையார்' உள்பட 217 நாவல்களுக்கு உடைமையாளராகவும், ஏகப்பட்ட தமிழ் வாசக நெஞ்சங்களின் உரிமையாளராகவும் நிறைவெய்தியிருக்கிறார். நக்கீரன் ஆசிரியருடனும் நக்கீரன் குடும்பத்தாரிடமும் தனிப்பட்ட அன்பு காட்டிய பாலகுமாரன், நக்கீரன் குழுமத்தின் வெளியீடான "ஓம் சரவணபவ' இதழில் "கடவுளைத் தேடி' தொடரை எழுதியவர். அவரது மரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
-சுப்பிரமணி
ராக்கெட் ராஜா கைது! பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கோவை ஜெயிலிலிருந்து நெல்லை நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்.
கொடியன்குளம் பேராசிரியர் செந்தில் குமார் கொலை தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்பதால் அவரை நெல்லை மாநகர போலீசார் இரண்டு நாட்கள் விசாரணைக்காக கஸ்டடி எடுத்தனர். ஒரு நாள் விசாரணையை முடித்துக்கொண்ட போலீசார் 15-ந்தேதி மதியம் ராக்கெட் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காகக் கொண்டு சென்றார்கள்.
இதனிடையே 15-ந்தேதி காலை பதினோரு மணியளவில் நெல்லை ஜங்ஷனிலிருந்து வடக்குத் தாழையூத்திற்கு வழக்கம் போல் அரசுப் பேருந்து சென்றிருக்கிறது. அந்தக் கிராமத்தை சுமார் 12.10 மணியளவில் சென்றடைந்தது. கடைசி ஸ்டாப் என்பதால் பயணிகள் இறங்கிய பின்பு 15 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து பேருந்து திரும்புவது வழக்கம். பயணிகள் இறங்கிய பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வாலிபர்கள் இருவரில், ஒருவர் பெட்ரோல் குண்டை சீட்டில் வீசி எறிய, சீட் தீப்பற்றிக் கொள்ள டிரைவரும் கண்டக்டரும் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள். பேருந்து தீயில் எரிந்திருக்கிறது.
ராக்கெட் ராஜாவைக் கைது செய்ததைக் கண்டித்து பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.யான அருண்சக்தி குமார் விரைந்திருக்கிறார். அங்கு நிலைமை பதட்டமாக உள்ளது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05-16/balakumaran-death-t.jpg)