கொடநாடு விவகாரத்தில் விசாரிக்க வேண்டியது ஒரு கொலையை மட்டுமல்ல... ஐந்து மரணங்களையும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது காவல்துறைக்கு தெம்பூட்டியுள்ளது.
முதலில் சிக்கியவர் கொடநாடு மேனேஜர் நடராஜன். அவர், கொள்ளை சம்பவத்துக்குப் பின் விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகளும் கொள்ளையடித்தார்கள் எனக் குற்றம்சாட்டினார். ஆனால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை பற்றி கேட்டதும் மௌன சாமியாரானார்.
ஆரம்பத்தில் வெறும் 4000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த தினேஷ், படிப்படியாக உயர்ந்து நடராஜனின் வலதுகரமாக ஐம்பதாயிரம் சம்பளம் பெறும் அளவுக்கு உயர்ந்திருக் கிறார். கொள்ளைச் சம்பவம் நடந்தபோது தினேஷ் அங்கு இல்லை. கண் புரை அறுவை சிகிச்சை ஓய்வுக்குப் பிறகு கொடநாடு சென்ற தினேஷ், நடராஜனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
மின்சாரம் கட் ஆவதற்கும், சி.சி.டி.வி. ஆஃப் ஆவதற்கும் கொடநாட்டில் வாய்ப்பே இல்லை. மின் இணைப்பு கட் ஆனால் ஜெனரேட்டர் ஆன் ஆகும். சி.சி.டி.வி.க்கள் மின் இணைப்பு இல்லாவிட்டாலும் இயங்கும் பேட்டரி பேக்அப் கொண்டவை. எப்படி இவை இயங்காமல் போனது என தினேஷ் கேட்ட கேள்விக்கு நடராஜனிடம் பதில் இல்லை. அதற்கு மாறாக, நடப்பது சசிகலா ஆதரவுடனான எடப்பாடி ஆட்சி. மின்இணைப்பையும் சி.சி.டி.வி. இணைப் பையும் துண்டிக்க உதவியதாக உன்மீது குற்றம்சாட்டுவேன் என நடராஜன், தினேஷை மிரட்டியிருக்கிறார். நடராஜனின் மிரட்டலில் மனம் சிதைந்த தினேஷுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுகிறது. அந்த பயமே அவர் உயிரைப் பறித்துவிட்டது என மற்ற வேலைக்காரர்கள் அளித்துள்ள சாட்சியம், நடராஜனை குற்றவாளியாக்கி யுள்ளது.
எடப்பாடி மற்றும் சஜீவன் ஆகியோரோடு சேர்ந்து கொள்ளைக் கும்பல் கொள்ளையடிக்க மின்சாரத்தையும் சி.டி.டி.வி.யையும் நிறுத்தியது நடராஜன்தான் என்கிற முடிவுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். காவல்துறையினரை வெறுப்பேற்றும் வகையில் நடந்துகொண்ட நடராஜனை கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
அடுத்தபடியாக இந்த வழக்கில் பத்திரப் பதிவுத்துறையைச் சேர்ந்த செல்வகுமார் பெயர் அடிபடுகிறது. இவரின் சொத்து மதிப்பு மட்டும் 600 கோடி ரூபாய் என்கிறார்கள். இவரும் கொடநாடு மேனேஜரான நடராஜனும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பு சசிகலாவின் உறவினரான ராவணனுக்கு நெருக்கமாக இருந்த செல்வகுமார், கொடநாடு கொள்ளை முடிந்ததும் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவராகி விட்டார்.
கொடநாடு பங்களாவில்தான் ஓ.பி.எஸ்., எடப்பாடி, நத்தம், வைத்தியலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோரிடமிருந்து சசிகலா கைப்பற்றிய சொத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் இருக்கின்றன என எடப்பாடி முதல்வராகி, சசிகலா சிறைக்குப் போனதும் முதல் தகவல் கொடுத்ததே செல்வகுமார்தான். அவர்தான் இந்த அமைச்சர் களின் சொத்துக்களை சசிகலாவின் உறவினர்கள் பெயருக்கு மாற்றிய வேலையை சசிகலா சொல்படி செய்து, டாக்குமெண்ட்டுகளை கொடநாட்டில் பாதுகாப்பாக வைத்தவர். இந்த விவகாரங்களை மேனேஜர் நடராஜன் மூலம் தெரிந்துகொண்டு வேலுமணி மூலம் எடப்பாடிக்கு சொல்கிறார்.
எடப்பாடி, வேலுமணியின் மூலம் கனகராஜை ஆபரேட் செய்கிறார். வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மூலம் நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு கொடநாட்டில் கிடைத்த ஆவணங்கள் அன்பரசன் மூலம் செல்வகுமாரை சென்றடைகிறது. செல்வகுமார் அவற்றை மறுபடியும் முந்தைய பதிவுகளை ரத்து செய்து அமைச்சர்களின் பினாமி பெயருக்கு மாற்று கிறார்.
இவை எல்லாமும் கொடநாடு மேனேஜர் நடராஜனுக்குத் தெரியும். கொடநாடு கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு வேலுமணிக்கு நெருக்கமான செல்வகுமார், வேலு மணியின் பத்திரப்பதிவு உதவியாளராக மாறுகிறார். தமிழகம் முழுவதுமுள்ள பினாமிகளுக்குப் பத்திரப் பதிவு செய்து தருகிறார். அதில்தான், 600 கோடி சொத்துக்கு அதிபதியாகியுள்ளார் செல்வகுமார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரே.
கொடநாடு விவகாரத்தில், நடராஜன் மூலம் செல்வகுமாரின் பங்கை அறிந்து, செல்வகுமாரையும் மேற்கு மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்ட பதிவாளர்களையும் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது என கொடநாடு கொள்ளை வழக்கின் உண்மையான சதித் திட்டத்தை விளக்குகிறார்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள். விசாரணை, சஸ்பென்ஷன், கைது என நட வடிக்கை தொடரும் என்கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள்.
இதுதவிர, காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் சஜீவன் பெயர் வலுவாக அடிபடுகிறது. சஜீவனின் தம்பி சுனில், கோத்தகிரியில் போலீசார் மடக்கிப் பிடித்த கொலையாளிகளை தப்பிக்க வைத்துள்ளார். அதற்கு எந்த போலீஸ் அதிகாரி உதவினார், அவருக்கு முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்ததா? கனகராஜின் மர்ம மரணம், சயானின் விபத்து என அனைத்து விவரங்களையும் ஆராயும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீமின் அசைவுகளை அ.தி.மு.க. ஆதரவு போலீஸ்துறை தயவுடன் நொடிக்கு நொடி அப்டேட் வாங்கும் வேலையையும் எடப்பாடியும் முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் செய்கிறார்கள் என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்..
-ஆகாஷ்