தமிழகத்துக்கு வரும் அரசியல் வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவில், போலிச் சான்றிதழ் விவகாரம் பூதாகரமாகிவருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு...
தமிழகத்திற்கென்று தனியாக பாம் ஸ்குவாட் பிரிவை உருவாக்கத் திட்டமிட்டார் ஜெயலலிதா. இதற்காக, அப்போதைய தலைமைச் செயலாளர் மலைச்சாமி ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறையில் தமிழ்நாடு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை புதிதாக உருவாக்கினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
மிகவும் சென்சிடிவ்வான இந்த பிரிவில் போலிச் சான்றிதழ்கள் ஊடுருவியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, "தமிழக காவல்துறையில் இந்த பிரிவை உருவாக்கும்போது இதற்குத் தகுதியானவர்களை எப்படித் தேர்வு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, இந்திய ராணுவத்திலிருக்கும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவிலிருந்து தகுதியானவர்களைக் கேட்டுப்பெறலாம் என அன்றைய ஜெயலலிதா அரசு முடிவு செய்து, இந்திய பாதுகாப்புத்துறைக்கு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசோ, பணியிலிருப்பவர்களைத் தர இயலாது; ராணுவ பாம் ஸ்குவாடில் பணிபுரிந்து இடையிலேயே விலகிய நபர்களிலிருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என தெரிவித்தது.
அதனடிப்படையில் முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து பாம் ஸ்குவாடுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்காகப் போடப்பட்ட அரசாணையில் (எண்:2037 மற்றும் 2038), இந்த பிரிவில் தேர்வு செய்வதற்கு கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருக்க வேண்டும், மத்திய அரசின் நேசனல் செக்யூரிட்டி மையம் அல்லது காலேஜ் ஆஃப் மிலிட்டரி இன்ஜினியரிங் அல்லது பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி ஆகிய 3 மையங்களில் ஏதேனும் ஒன்றில் வெடிகுண்டு கண்டுபிடிப்பில் 3 மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். இது தவிர, சம்பந்தப்பட்ட பிரிவில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும். இவைகள்தான் இந்த பிரிவில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில், தமிழ்நாடு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவில் 180 நபர்களை சேர்க்க தீர்மானிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த பிரிவு உருவாக்கப்பட்ட 1991 முதல் இப்போது வரை 180 நபர்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே இருக்கும் இந்த பிரிவில் தற்போது 120 நபர்கள்தான் இருக்கிறார்கள். இந்த 120 நபர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கி றார்கள். கேரளாவை அடுத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இருக் கின்றனர். தமிழர்கள் மிகக் குறைவுதான்.
இந்த 120 பேரில் சுமார் 80 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக் கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போதே இதனைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், ஆக்சன் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 20 பேர் ஓய்வுபெறப் போகிறார்கள். இந்த 20 இடங்களுக்கும் ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கும் சேர்த்து சுமார் 80 நபர்களை விரைவில் தேர்வு செய்யவிருக் கிறது தமிழ்நாடு காவல்துறை.
மத்திய அரசின் 3 மையங்களில் எதேனும் ஒன்றில் 3 மாதம் பயிற்சி கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் என்கிற விசயத்தில்தான் போலிச் சான்றிதழ் நிறைய ஊடுருவியிருக்கிறது. போலிச் சான்றிதழ் விவகாரத்தில் முந்தைய அ.தி.மு.க. அரசு எந்த ஆக்ஷனையும் எடுக்காததால், போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பலரும் தைரியமாக இருக்கின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் இந்த பிரிவிற்கு ஆள் எடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட விருக்கிறது. இந்த நிலையில், போலிச் சான்றிதழ் மூலம் பாம் ஸ்குவாட் பணியில் தற்போது இருக்கும் பலர், தங்கள் பாணியிலேயே போலி சான்றிதழ் மூலம் பலரையும் இந்த பணியில் சேர்த்துவிடத் திட்டமிட்டு வருகிறார்கள். அதனால் புதிதாக ஆள் சேர்ப்பின்போது, தி.மு.க. காவல்துறையாவது இந்த விசயத்தில் சீரியசாக இருக்கவேண்டும்''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அந்த பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்.
மேலும் நாம் விசாரித்தபோது, "தகுதி யானவர்களை தேர்வு செய்கிறபோது சான்றிதழ் கள் உண்மையானவையா என பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்வதில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் மத்திய அரசின் 3 மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி கோர்ஸை முடித்திருப்பதாக சான்றிதழைக் காட்டும்போது அதன் உண்மைத்தன்மையை அறிய சம்பந்தப் பட்ட மத்திய அரசின் மையத்திற்கு சான்றிதழை அனுப்பிவைத்து பரிசோதிக்க வேண்டும். ஆனால், அப்படி உண்மைத் தன்மையை அறிவதில் அக்கறை காட்டப்படுவதில்லை.
தற்போது பணியிலிருக்கும் நபர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறியும் நடவடிக்கையை தி.மு.க. அரசு துணிச்சலாக எடுத்தால் பல வில்லங்கங்கள் அம்பலமாகும்.
இதற்கிடையே, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவில் போலி சான்றிதழ் மூலம் ஆட்களை உள்ளே நுழைக்க ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை விழிப்புடன் இல்லை யெனில் வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்''‘’ என்கிறார்கள் பாம் ஸ்குவாட் பிரிவினர்.