கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரிசோதனைகளை அரசாங்கம் மட்டுமே செய்துவந்தால் இதனை விரைவுபடுத்த முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த நிறுவனங்கள், தங்களது பரிசோதனை முடிவுகளை, ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தில் பதிவேற்று வது வழக்கம்.
இப்படி மெட் ஆல் என்ற தனியார் கொரோனா பரிசோதனை மையம் ஏற்றியுள்ள பரிசோதனை விவரங்களில் இருந்த குளறுபடி, மோசடியை தமிழக பொது சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில் உள்ள தகவலின்படி, இந்த நிறுவனமானது, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகளை, தமிழ்நாட்டிலுள்ள கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட மாதிரிகளாகக் கணக்கில் காட்டியுள்ளது. மே மாதம் 19, 20 தேதிகளில், "கொரோனா நெகடிவ்' என்று வந்த 4,000 முடிவுகளை, "கொரோனா பாசிடிவ்' என்றும் மாற்றியமைத்து ஐ.சி.எம்.ஆர். இணைய தளத்தில் பதிந்துள்ளது.
இப்படி மாற்றிப் பதிவதால், கொல்கத்தாவின் கணக்கீட்டிலும், தமிழ்நாட்டின் கணக்கீட்டிலும் தவறு நேர்வது மட்டுமின்றி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவருவதான அச்சத்தை ஏற்படுத்தும்.
இது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயல்பாடுகளை பாதிப்பதோடு, பொதுமக்களுக்கும், கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்பு உணர் வோடு சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக் கும் அச்சத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தக் கூடும்.
தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்று இருப்ப தாகக் காட்டியிருப்பதில் அந்த ஆய்வகத்துக்கும், சில மருத்துவமனைகளுக்கும் விதிமுறைகளுக்கு முரணாகத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமென்று பார்க்கப்படுகிறது.
எனவே இந்த மெட்ஆல் பரிசோதனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இங்கு நடந்துள்ள மோசடி குறித்து, இந்த ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர், மூன்று நாட்களுக்குள் இதுதொடர்பான விரிவான அறிக்கையை பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. மிகவும் இக்கட்டான சூழலில் பதவியேற்றுள்ள தமிழக அரசின் தீவிர செயல்பாட்டைச் சிதைக்கும் இதுபோன்ற நிறுவனங்களின் செயல்பாட்டுக்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தினால், முந்தைய அரசிலேயே இவர்களின் மோசடிகள் குறித்த விவரங்களும் கிடைக்கக்கூடும்.
-தெ.சு.கவுதமன்