கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளக்காதலைக் கண்டித்ததால் முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்துகொடுத்து மாமனார், மாமியாரை தீர்த்துக் கட்டிய முன்னாள் போலீஸ்காரரின் மகள், ஒன்றரை ஆண்டுகள் கழித்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் அருகேயுள்ள இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள் தம்பதியரின் மகன் வேல்முருகனுக்கும், விருத்தாச்சலம் தங்கமணி கார்டனில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பூமாலை மகள் கீதாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
2021-ல், கணவர் வேல்முருகன் பஹ்ரைன் நாட்டில் தங்கி வேலை செய்துவிட்டு, திரும்பிவந்த நிலையில் ஒருநாள் கொளஞ்சியம்மாள் தனது வீட்டில் முள்ளங்கிச் சாம்பாருடன் உணவு சமைத்து வைத்துவிட்டு, வயலுக்குச் சென்றுவிட்டார்.
வீடு திரும்பியவுடன் கணவர் சுப்பிரமணியன், மகன் வேல்முருகன், பேரன் சரவணகிருஷ்ணன் ஆகியோர் உணவு சாப்பிட்டனர். அப்போது அங்குவந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுவின் மகன் நித்தீஷ்வரன், மகள் பிரியதர்ஷினி ஆகியோரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் கொளஞ்சியம்மாள், அவரது கணவர் சுப்ரமணியன், சிறுவர்கள் சரவணகிருஷ்ணன், நித்திஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து அருகிலிருந்தவர்கள் கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்க, அங்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் கொளஞ்சியம்மாள், சுப்ரமணியன், சிறுவன் நித்திஷ்வரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குழந்தைகள் சரவணகிருஷ்ணன், பிரியதர்ஷினி ஆகியோர் சிகிச்சைக்குப் பிறகு நலமடைந்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில்... 3 பேர் மரணத்தில் கீதாவுக்கு தொடர்பிருப்பது உறுதியானது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், "கீதாவுக்கும் விருத்தாசலம், புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் வசித்துவரும் ஹரிஹரனுக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது. இவர்கள் பழகும் விஷயம் தெரிந்த கீதாவின் மாமியார் கொளஞ்சியம்மாளும், மாமனார் சுப்பிரமணியனும் கண்டித்தனர். வெளிநாட்டில் இருந்து வேல்முருகன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஊர் திரும்பிய வேல்முருகனுக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை.
கோபமடைந்த வேல்முருகன், விருத்தாசலத்திலேயே தான் புதிதாக கட்டிவரும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு, தனது சொந்த ஊரான இலங்கியனூருக்கு சென்று வந்துகொண்டிருந்தார். கிரகப்பிரவேசம் முடிந்த பிறகும் வேல்முருகன் தனது சொந்த ஊரிலேயே இருக்க, கீதா குழந்தைகளுடன் புதிய வீட்டில் குடியேறினார். சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு செல்லவிருப்பதால் தனது வீட்டைக் காலி செய்ய வேண்டும், தனக்கு விவாகரத்து கொடுக்கவேண் டும் என்று வேல்முருகன், கீதாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் சமரசம் செய்து வைத்து சேர்ந்து வாழுமாறு மகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர். இந்த நிலையில்தான் இலங்கியனூருக்கு கணவருடன் சென்ற கீதா, சம்பவத்தன்று சாப்பாடு செய்துவிட்டு மாமியார் வயலுக்குச் சென்றிருந்த நேரத்தில் முள்ளங்கிச் சாம்பாரில் எலி பேஸ்ட் விஷத்தைக் கலந்துள்ளார்.
பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் விஷம்கலந்த உணவைச் சாப்பிடும்போது பதைபதைப்பில்லாமல் வேடிக்கை பார்த்ததுடன், தனக்கு எதுவும் தெரியாததுபோல் நாடக மாடியுள்ளார் கீதா. வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில்தான் போலீசார் விசாரணை செய்து கீதாவையும், அவரது கள்ளக் காதலனான ஹரிஹரனையும் தற்போது கைதுசெய்து, சிறையிலடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் முடிவெடுக்க ஒன்றரை ஆண்டு காலதாமதம் ஏன் என்பதுதான் எல்லோருடைய கேள்வியும். இதுகுறித்து வழக்கறிஞர் காசிவிஸ்வநாதன், "சம்பந்தமில்லாத பக்கத்து வீட்டுச் சிறுவன் உட்பட 3 பேரை கொலைசெய்த இந்த கொடூரச் செயலை செய்த குற்றவாளிகளை பிடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? உடற்கூராய்வு அறிக்கையும், வேதியியல் அறிக்கையும் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் வந்துவிடும். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? காவல்துறையில் பணியாற்றுபவர்கள் குடும்பத்தினர் குற்றம் செய்தால் காவல்துறை கண்டுகொள்ளாதா?'' என கேள்வியெழுப்புகிறார்.
கீதாவின் தந்தை பூமாலை காவல் அதிகாரியாக இருந்ததால் சக காவல்துறையினர் இந்த புகார்களை கிடப்பில் போட முடிவுசெய்தனர். புகார் கொடுத்த வேல்முருகனையும் பிரபுவையும் முன்னுக்குப்பின் முரணாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களிடம் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் புகாரை மாற்றி எழுதி வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் வழக்கு விசாரணை நிலுவையிலேயே இருந்துவந்தது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராஜாராம் பதவியேற்ற பிறகு நடத்திய ஆய்வில், "ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு ஏன் கிடப்பில் உள்ளது?' என விசாரித்துள்ளார். மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக ராமதாஸ் புதிதாக பொறுப்பேற்றார். இதனால் இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு, கீதா விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே கீதா, ஹரிஹரன் இருவரையும் மே 24 அன்று அதிகாலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தது காவல்துறை.
"தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்படும் நீதி' என்பதை காவல்துறையினர் உணரவேண்டும்.