டிகர் ராஜேஷ் இறந்த செய்தி, இன்று காலை நேரத்தை சட்டென இருளச் செய்துவிட்டது. மிகச்சிறந்த ஆய்வாளர். வெறும் சினிமா மட்டுமல்லாமல் அரசியல், பண்பாடு, வரலாறு என பல துறை வல்லுனர் அவர். சென்ற வாரம்தான் போனில் குறுஞ்செய்தி அனுப்பினார் . அவரது மகன் தீபக் திருமணம், வரும் ஜூன் 6-ஆம் தேதி அணைகாட்டில் தட்டு மாற்றுதல், ஜூலை 27ஆம் தேதி திருமணம் என்றும், ஆகஸ்டில் வரவேற்பு என்றும் வித்தியாசமாக இருந்தது. நான் உடனே போன் செய்து "என்ன சார் ரொம்ப சிக்கனமா இன்விடேஷன் அடிச்சிட்டீங்க'' எனச் சொல்ல... உடனே சிரித்தபடி, "அட இல்லை சார், இன்விடேஷன் ரெடியானதும் கொடுக்க நேர வருவேன். ஆனா முன்னாடியே சொல்லிட்டா, உங்க தேதியை எனக்காக இப்பவே ஒதுக்கி வச்சுக்குவீங்கள்ல'' எனச் சொன்னவர், "நான் எப்பவுமே பெர்பெக்ஷனிஸ்ட் சார். எல்லாத்தையும் திட்டமிட்டு செஞ்சாதான் நிம்மதியா தூங்க முடியும். என் சாவு தேதிகூட எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு நான் அக்யூரசி'' எனச் சொல்லிச் சிரித்தார். உண்மையில் இந்த தேதியை அவர் முன்கூட்டி தெரிந்துதான் அவசரமாக மகன் திருமணத்தை திட்டமிட்டாரோ, தகவல்களைப் பகிர்ந்துகொண்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

rajesh

1998ஆம் ஆண்டு அவரை முதன்முதலாக அவரது நந்தனம் அலுவலகத்தில் சந்தித்தபோது அன்று உலக சினிமாவின் மிகச்சிறந்த நூலான "5சி'ஸ் ஆப் சினிமாட்டோ கிராபி' எனும் 1000 பக்க நூலை மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். எனது நண்பர் ஒருவர், அப்போது அவருக்கு உதவிக்கொண்டிருந்தார். அந்த நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்றபோதுதான் நடிகர் ராஜேஷ் அவர்களை முதன்முதலில் நேரில் சந்தித்தேன். அன்று அவரோடு பேசமுடியவில்லை. நான் அப்போது சினிமாவில் முழுமையாக கால் பதிக்கவில்லை . ஆனாலும் அவருக்கு அந்த நூலை மொழிபெயர்த்து வெளியிடு வதில் ராஜேஷ் சாருக்கு வெளிப்பட்ட ஆர்வம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அன்று அவரை வியப்புடன் பார்க்கத் துவங்கிய என்னை நேற்றுவரை பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திவந்தார்.

பிற்பாடு நான் மார்லன் பிராண்டோ நூலை 2006ஆம் ஆண்டில் எழுதி வெளியிட் டேன். இன்று அது பல பதிப்புகள் வெளிவந்தா லும் முதல் பதிப்பு வெளிவந்த இரண்டு மாதங்கள் வரை யாரும் புத்தகம் பற்றிப் பேசவில்லை. நண்பர்கள்கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. நாமதான் சரியா எழுதலியோ என நினைத்திருந்தபோதுதான், ஒரு அழைப்பு என் தொலைபேசிக்கு வருகிறது. "நான் ராஜேஷ் பேசறேன்...' கம்பீரமான குரல். தொடர்ந்து ஒரு மணி நேரம் புத்தகத்தைப் பாராட்டிப் பேசினார். முதன்முதலாக திரைத்துறையில் என் நூலைப் படித்துவிட்டு பாராட்டிப் பேசியது அவர்தான். என்னைப் பாராட்டும்விதமாக அன்று மாலையே காஸ்மோபாலிட்டன் கிளப் புக்கு வரவழைத்து, சிறு விருந்து கொடுத்து உபசரித்து பாராட்டி மகிழ்ந்தார். "நான் செய்ய நினைச்சது நீங்க செஞ்சிட்டீங்க. அதனாலதான் இது' எனச் சொல்லி மகிழ்ந்தார். அவருக்கு தெரிந்ததைப் பேச, அவருக்கு அன்று யாரும் கிடைக்கவில்லை. அதனால் அடிக்கடி பேசி, தான் படித்த விஷயங்களை என்னோடு பகிர்வார். உலக சினிமாக்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் அவ்வப்போது உரையாடுவார். சீனாவுக்குப் பயணம் சென்று வந்தவுடன் என்னை அழைத்து, அந்த அனுபவத்தை குழந்தை போல பகிர்ந்துகொண்டார். "பேசாம இதையெல்லாம் பயணக் கட்டுரையா எழுதுங்க சார்'' என்றதும், "ஆமால்ல' எனச் சொல்லியவர், கையோடு தந்திக்கு போன் செய்து அதில் தொடராக எழுதி பதிவுசெய்தார்.

