அ.தி.மு.க. அரசியலில் முக்கிய திருப்பமாக, மறுபடியும் சசிகலா அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதற்கு முக்கிய காரணம், டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதல் முற்றியது தான் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
சசிகலா- டி.டி.வி. மோதல் என்பது பழைய கதை. சசிகலா- டி.டி.வி.யை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சிறைக்குச் சென்றபிறகு, முழுவதுமாக சசி கலாவை ஏமாற்றும் வேலையைத்தான் அவர் செய்து வந்தார். ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் கோடிக்கணக்கான ரூபாய் சசிகலா விடமிருந்து வாங்கிவிட்டு அதை செலவு செய்யாமல் கட்சிக் காரர்களை செலவிடச் செய்தார் டி.டி.வி.தினகரன்.
அந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வகையில் சுமார் 11 கோடி கடனாளியானார் மறைந்த எம்.எல்.ஏ. வெற்றிவேல். அவரது வீட்டை தினகரனின் உதவி யாளர் ஜனா சமீபத்தில் பினாமி பெயரில் வாங்கியுள்ளார். அத்துடன் ஜனா, மீஞ்சூரில் 20 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் செய்துவருகிறார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் மட்டுமல்ல, அதன்பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் சசிகலா அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு செலவு செய்யக் கொடுத்த தொகை ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டும்.
இந்தப் பணம் எதையும் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கா மல், தனது உதவியாளர் ஜனா மூலம் சொத்துக்களாக வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். சமீபத்தில் அ.ம.மு.க.விலிருந்து தினகரனுக்கு மிக நெருக்கமான சேலஞ்சர் துரை என்பவர் நீக்கப்பட்டார். சசிகலாவின் விசுவாசியான சேலஞ்சர் துரை சசிகலாவை சந்தித்தார். சந்தித்து, இத்தனை ஆண்டு காலம் தினகரன் தனது சுகபோக வாழ்க்கைக்காகத் தான் நேரம் செலவிட்டுள்ளார். அ.ம.மு.க. என்பது உண்மையில் அவரது மனைவி அனுராதா மற்றும் உதவியாளர் ஜனா ஆகியோர் நடத்தும் கட்சி. அந்தக் கட்சிக்கு தலைவர் டி.டி.வி.தினகரன் இல்லை என அந்தக் கட்சியில் நடக்கும் விவகாரங்களை சசிகலாவிடம் புட்டு, புட்டு வைத்துள்ளார்.
அவரிடம் பேசிய சசிகலா "எனக்கெல்லாம் தெரியும். என் அரசியல் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக்கியதுதான். தினகரனின் செயல்பாடுகளினால் நான் எடப்பாடியையும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் இழந்தேன். எடப்பாடியை பழிவாங்குவேன் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை பிரித்து வெறுப்பேற்றினார் தினகரன். தொடர்ந்து எடப்பாடி எதிர்ப்பு நடவடிக்கைகளினால் பா.ஜ.க.வையும் வேகமாகப் பகைத்துக்கொண்டார். அதன்பிறகு அ.தி.மு.க. தன் வசம் இருப்பதாக எனக்கு பொய் யான பிம்பத்தைக் காட்டினார். எனது சொந்த சகோதரர் திவாகரனுக்கும் எனக்கும் இடையே பகையை மூட்டினார். எடப்பாடி, திவாகரனின் ஆதரவாளர். அவங்க இருவரும் சேர்ந்து தினகர னுக்கு எதிராக செயல்பட்டனர். நான் சிறையை விட்டு வெளியே வரும்பொழுது நேரடியாக அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு செல்லலாம் என்று சொன்னேன். அங்கு நீங்கள் போக வேண் டாம். உங்களை அ.தி.மு.க. மந்திரிகளும் எம்.எல்.ஏ.க் களும் வரவேற்க காத்திருக்கிறார்கள் என எனக்கு ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கிக் காட்டினார்.
எனது சொத்துகள் அனைத்தும் தினகரன் டாக்டர் சிவகுமார், அனுராதா மற்றும் அவர் களது உறவினர்களின் கையில்தான் இருக்கிறது. அந்த சொத்துக்களை கொஞ்சம் சொஞ்சமாக டி.டி.வி.தினகரன் எனக்குத் தெரியாமலேயே விற்றுக்கொண்டிருக்கிறார். அவரது பினாமிகள் விற்கும் இந்த சொத்துக்கள் பற்றி நான் கேட்டால் மத்திய பா.ஜ.க. அரசு உங்கள் சொத்துக்களை முடக்கப் பார்க்கிறது. அவர்கள் கையில் சிக்காமல் நாங்கள் விற்றுவருகிறோம் என்கிறார்கள்.
அதில் வரும் பணம் எனது கைக்கு வந்து சேரவில்லை. சுகேஷ் சந்திரசேகர் மூலமாக பா.ஜ.க. தினகரனை மிரட்டியது. சிறைக்கு நிரந்தரமாகச் சென்றுவிடும் சூழல் ஏற்பட்டதால் பா.ஜ.க.வின் காலில் விழுந்தார் தினகரன். இப்பொழுது ஒருபக்கம் பா.ஜ.க., இன்னொரு பக்கம் தனது சம்பந்தியான கிருஷ்ணசாமி வாண்டையார் மூலம் காங்கிரஸ் என இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார் என்று சேலஞ்சர் துரையிடம் சசிகலா வருத்தப்பட்டதாக கோவை வட்டார அ.ம.மு.க. நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
"டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல... ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா, ஜெயாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இருவருக்குமிடையே சரியான பேச்சுவார்த்தை இல்லையென சாட்சியமளித்த கிருஷ்ணப்பிரியா மற்றும் அவரது சகோதரர் விவேக் ஆகிய இளவரசியின் வாரிசுகளும் சசிகலாவை வெறுப்படையச் செய்துள்ளனர்.
