கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசு. "முன்பு அ.தி.மு.க., தொடர்ச்சியாக கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தபோது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சனைகளைக் கேட்டார். இப்போது அவரே முதலமைச்சராக இருக்கும் நிலையில் கொரோனாவை காரணம்காட்டி கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது சரியா?' என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016-ல் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் அ.தி.மு.க.வின் தயக்கத்தால் 2019 டிசம்பரில்தான் நடந்தது. அதிலும் சில காரணங்களால் மாவட்ட சேர்மன், துணைசேர்மன், 26 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், 41 துணைத்தலைவர் உட்பட 335 இடங்களுக்கு தேர்தல் நடத்தவில்லை. 2020 மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி 5 ஒன்றியக்குழு தலைவர், 13 துணைத்தலைவர், 31 கிராம ஊராட்சி துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தவில்லை. இதனால் அந்த ஒன்றியங்கள் முடங்கியுள்ளன.
முடக்கப்பட்ட ஒன்றியம்-1
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 20 கவுன்சிலர்கள். தி.மு.க. 8, பா.ம.க. 4, அ.தி.மு.க. 3, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 4 பேர் என தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சில ரானார்கள். இதில் பா.ம.க. கவுன்சிலர் உஷாராணி தி.மு.க.வுக்கு வந்ததால் தி.மு.க. கூட்டணி பலம் பத்தாகி விட்டது. அ.தி.மு.க. கூட்டணி சுயேட் சைகளை கவர்ந்து தன்பக்கம் வைத்துக் கொண்டதால் அதுவும் 10 கவுன்சிலர்களை வைத்துள்ளது. மூன்றுமுறை சேர்மன் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் நடத்தவேண்டுமென்றால் 51 சதவித உறுப்பினர்கள் வருகை தரவேண்டும். இரண்டு தரப்பிலும் 50-50 என்கிற நிலையில் இருக்கிறது. "அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள கவுன்சிலர்கள் சிலர் தி.மு.க. தரப்புக்கு வாக்களிக்கவுள்ளனர்' என்கிற தகவலால் தேர்தல் அரங்கத்துக்கே அ.தி.மு.க. வரவில்லை. விதிப்படி குலுக்கல் முறையில் சேர்மனை தேர்வு செய்யவேண்டும், அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்ததால் அவர்களின் உத்தரவால் அதிகாரிகள் குலுக்கல் நடத்தவில்லை. சேர்மன் தேர்தல் நடத்தவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தி.மு.க.
முடக்கப்பட்ட ஒன்றியம்-2
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு ஒன்றியத்திலுள்ள 28 கவுன்சிலர்களில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, அ.ம.மு.க. 2, சுயேட்சை 2 பேர் உள்ளனர். அ.ம.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்ததால் தி.மு.க.வின் பலம் 17 ஆனது. அ.தி.மு.க.வின் பலம் 11 மட்டுமே. இந்த ஒன்றியத்தின் தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சேர்மன் பதவிக்கு, வானாபுரம் பரிமளாவை முன்னிறுத்துகிறது. இவர் பழங்குடியின சாதியல்ல, எம்.பி.சி.யான பரிமளா பொய்யான தகவல்களைத் தந்து சாதிச் சான்றிதழ் பெற்று சேர்மன் தேர்தலில் நிற்கிறாரென பழங்குடியின கவுன்சிலர்களான அ.தி. மு.க.வைச் சேர்ந்த செல்வி, லதா புகார் தந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள், கவுன்சிலர் பரிமளாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுபற்றி பரிமளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். சாதிச் சான்றிதழ் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரிக்க அதிகாரமில்லை, சேர்மன் தேர்தலை நடத்தலாமென்றது நீதிமன்றம். கடந்த 2020 ஜனவரி 30-ஆம் தேதி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் என ஆணையம் அறிவித்தது. தேர்தல் நாளன்று 17 தி.மு.க. கவுன்சிலர்களும் ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றபோது, "நிர்வாகப் பிரச்சினை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படுகிறதென' நோட்டீஸ் ஒட்டியது. அதற்கடுத்தமுறை தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமென காவல்துறையிடம் கடிதம் வாங்கி தேர்தலை ஒத்திவைத்து அ.தி.மு.க.வுக்கு சாதகமாக நடந்துகொண்டார் அப்போதைய ஆட்சியர் கந்தசாமி. இப்போதுவரை தேர்தல் நடக்கவில்லை.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சேர்மன் இல்லாததால் கவுன்சில் கூட்டங்கள் நடத்த முடியவில்லை. வெற்றிபெற்றும் வெற்றிபெறாத நிலையே கவுன்சிலர்கள் நிலை. மக்கள் பணிகளைச் செய்ய முடியாததால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களைக் கடந்தும் இப்போதும் அதே நிலையிலேயே உள்ளது.
தேர்தல் நடத்தாதது குறித்து மாநில தேர்தல் ஆணையரைத் தொடர்பு கொண்ட போது, நமது லைனை அட்டன்ட் செய்யவே இல்லை. ஆணைய வட்டாரமோ, "கொரோனா பரவலால் ஊரடங்கு, சட்டமன்றத் தேர்தல் போன்றவை வந்துவிட்டது. தற்போது திரு வண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றிய மறைமுகத் தேர்தல் பிரச்சினையில் வழக்குத் தொடுத்தவர்கள் வழக்கை கடந்த மாதம் வாபஸ் பெற்றுள்ளார்கள். மற்ற இடங்களிலும் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதற்கான நீதிமன்ற உத்தரவு ஆணையத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் உடனடியாகத் தேர்தல் நடத்துவதா அல்லது 9 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிந்ததும் மறைமுகத் தேர்தல் நடக்கும்போது நடத்துவதா என்பது முடிவாகும்'' என்கிறார்கள்.