இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் வசிப்பவர் அ.தி.மு.க. ஆட்டோ பைனான்ஸ் அதிபர் ஆட்டோ கண்ணன். ராசி வட்டி, மீட்டர் வட்டி வசூலில் ஆற்காடு, இராணிப்பேட்டை நகரங்களில் முக்கியபுள்ளி. கடன் கேட்பவரின் சொத்தை எழுதி வாங்கிய பின்பே பணம் தருவார். வட்டித்தொழிலில் கில்லாடியான இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பார்ட்னராகி கல்வித் தந்தையாக வலம்வருகிறார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இன்னோவா காரில் 6 பேர் கொண்ட கும்பல் கண்ணன் வீட்டுக்கு வந்துள்ளது. 5 ஆண்கள் 1 பெண் என இருந்த அந்தக் குழுவினரின் கழுத்தில் வருமானவரித்துறை ஐ.டி. கார்டுகள் தொங்கியது. கண்ணன் வீட்டுக்குள் புகுந்து இரண்டுமணி நேரம் வீட்டையே புரட்டிப்போட்டு சோதனை செய்துள்ளனர். ரெய்டு என்றதும் பதட்டமாக இருந்த கண்ணனிடம், ரெய்டை நிறுத்தணும்னா பணம் வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். செட்டில்மெண்ட் முடிந்ததும் அடுத்த சிலநிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளது அந்த கும்பல்.
வீட்டுக்கு வருமான வரித்துறை வந்தது என தனது ஆடிட்டரிடம் கூறியுள்ளார் ஆட்டோ கண்ணன். அவர் வருமானவரித்துறை அலு வலகத்தில் விசாரிக்க, "நாங்க ரெய்டு எதுவும் நடத்தல' என்றுள்ளார்கள். வீட்டு வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அதில் அவர்கள் வந்த கார் பதிவெண்ணை கொண்டு முகவரி கண்டறிய முயன்றபோது, அது ஒரு லேடீஸ் ஸ்கூட்டி பதிவெண்ணாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியானவர், தான் ஏமாந்தது உறுதியாகி ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் தந்தார் கண்ணன். அந்தப் புகாரில் "என்னை மிரட்டி வீட்டுக்குள் வந்து ரெய்டு செய்து 6 லட்சம் பணம் பறித்துக்கொண்டு சென்றனர்'' என எழுதித் தந்தார்.
இதுகுறித்து பேச நாம் ஆட்டோ கண்ணனை தொடர்பு கொண்ட போது, "போலீஸ் என் செல்போனை டேப் செய்யறாங்க, போன்ல பேச முடியாது'' என்றார்.
விசாரணை அதிகாரியான ஆற்காடு இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தியிடம் கேட்டபோது, "அந்தக் கும்பல் வீட்டுக்கு வந்ததுமே வீட்டில் இருந்த செக்யூரிட்டி கேமரா கனெக்ஷனை கட் செய்துள்ளார். இதனால் வீட்டுக்குள் நடந்தது எதுவும் பதிவாகவில்லை. ஆனால் வெளியேயிருந்த கேமராவில் கார் நிற்பதுவரை பதிவாகியிருந்தது. நகரத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து அந்தக் கார் எந்தப் பக்கமிருந்து வந்தது, அந்த வண்டிக்கு முன்னால் வந்தது யார் என்பதைப் பார்த்தோம். இதில் தான் கண்ணன் வீட்டில் சில மாதங்களுக்கு முன்புவரை குடியிருந்த பிரியாணி கடை உரிமையாளர் எழிலரசு சிக்கினான். அவன் அடிக்கடி வந்து கண்ணன் வீட்டை நோட்டம் விடுத்ததை கண்டுபிடித்தோம்.
எழிலரசுவை தூக்கிவந்து விசாரித்தபோது, கண்ணன் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதித்து வைத்துள்ளார். நானே அவரிடம் பலமுறை பணம் வாங்கி வட்டி கட்டியுள்ளேன். அவரிடம் பணம் பறிக்கலாம் என முடிவு செய்து ஆற்காட்டில் உள்ள நண்பன் ஹோட்டல் பரத்திடம் ஆலோசித்தேன் என்றான். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எழிலரசுவின் உறவினர் மாது, அவனது நண்பர் நவீன்தான் ரெய்டு நடத்த ஐடியா தந்துள்ளனர். நவீனுக்கு நெருங்கிய பழக்கமான சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராக பணியாற்றும் ராமகிருஷ்ணன் என்பவரோடு பேசி, போலியாக ஒரு ரெய்டு நடத்தி பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். ரெய்டுக்காக ஜமாலியா நகர் சையத், புதுப்பேட்டை முபினா என செட் சேர்ந்துள்ளனர். ஏழுபேர் கொண்ட இந்த டீம் டிப்டாப்பாக ரெய்டுக்கு தயராகி வந்துள்ளனர். எழிலரசு வழிகாட்டியதோடு நின்றுகொண்டுள்ளான். ரெய்டின்போது எப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டும் என ராமகிருஷ்ணன் டிரெய்னிங் தந்ததுபோல் செல்போன் பறிமுதல், குடும்ப உறுப்பினர்களை ஒரே இடத்தில் அமர வைத்து, அறைகளில் சோதனை என நடத்தியுள்ளனர். போலியாக ரெய்டு நடத்தி மிரட்டி, பணம் கைக்கு வந்ததும் எஸ்கேப்பாகிவிட்டார்கள். இந்த ரெய்டுக்கு மூளையே நவீன், ராதாகிருஷ்ணன்தான். நவீன் சிக்கினால் பல விவகாரங்கள் வெளியேவரும்'' என்றார்.
போலிஸில் சிக்கிய 6 பேரிடமிருந்து ரூ.3 லட்சம் பணம், கார், லேடீஸ் பைக் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளது போலீஸ்.
"ராணிப்பேட்டை, ஆற்காடு, சென்னையில் சில அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி மிரட்டி பணம் பறித்துள்ளது இந்த கும்பல். திருடனுக்கு தேள் கொட்டியது என்பதுபோல் கணக்கில் வராத தொகை என்பதால் அவர்கள் புகார் தராமல் கமுக்கமாக இருக்கின்றனர். ஆட்டோ கண்ணனிடமே கூட அதிகளவு பணம் பறித்துள்ளது இந்தக் கும்பல். ஆனால் அவர் 6 லட்சம் மட்டுமே என கணக்கு காட்டுகிறார்' என்கிற தகவல் பரபரத்துக் கிடக்கிறது ஆற்காடு நகரம் முழுவதும்.