விழுப்புரம் மாவட்டம், சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே உள்ளது மயிலம். இங்கு சுமார் 15 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு நிலங்களை திண்டிவனம் வருவாய்த்துறை அலுவலர்கள், தனி நபர்களுக்கும், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர் சுதாகர், "எங்கள் மயிலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடம் சர்வே எண் 31. இதில் சுமார் 4 ஏக்கர் வரை ரியல் எஸ்டேட் காரர்களுக்கு நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த முறைகேட்டில் திண்டிவனம் சார்ஆட்சியர், வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் இப்படி பலர் துணை போயிருக்கிறார்கள். இதன்மூலம் கோடிக்கணக்கான மதிப்புடைய அரசாங்க சொத்து சூறையாடப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு இடத்தை போலியான நபர்களுக்கு தலா 3 சென்ட் எனப் பட்டா போட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையம் பெற்று, ப்ளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இது சட்டப்படி தவறு.

ll

ஏழை எளிய மக்கள், வீட்டு மனை இல்லாதவர்கள் அரசிடம் முறைப்படி விண்ணப்பித்தால், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் இப்படி பல்வேறு அதிகாரிகள் விசாரணை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து பட்டா வழங்க வேண்டும். அதுதான் நடைமுறை. அப்படி வழங்கப்பட்ட பட்டாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு அவர்கள் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்ட விதி காற்றில் பறக்க விடப்பட்டு, நூற்றுக்கணக்கான போலி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து நாங்கள் அனுப்பிய புகாரில் கூறப்பட்டுள்ளபடி அரசு நிலத்தை பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது உண்மை என்று திண்டிவனம் வட்டாட்சியர் அலெக்சாண்டர் கூறியதோடு, அப்படி வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யும் அதிகாரம் கோட்டாட்சியருக்கு தான் உள்ளது என்று வாய்மொழியாக தெரிவித்தார். இதுகுறித்து ஆண்டுகள் பலவாகியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

Advertisment

ll

இதேபோன்று எங்கள் மயிலம் கிராம சர்வே எண் 22/3ல் துவங்கி 22/50 வரை சுமார் 15 ஏக்கர் அரசு நிலம் மற்றும் ஓடை புறம்போக்கு, தோப்பு புறம்போக்கு ஆகியவற்றுக்கு பட்டா வழங்கியுள்ளனர். அதேபோல் சர்வே எண் 17/2ல் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நிலவியல் தோப்பு இருந்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட 200 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் ஏராளமாக இருந்தன. அந்த புளிய மரங்களை வெட்டிவிட்டு தனி நபர் வணிக வளாகம் கட்டுவதற்கு முயற்சி செய்தனர். அதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கினோம். அதற்குள் 5 புளிய மரங்களை வெட்டிவிட்டார்கள். அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 5 புளிய மரங்கள் மட்டும் பட்டுப்போனதாகக் கூறியதை பசுமை தீர்ப்பாயம் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக 50 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டுமென்று ஆட்சியருக்கு உத்தர விட்டது. அரசுக்கு சொந்தமான இடங் களை தனி நபர்களுக்கு பட்டாவாகக் கொடுக் கப்பட்டிருந்தாலும் அந்த இடம் அரசு இடமாகத்தான் கருத வேண்டும் என்று வருவாய்த் துறையின் உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. அப்படிப்பட்ட இடங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் சுதாகர்.

ll

Advertisment

"சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள எங்கள் மயிலம் பகுதியில் நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் போலி ஆவணங்களால் அதிகாரிகள் துணையோடு பட்டா பெற்று விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவராக நான் இருந்தபோது எனக்கே தெரியாமல் வருவாய்த்துறையினர் பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர். பட்டா கொடுக்க வேண்டுமானால் ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஊராட்சி ஒன்றிய ஆணையரே பட்டா கொடுக்க எழுத்து மூலம் அனுமதி கொடுத்துள்ளார். பணத்திற்காக இப்படி பல்வேறு விதிமுறைகளை மீறி பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகாரனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்திற் கும் புகார் அனுப்பியுள் ளோம். எங்கள் புகார் குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. சமீபத்தில் உயர் நீதிமன்றம், முறை கேடாக பட்டா வழங்கும் அலுவலர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது'' என சுட்டிக்காட்டுகிறார் முன் னாள் மயிலம் ஊராட்சிமன்ற தலைவர் ரவி.

ll

இதுகுறித்து வருவாய்த்துறை என்ன கூறுகிறது என்பதை அறிவதற்காக திண்டிவனம் சார்-ஆட்சியர் கட்டா ரவிதேஜா, வட்டாட் சியர் அலெக்சாண்டர் இருவரையும் தொடர்பு கொண்டோம். இருவருமே பதில் கூற முன்வரவில்லை. இப்படிப்பட்டவர்கள் எப்படி போலி பட்டாவை ரத்து செய்வார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

-எஸ்.பி.எஸ்.