Advertisment

rajesh

அவ்வப்போது ஹாலிவுட் நடிகர்கள் போல போனிலேயே பேசிக் காண்பிப்பார். ஒரே வசனத்தை ஷேக்ஸ்பியர் பாணியிலும், மெதட் ஆக்டிங் பாணியிலும் தமிழ் நாடக பாணியிலும் பேசி நடித்துக் காட்டுவார். ஹாலிவுட் படங்கள் பற்றியும், நட்சத்திரங்கள் அனைவர் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வையும் அறிவும் இருந்தது. அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒவ் வொரு நடிகர்கள் குறித்தும் அவர்களது வரலாறு குறித்தும் முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்.

குறிப்பாக பழைய நடிகர்கள் யார் பற்றிக் கேட்டாலும், அவர்கள் முழு வரலாற்றையும் வெற்றி -தோல்விகளையும் அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான அனுபவங்களையும் குறித்து பேசி ஆச்சரியப்படுத்துவார். ஒருமுறை பி.யூ.சின் னப்பா பற்றி பேசிக்கொண்டிருந்தபோது "எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சது?'' எனக் கேட்டபோது, "நான் நேரா அவங்க ஊருக்கே போய் விசாரிப்பேன் சார். சும்மா இருக்கும்போது வேற என்ன வேலை. கார்ல பெட்ரோல் போட் டுக்கிட்டு தமிழ்நாடு ஃபுல்லா சுத்தியிருக்கேன். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களோட சொந்த கிராமத்து வீட்டுக்கும் போயிருக்கேன்.''

Advertisment

"ஏன் சார் இப்படி?''

"என்ன சார், மனுஷ வாழ்க்கை இவ்ளோ தான்... சாவுறதுக்குள்ள எல்லாத்தையும் தெரிஞ்சுக் கணும் சார். சினிமா நடிகன் ஏதாவது பழக்கத்துக்கு அடிமையா இருப்பான். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. என் மனைவியைத் தவிர யாரையும் தொட்டதுமில்ல. இப்படி புத்தகம் படிக் கிறதும், பிடிச்ச நடிகர்களோட வீட்டைத் தேடிப் போய் தகவல் சேகரிக்கறதும்தான் எனக்கு இருக்க ஒரே கெட்ட பழக்கம்'' எனச் சொல்லிச் சிரிப்பார்.

வெறும் சினிமா மட்டுமல்லாமல் தமிழக -இந்திய உலக அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்கள் பழக்கவழக்கம், குணாம்சம், வரலாறு அனைத்தும் தெரிந்துவைத்திருந்தார். ஒரு முறை வி.கே.கிருஷ்ணமேனன் பற்றி பேச்சு வந்தது. கிருஷ்ணமேனன் 50களில் தேசிய ராஜாங்க அமைச்சராக பதவி வகித்தவர் மட்டுமல்லாமல் சிறந்த அறிவுஜீவி என நேருவால் பாராட்டு பெற்றவர். அவர் குறித்தும்கூட நான் அறியாத தகவல்களைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அந்த அளவுக்கு இந்திய அரசியல்வாதிகள் குறித்த பழுத்த அறிவு அவருக்கு இருந்தது. காந்தி, நேரு, இந்திரா, ஜின்னா என அனைவரையும் குறித்து பக்கம், பக்கமாக பேசுவார். வாழ்க்கை குறித்து பழுத்த அனுபவம் அவருக்கு உண்டு. சதா மனிதர்கள் குறித்தும் சமூகம் குறித்தும் சினிமா குறித்தும் சிந்தித்துக்கொண்டி ருப்பார் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு தூரத்து உறவினர். ஆனால் அதை அவர் எங்கேயும் சொல்லிக்கொண்டவரில்லை. அவரது வீட்டின் வரவேற்பறைபோல நான் யார் வீட்டிலும் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, தாமஸ்ஆல்வா எடிசன், பெரியார், அண்ணா, சாவித்திரி, சந்திரபாபு, பத்மினி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் என ஒரு இருபது வி.ஐ.பி.க்களின் புகைப்படங்களை, கடவுளர் படங்கள் போல வரிசையாக வைத்திருப்பார்.

