"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை பங்குப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்துவரும் அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கும் ராகுலுக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு விவகாரம் என்ன?
சுதந்திரப் போராட்டக் காலத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் "அசோசியேட்டட் ஜர்னல்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் "நேஷனல் ஹெரால்டு' உள்ளிட்ட சில பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியது. இதில் 5000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
ஆனால் சுதந்திரத்துக்குப் பின் இந்தப் பத்திரிகையின் விற்பனை சரிந்தது. இருந்தும் பத்திரிகை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனை நடத்த காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. ஒருகட்டத்தில் நட்டம் காரணமாக "நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுத்தப்பட்டது. (2016-க்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டது).
2010-ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகையின் பங்குகள் 50 லட்சத்துக்கு "யங் இந்தியா' நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் ராகுல், சோனியா வசமும் 24% பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் வசமும் உள்ளன. பங்குகள் மாற்றப்பட்டபோது ஏ.ஜே.எஸ். நிறுவனத்தின் சம்மதம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
"2013-ஆம் ஆண்டு இந்த பங்குகள் பரிமாற்ற விவகாரத்தில் முறைகேடு' எனச் சொல்லி சுப்பிரமணியசுவாமி வழக்குத் தொடர்ந்தார். அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மல்லிகார்ஜுன கார்கே, காங். பொருளாளர் பவன்குமார் ஆகியோர் கடந்த ஏப்ரலில் விளக்கமளித்தனர். இதில் திருப்தியடையாத அமலாக்கத்துறை, சோனியாவையும், ராகுலையும் ஆஜராகும்படி அழைத்துள்ளது.
"சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் "நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை ஒடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க. ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுகிறது'’எனவும், இது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார்.
"2015-லேயே இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அமலாக்கத்துறையில் சில அதிகாரிகளை மாற்றி, புதிய அதிகாரிகள் மூலமாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது''’என காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி, பா.ஜ.க. மீது குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுலை ஜூன் 5-ஆம் தேதிவாக்கில் ஆஜராகக் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில்... வெளிநாட்டிலிருக் கும் அவர் 8-ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ ஆஜராவார் என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.