நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' -மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய இந்த தமிழ் வாழ்த்துப் பாடலைக் கேட்டு உணர்ச்சி பெறாத உள்ளங்கள் இருக்க முடியாது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சில கல்வி நிறுவனங்கள் வேண்டுமென்றே இதைத் தவிர்த்து வந்தன. ஒருசில வடமொழிப் பித்தர்கள், அந்தப் பாடலை அவமதித்து தமிழ் ஆர்வலர்களின் மனதைப் புண்படுத்தினர்.
இதுபோன்ற அடாவடிகளுக்கு முடிவுகட்டும் வகையில், இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், சுந்தரனாரின் அந்தப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக, அறிவித்து தமிழ் மக்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இது குறித்து சுந்தரனார் குடும்பம் என்ன நினைக்கிறது என்பதை அறிய, மனோன்மணியம் சுந்தரனாரின் பேரனான முனைவர் மோதிலால் நேருவை நாம் சந்தித்தோம். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் அவர், கேரள விவசாய பல்கலைக் கழகத்தின் ஒய்வு பெற்ற பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்கீரன்: மனோன்மணியம் சுந்தரனார் மலையாளி என்றும், அவர் எழுதிய பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடலாமா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்களே?”
மோதிலால் நேரு: மனோன்மணியம் சுந்தரனா?? தமிழரல்ல என்பவர்களுக்கு நான் விளக்கம அளித்தே ஆகவேண்டும். இன்றைய கேரளாவில் உள்ள ஆலப்புழையில் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்ததால், அவரை மலையாளி என்று சொல்லுகிறார்கள். முன்னர் மலையாள நாடு என்று சொல்லப்படும் கேரளா, சேர நாடாகத்தானே இருந்தது. அப்படியானால் சேர மன்னர்கள் தமிழர்கள் இல்லையா?
நக்கீரன்: சிலர் தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் குறைத்து மதிப்பிட்டிருக் கிறார்களே?
மோதிலால் நேரு: ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான முனைவர் பெர்ணல், முனைவர் நெல்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், தமிழர் நாகரீகம் என்ற ஒரு நாகரிகம் இருந்தது என்ற உண்மையை மறைத்ததுடன், நமது இலக்கியங்களின் சிறப்பையும், இயற்றப்பட்ட காலத்தையும் குறைவாக மதிப்பிட்டுத் தங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் உலகளவில் ஆவணப்படுத்தி விட்டார்கள். இதனை மறுத்து தனது ஆராய்ச்சி முடிவுகளை தக்க சான்றுகளுடன், அவர்களது மொழியான ஆங்கிலத்திலேயே எழுதி, தமிழின் தொன்மையையும் தமிழர்களின் நாகரிகத்தையும் உலகத்திற்குப் பறைசாற்றியவர் சுந்தரனார்தான்.
நக்கீரன்: "திராவிடம்' என்ற சொல், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தில் இருப்பதால், அதை சிலர், தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்க முடியாது என்கிறார்களே?
மோதிலால் நேரு: கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை என்பதால்தான் எல்லா மொழிகளையும் உள்ளடக்கி, கிரீடமாகத் தமிழ் இருப்பதை உணர்த்தவே "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்று பாடினார் சுந்தரனார். மற்ற மொழிக்காரர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. காரணம், அவர்களின் மொழிக்குக் கருப்பையாக தமிழ்தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளுவதில் அவர்களுக்கு சங்கடமும் மனத் தடையும் இருக்கிறது. தமிழும் அதன் வழியாக உருவான பிற மொழிகளும் கிளைத்த நாடு என்பதால் இதைத் திராவிட நல்நாடு என்று சுந்தரனார் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நக்கீரன்: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரும், இன்றைய முதல்வர் ஸ்டாலினும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கொண்டாடியது பற்றி?
மோதிலால் நேரு: அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் 1970 மார்ச் 11-ம் தேதி நடந்த திரைப்படத்துறை சாதனையாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில்தான், தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறைவணக்கம் பாடுவதுபோல், தமிழ்த்தாய் வாழ்த்தாக ’நீராரும் கடலுடுத்த’ பாடல் இருக்கும் என்று என்று அறிவித்தார். இந்த முடிவை அவர் எடுத்தபோது கலைஞர் சந்தித்த சவால்கள் அதிகம். அப்போது, கலைஞருக்கு ஆதரவாக பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் குரல்கொடுத்த போது, "தமிழினத்தின் மொழி வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணியம் பாடலைப் பாட வேண்டும்' என்ற கருத்து, பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் குழுவில் தீர்மானமாக வந்தது. அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தை விட தமிழுக்கு உயர்வு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் சமஸ்கிருத பற்றாளர்கள் சிலர் எதிர்க்கின்றனர்’ என்றார்.
சிலம்புச் செல்வர் மா.பொ.சி.யோ "இது தமிழ்மொழிப் பற்றுடைய அனைவருக்கும் கரும்பாக இனித்திடும்போது, ஏனோ சிலருக்கு மட்டும் வேம்பாக கசக்கிறது. "அரசு விழாக் களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் என கலைஞர் கூறுவதில் என்ன தவறு?' என்று கேட்டதுடன்.... "மொழியை தெய்வமாக வழிபடுவது பிழையெனில், அந்தப் பிழையை முதலில் செய்த பெருமை வடமொழி யாளர்களுக்கே உண்டு' என்று கலைஞருக்கு ஆதரவாகவே முழக்கமிட்டார்.
இப்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருபடி மேலே போய், "தமிழக அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும்' என்று அறிவித்தது, கலைஞர் எடுத்த முடிவுக்கு மகுடம் சூட்டியது போன்றது. இந்தநேரத்தில், மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலுக்கு பெருமை சேர்த்த கலைஞருக்கும் அவர் வழியில் ஆட்சி செய்துவரும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சுந்தரனார் குடும்பத்தின் சார்பில் நன்றியைக் கூறிக்கொள்கிறோம்