நக்கீரனின் தொடர்ச்சியான புலனாய்வும் -காவல்துறையில் அளித்த புகாரின் பேரிலான சட்ட நடவடிக்கையாலும், சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் ரெசிடென்சியல் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு காவல்துறை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளையும் அதில் நக்கீரன் காட்டிய அக்கறையையும் டைம் டூ டைம் ரிப்போர்ட்டாக கடந்த இதழில் கொடுத்திருந்தோம்.
காஞ்சிபுரம் சாரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா தலைமையில் ஆன தனிப்படையில் பொன்னேரி டி.எஸ்.பி கல்பனாதத் மற்றும் செங்கல்பட்டு டி.எஸ்.பி மணிமேகலை மற்றும் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, அஞ்சாலட்சுமி குழுவில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் மற்று இந்த வழக்கில் தப்பியோடிய சிவசங்கர் பாபாவை கண்டுபிடிக்க தொழில்நுட்ப வல்லுனரான காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. டாக்டர் சுதாகரனின் முயற்சியால் சிவசங்கர் இருக்கும் இடம் மற்றும் அவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர் தனிப்படை போலீசார்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதும் விசாரணை மேலும் தீவிரமானது. மீண்டும் மாணவிகளிடம் ரகசிய விசாரணை செய்தது. பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் தீவிரமடைந்து அதன் ஆசிரியர் ராஜ கோபாலன் கைது செய்யப்பட்ட பின் சமூக வலைத்தளத்தில் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவின் லீலைகள் பற்றிய புகார்களையும் அவர் செய்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி வாய்ஸ் நோட் மற்றும் வீடியோக்களும் பரவ ஆரம்பித்தது. இதைக் கண்ட சிவசங்கர் பாபா, கடந்த மே 28-ஆம் தேதி தனியார் விமான நிறு வனத்தில் வேலை செய்யும் பாபாவின் பக்தர் பழனிகுமாரின் உதவியோடு டெல்லி சென்று, பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி என அட்மிட்டானார்.
குழந்தைகள் நல ஆணையத்தின் விசாரணையின்போதும் சிவசங்கர் பாபா தரப்பினர் நெஞ்சு வலி என்ற காரணத்தை கூறி தப்பித்தனர். நாம் அந்த மருத்துவமனையில் விசாரித்தபோது, அந்த பெயரில் சிகிச்சையில் இருந்த சிவசங்கரன் என்பவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக தெரி வித்தனர் அதை நாம் பதிவு செய்துகொண்டோம்.
போலீசின் தேடுதல் வேட்டை, கைது நட வடிக்கை எனத் தொடர்ந்து கொண்டிருந்தபோது, சற்றும் சளைக்காத சிவசங்கர் பாபா தரப்போ, கடந்த சில நாட்களில் புதிய புதிய யூ-டியூப் சேனல்களை துவங்கி சிவசங்கர் பாபா நல்லவர், வல்லவர் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். அதிலும் ஒருபடி மேலே சென்று ஒரு சேனலில் துணிந்து வெளிவந்து, அந்தப் பள்ளியில் நடந்த அவலத்தை தைரியமாக பேட்டி கொடுத்த அந்த மாணவிகளைப் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளனர், இது தொடர்பாக இருவரும் போலீசில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க சுஷில் ஹரி பள்ளியில் சோதனை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சில ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படங்கள், வீடியோக்கள், பாலியல் தொடர்பு சம்பந்தமான பிற ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கும் நிலையில்... சிவசங்கர் பாபாவைக் கஸ்டடி விசாரணைக்கு கொண்டு வரும்போது, அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்று, அவர் முன்னிலை யிலேயே சோதனை நடத்தி மேலும் பல ஆதாரங் களைக் கைப்பற்றும் திட்டமும் உள்ளது.
-அரவிந்த்
__________________
பள்ளியை மூட பரிந்துரை
பாலியல் குற்றம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையிடம் நக்கீரன் அளித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியரின் வாக்குமூலமும் வலு சேர்த்துள்ளது. இந்நிலையில், பாபாவை காப்பாற்றுவதற்காக சி.எம். செல், தலைமைச் செயலாளர், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு ஆயிரக்கணக்கில் இ-மெயில் அனுப்பும் முயற்சியை சிவசங்கர் பாபாவை சுற்றியிருந்த கும்பல் தொடங்கியுள்ளது. அத்துடன், பாலியல் கொடூரத்திற்குள்ளான மாணவிகளையே குற்றம்சாட்டியும் விமர்சித்தும் காணொலிகளைப் பரப்பும் வேலை யையும் இந்தக் கும்பல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளதை யும், அவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டிருப்பதையும் உறுதிபடுத்தி, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை மூடி, அதன் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு மாவட்ட குழந்தைகள்நலக் குழுமம் பரிந்துரைத்துள்ளது.