பூத் வாரியாக வாக்குப் பதிவு சதவிகிதத்தை பதிவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை ஏ.டி.ஆர். அமைப்பு அணுகிய வழக்கில், பொதுவெளியில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும் என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

EVM

ஆனால், நியாயமான தேர்தல் வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்களின் குரல்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

Advertisment

மேற்கு வங்கத்தின் ரகுநாத்பூரிலுள்ள வாக்குச்சாவடிக்கு வந்த 5 வாக்குப் பதிவு எந்திரங்களில் பா.ஜ.க. என்று எழுதி டேக் செய்யப்பட்ட கார்டுகள் தொங்கிக்கொண்டிருந்தது சர்ச்சையானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ், உடனடியாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேசத்திலோ, சம்பல் தொகுதியில் வாக்குகள் குறைவாகப் பதிவாகும் வண்ணம் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் பதட்டத்தை உருவாக்க, காவலர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கச் சொல்- பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த புவனேஷ்குமார் என்பவர் பேசும் காணொலியை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காணொலியில் குறிப்பிட்டதுபோல சம்பல் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தபோது பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த பதினொரு தினங்களுக்குப் பின் ஏப்ரல் 24 அன்று வாக்குப் பதிவின் இறுதி சதவிகிதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். பல மாநிலங்களில் இந்த வாக்கு சதவிகிதம் மூன்று, நான்கு சதவிகிதம் அதிகரித்திருந்தது சர்ச்சையானது. உதாரணத்துக்கு, ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட சதவிகிதம் 76.5 என்று இருந்தது. இறுதியாக அது 80.66 சதவிகிதமாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 4.16 சதவிகித அதிகரிப்பு.

EVM

ஒடிஸாவை எடுத்துக்கொண்டால், முதலில் அறிவித்த வாக்கு எண்ணிக்கைக்கும் பிறகு அறிவித்த இறுதி வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் சராசரியாக தொகுதிக்கு 1,10,000 வாக்குகள் அதிகரித்துள்ளன. தெலுங்கானாவில் இது இன்னும் அதிகம். ஒரு மக்களவைத் தொகுதிக்கு சராசரியாக 3.1 லட்சம் வாக்குகள் அதிகரித்துள்ளன.

மே 20ல் ஒடிஸாவில் பர்கார்க், சுந்தர்கார்க், போலங்கீர், காந்தமால், அஸ்கா ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது 67.59 சதவிகிதம். மே 23ஆம் தேதி இறுதி வாக்குப் பதிவு சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது 73.5 சதவிகிதம். அதாவது 5.91 சதவிகித வித்தியாசம். வாக்குக் கணக்கில் சொல்லவேண்டுமென்றால், இந்த ஐந்து தொகுதிகளில் 4 லட்சத்து 70,000 வாக்குகள் அதிகரித்திருக்கின்றன.

ஆந்திரப்பிரதேசத்தில்தான், ஒட்டுமொத்தமாக 4.16 சதவிகிதம் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது என்றாலும், வாக்காகக் கணக்கிட்டால் அது 17.2 லட்சம் வாக்குகள்.

தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, ராஜஸ்தான் மாநிலங்கள் மட்டும் வாக்குப் பதிவு நடந்த 48 மணி நேரத்தில் இந்த விவரத்தை தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் ஏற்றிவிட்டன. மத்தியப்பிரதேசத்தில் முதல் கட்டத் தேர்தலில் விவரங்கள் உடனுக்குடனே வலைத்தளத்தில் ஏற்றப்பட்டாலும். அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் அப்படி நடக்கவில்லை.

தொடர்ந்து சமூக நல ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நெருக்கிய நிலையில் மே 25ஆம் தேதி, இதுவரை நடந்த 5 கட்டத் தேர்தல்களுக்கான இறுதி வாக்குப் பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி இந்தஐந்து கட்டத்தேர்தலில் 50 கோடியே 70 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்திடம் வழக்கத்துக்கு மாறான விகிதத்தில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது குறித்துப் பதிலில்லை.

2019 தேர்தலை எடுத்துக்கொண்டால் முதலில் அறிவிக்கப்பட்ட தோராய வாக்குப் பதிவு சதவிகிதமே தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் நீடித்தது. அப்போது எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் இறுதி வாக்குப் பதிவு சதவிகிதத்தை பதிவுசெய்யவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இதே நிலையே நீடித்தது.

கடந்த முறை தேர்தல் முடிவுகள் வந்தபோது, பல தொகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரத்தில் எண்ணி அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும், தேர்தல் ஆணையம் வலைத்தளத்தில் பதிவிட்ட தோராய வாக்குப் பதிவுகளுக்கும் வித்தியாசம் காணப்பட்டது சர்ச்சையானது. சரியாகச் சொல்லவேண்டுமானால் வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வாக்குகளைவிட, வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் அதிகமாகக் காணப்பட்டன.

கடந்தமுறையும் ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துப்போனது. இந்த முறையும் படிவம் 17சியை தேர்தல் ஆணையம் பதிவிடச் சொல்லிஉச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் தலையிடவிரும்பவில்லை என உச்சநீதிமன்றம் விலகிக்கொண்டுள்ளது.

தேர்தல் நடைமுறையில், வாக்குப் பதிவில் ஏற்படும் சந்தேகங்கள் அதிகரிப்பது வாக்குப் பதிவு சதவிகிதம் குறையவும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறையவுமே வழிவகுக்கும்.