விவேக் தனது தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால் ஏகப்பட்ட நஷ்டத்தையும் கெட்ட பேரையும் உருவாக்குவதாக சசிகலா கவலைப்படுகிறார். விவேக்கின் செயல்பாடுகளால் வெறுத்துப்போன அவரது மனைவி கீர்த்தனா தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவேக்கின் செயல்பாடுகள் சரியில்லாததால், அவர் வசமிருந்த ஜாஸ் என்கிற சினிமா தியேட் டரை சசிகலா விற்றுவிட்டார். இந்த சூழ்நிலையில், சசிகலாவுக்கு தற்பொழுது நெருக்கமாகச் செயல்பட்டு வருபவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான். அவர் தினகரனின் குடும்பத்தாரின் சதிச் செயல்களை சசிகலாவுக்கு தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். அதனால் தினகரன் மற்றும் விவேக் ஆகியோர் திவாகரனிடம் மறைமுகமாக மோதி வருகிறார்கள்.
இந்நிலையில், திவாகரனின் சம்பந்தியும் போலீஸ் அதிகாரியுமான ஜெயச்சந்திரன், சசிகலாவுக்காக ராமஜெயத்தை கொலை செய்தார் என்கிற பாணியில் ராமஜெயம் கொலைவழக்கு வேகமெடுத்துள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்படும்பொழுது ஜெயச்சந்திரன் திவாகரனின் சம்பந்தியாகவில்லை என்றாலும், சாமிரவி உட்பட 13 ரௌடிகளிடம் மேற்கொள்ளப் படும் விசாரணை சசிகலா மற்றும் ஜெயச்சந்திரனை நோக்கியே நகருகிறது.
இந்த குற்றவாளிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வுள்ளது. அதற்கான மருத்துவப் பரிசோத னைகள் முடிந்துவிட்டன. உண்மை கண்டறியும் சோதனையில் சசிகலா மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கும் ராம ஜெயம் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது காவல்துறையால் முன்னெடுக்கப்படக்கூடிய கேள்வியாக உள்ளது. இது சசிகலாவை கவலை யடையச் செய்துள்ளது. இந்நிலையில், ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு ஆறுதலாக இருக்கிறார். ஓ.பி.எஸ். சார்பில் பொதுக்குழு நடத்தப்போவதாக வந்த அறிவிப்பின் பின்னணியில் சசிகலா இருக்கிறார்.
சசிகலாவை ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்வது, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தருவது, அவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது அந்த அணி 20 தொகுதி களிலும் பா.ஜ.க. 20 தொகுதிகளிலும் போட்டியிடுவது, எடப்பாடியை ரெய்டு நடவடிக்கைகளில் சிக்க வைப்பது, நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. மூலமாக எடப்பாடியை மத்திய அரசு கைது செய்வது, எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் மற்றும் அவரது மகன் மிதுன், அவரது பினாமிகளான காண்ட்ராக்டர்கள் ஆகியோரை நடவடிக்கைக் குள்ளாக்குவது என ஓ.பி.எஸ். ஒரு ஆக்ஷன் திட்டத்தை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் இணைந்த அணி ஒன்றை எடப்பாடியை ஏற்றுக் கொள்ளச் செய்வது இல்லையென்றால் ஆக்ஷன்தான் என மத்திய அரசு மூலமாக மிரட்டுவது என ஓ.பி.எஸ். அணி திட்டம் போட்டு செயலாற்றிவருகிறது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், நான் சிறைக்குப் போகத் தயார். ஓ.பி.எஸ்.ஸையும் சசிகலாவையும் தினகர னையும் அ.தி.மு.க. அணிக்குள் நான் ஏற்க மாட் டேன் என அ.தி.மு.க. தலைவர்களிடம் வீராவேச மாக பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.
இந்நிலையில், அ.ம.மு.க.வில் இணைந்துவிடு மாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து காய் நகர்த்திவருகிறார் தினகரன். தினகரனுடன் இணை வதை விட ஓ.பி.எஸ். அணியில் இணைவது சிறந்தது என நினைக் கிறார் சசிகலா.
ஓ.பி.எஸ்.ஸின் இந்த முயற்சிகள் வெற்றிபெற்றாலும் ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால் அ.தி.முக.வின் ஒற்றுமை மிகக்கடுமையாக பாதிக்கப்படும். அப்படி ஒரு சூழல் வந்தால், மறுபடி யும் அரசியல் துறவறம் என்கிற அஸ்திரத்தை சசி கலா கையில் எடுப்பார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆக்டிவ்வாக இருந்த சசிகலாவை "போதுமடா இந்த அரசியல்' என்கிற நிலைக்கு தின கரன் கொண்டுவந்துவிட்டார் என வருத்தத்துடன் சொல்கிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள்.
___________
இறுதிச்சுற்று! மறைந்தார் ஆரூர்தாஸ்!
பிரபல சினிமா கதை. வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடல்நலக் குறைவால் நவம்பர் 20-ஆம் தேதி மரணமடைந்தார். திருவாரூரைச் சொந்த ஊராகக் கொண்ட ஆரூர்தாஸ், சினிமா ஆசையால் சென்னை வந்தவர், "தெய்வம்' படம் தொடங்கி கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு கதை வசனம் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர். எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி தற்போதைய நாயகர்கள் படங்கள் வரை கதை, வசனம் எழுதிவந்த அவர், மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்தவர். 91 வயதான ஆரூர்தாஸ் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஆரூர்தாஸுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். இவரது மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் 21-11-2022 திங்களன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் குறிப்பும் வெளியிட்டு, அதில் குடும்பத்தினருக்கும், கலையுல கினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-மணி