rajesh

"எதுக்கு சார் இவங்க எல்லார் போட்டோ வும் வச்சிருக்கீங்க?'' என்றேன்.

"இவங்கதான் சார் எனக்கு எல்லாம். நான் வியந்து பார்த்த மனிதர்கள். நான் வாழற வாழ்க்கை யை நான் செதுக்கிக்கொள்ள எனக்கு இவங்கதான் கத்துக் கொடுத்துருக்காங்க. இவங்களை தினசரி பாத்தாதான் மனசு நெறையும்'' என்றார்.

எனது "தமிழ் சினிமா வரலாறு' நூல் வெளியிட்டு விழாவுக்கு வந்து, நூலை வெளியிட்டு சிறந்த உரை நிகழ்த்தினார். அதே நூலின் இரண் டாம் பாகமான "திராவிட எழுச்சி' நூலுக்கும் சிறந்த அணிந்துரை வழங்கி கவுரவித்தார்.

எனது திருமணத்தன்று வெளியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரால் வர முடியவில்லை. ஆனால் மறுநாளே போன்செய்து "உங்க வீட்டு வாசல்ல இருக்கேன்' எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார். வாசலுக்கு ஓடி அவரை அழைக்க, வீட்டுக்கு பரிசுடன் வந்து என்னையும், மனைவியையும் வாழ்த்திவிட்டுப் போனார்.

"இவ்வளவு தூரம் நடமாடும் நூலகமாக இருக் கீங்க, பின்ன ஏன் சார் ஜோதிடம்லாம்'' என்பேன்.

"சார், ஜோதிடம் கணக்கு சார்... அறிவியல் சார், அதை நான் துல்லியமா கத்துக்கிட்டிருக் கேன் சார். யாராவது கிறிஸ்தவன் ஜோசியத்து பின்னாடி அலையறது பார்த்திருக்கீங்களா? நான் ஏன் இதை பாலோ செய்யறேன்னா எனக்கு மத அடையாளம் எதுவுமில்ல. ஆனா நமக்குத் தெரியாத விஷயம் உலகத்துல எதுவும் இருக்கக்கூடாதுன்னு தான்'' என்பார்.

அவர் சிறந்த நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் "ஆட்டோகிராப்' படத்தில் கொஞ்சமே வந்தாலும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது. "அச்சமில்லை அச்சமில்லை', "அந்த ஏழு நாட்கள்', "சிறை', "மகாநதி', "விருமாண்டி' போன்றவை அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள்.

நக்கீரன் தொலைக்காட்சி மூலம் இந்திய -தமிழக வரலாறு தொடர்பாக எழுத்தாளர் வசனகர்த்தா ரத்னகுமார் அவருடன் பல முக்கிய நேர்காணல்களை நிகழ்த்தியிருக்கிறார் . அவை அனைத்துமே அனைவரும் பார்த்து அறியவேண்டிய வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

தி.மு.க. அரசு தக்க சமயத்தில் அவரை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரிக்கு முதல்வராக நியமித்து பெருமை சேர்த்தது. மற்ற நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது .

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட மனிதரை, ஒரு நடமாடும் கலைக்களஞ்சியத்தை நாம் இழந்துவிட்டோம்.

வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருந்தார். இன்று ஒருநாளில் அவர் குறித்து உலகம் தேடும்படி வைத்துவிட்டார்.

அவருக்கு என் சார்பாகவும், எங்கள் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் அஞ்சலி!