மத்தியில் நடந்தேறியுள்ள அமைச்சரவை மாற்றத்தில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கூட்டணியி லுள்ள அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கு மென்று எதிர்பார்த்து, பொய்த்துப்போனாலும் கொஞ்சம்கூட எதிர்ப்பைக் காட்டவேயில்லை. ஆனால் தமிழ்நாட்டைப்போல் வட மாநில அரசியல் இல்லை.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வின் ஆதரவுக்கட்சியாக உள்ள நிஷத் பார்ட்டி என்ற கட்சி, நிஷத் என்ற இனத்தைச் சேர்ந்த மக்களுக்காகச் செயல்பட்டுவருகிறது. இக்கட்சித் தலைவர் சஞ்சய் நிஷத், அவரது மகன் பிரவீன் நிஷத். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றதும், கோரக்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பிரவீன் நிஷத் வெற்றிபெற்று எம்.பி.யானார். அந்த கட்சிக்கு இருக்கும் ஒரேயொரு எம்.பி. அவர்தான். அவரைத்தான் அமைச்சராக்குவதற்காக காய் நகர்த்தினார் அவரது அப்பா. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்த தால், தனது அதிருப்தியை பா.ஜ.க. தலைவர் நட்டாவிடம் சஞ்சய் நிஷத் வெளிப்படுத்தினார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சிகள் எங்கள் இன மக்களை ஏமாற்றியதுபோல பா.ஜ.கவும் ஏமாற்றியுள்ளதாக குமுறியுள்ளார்.
அடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க.வில் இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளராகவும், எம்.பி.யாகவும் உள்ள சௌமித்ரகான் என்பவர், நடந்துமுடிந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தனக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைப்பதற்காக டெல்லி தலைவர் களோடு பேசியிருக் கிறார். எனவே தனக்கு அதுகுறித்து அழைப்பு வருமென்று மதியம் 1 மணிவரை எதிர்பார்த் திருந்தவர், இனிமேல் தனக்கு அமைச்சராகும் வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டு உடனடியாக தனது பா.ஜ.க. இளைஞர் அணிப் பதவியை ராஜினாமா செய்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
இவர் பிஸ்னு பூர் தொகுதி எம்.பி.யாக இருந்துவருபவர். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது தொகுதிக்குட்பட்ட 7 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு 6 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதையடுத்து, அமைச்சர் பதவியைக் குறிவைத்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எனவே தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென்று எதிர்பார்த்துக் காத்திருந்து வெறுத்துப்போய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்க, மேலிட சமாதானத்தால் அந்த முடிவு மாறி யுள்ளது.
இதற்கிடையே, அமைச்சரவை மாற்றத்தை பதவி இழந்த தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார், தன் கடைசி பணி நாளில் 120 உயரதிகாரிகளை ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பர் செய்திருக்கும் விவகாரம் தலைநகரை கிறுகிறுக்க வைத்துள்ளது.
-ஆதவன்