ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தன் போட்டியிடுகிறார். வி.சி.க.வின் முன்னாள் மா.செ. பகலவன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் போட்டுள்ளனர். அதில், "தி.மு.க., வி.சி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பல பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வழக்குகள் வாபஸ் வாங்கப்படும் என வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கு களை வாபஸ் வாங்குவதற்காக "தி.மு.க. தனியே ஒரு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும்' எனக் கேட்டுள்ளது. இது தி.மு.க. நிர்வாகிகளிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. "இவர்கள் காவல்துறைக்கு எதிராக ஊர்வலம் சென்று கோஷமிடுவார்கள், அவர்களை மிரட்டுவார்கள். இதனால் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இதற்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? இந்த வழக்குகளை வாபஸ் வாங்கினால்தான் தேர்தல் பணி செய்வோம் என மிரட்டுவது எந்த விதத்தில் சரியானது?' எனக் கேள்வி எழுப்பினர். வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் வி.சி.க.வின் ஒரு பிரிவினர், "தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள். அ.தி. மு.க.வுக்கு வாக்களியுங்கள்' என ரகசிய மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது ரகசியக் கூட்டணியால்ல இருக்கு!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி அருகே முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவரான இவர், கோவையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாகக் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கோவைக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார். இந்நிலையில், புதனன்று மாலை பிரச்சாரத்தை முடித்தவர், அனைவரும் பார்க்கும் வண்ணம் "இங்கு பா.ஜ.க. தான் வெற்றி பெற வேண்டும்'' என்று கத்திக் கூப்பாடு போட்டு, கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரெனத் துண்டித்துக் கொண்டார். இதைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியாகி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். "10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து பா.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்தேன். அருகிலிருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். அது எனக்கு வேதனையைக் கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்'' என்றார். ஒரு விரலோடு போச்சு!
வேலூர் நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் பசுபதி, சீட் கிடைத்ததும் தேர்தல் செலவுக்காக 1 கோடி ரூபாய், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தினை திருப்பத்தூர் மா.செ. வும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் தந்துள்ளார். 1 கோடி ரூபாயை செலவு செய்தவர், 5 கோடி ரூபாய்க்கான சொத்து பத்திரத்தை தந்ததும், அதனை அடமானம் வைத்த பணத்தையும் செலவு செய்துவிட்டதாக மாஜி வீரமணி சொல்லியிருக்கிறார். மேலும், "கட்சியிலிருந்து இன்னும் பணம் வரவில்லை. வந்ததும் செலவு செய்யலாம்'' எனக் கையை விரித்துள்ளார். இதனால் வாக்குப்பதிவுக்கு முந்தைய சில நாட்கள் சரியாக பிரச்சாரம் நடக்கவில்லை. இதேபோல் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் கலியபெருமாள், தேர்தலில் 10 கோடி செலவு செய்வேனென எடப்பாடியிடம் வாக்குறுதி தந்திருந்தார். தேர்தல் செலவுக்காக, திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் கட்டிக்கொண்டிருந்த பெரிய கட்டடத்தை, திருவண்ணாமலையில் சிவன் பெயர் கொண்ட தொழிலதிபராக வலம்வரும் கந்துவட்டி பைனான்ஸியர் பெயரில், அ.தி.மு.க. மா.செ. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சில கோடிக்கு அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறார். அப்படி வந்த பணத் தையும் களத்தில் சரியாக செலவு செய்யாதது, வேட் பாளரின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. செலவழிச்சாத்தானே சம்பாதிக்க முடியும்!
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, பிரச்சாரத்தின்போது வெறுங்கையில் முழம் போட்டுக்கொண்டு தொகுதியை ரவுண்ட் அடித்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் பட்டதால் தலைமை மீது கீழ்மட்ட நிர்வாகிகள் அதிருப்தியாகி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினர். அதோடு தேவையான பண கவனிப்பும் இல்லை. அதனை சரிசெய்ய பா.ம.க. தலைமையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கவனித்த தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மைத்துன ரும், தாம்பரம் துணை மேயருமான காமராஜ், பா.ம.க.விலுள்ள அதிருப்தியாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக கனத்த கவரோடு சிறப்பு கவனிப்பு செய்தார். இதனால் வேட்பாளரோடு வாக்கு கேட்கச் செல் லும் நிர்வாகி கள் எண்ணிக் கை குறைய, அதிர்ச்சியான வேட்பாளர் தரப்பு, தலைவர் அன்பு மணியிடம் சொல்லி புலம்பினர். இதில் விரக்தியான வேட் பாளர், "அரக்கோணம் தொகுதியில் பணத்தை தி.மு.க. வேட்பாளர் தாராளமாக செலவு செய்கிறார். இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கண்டு கொள்ளவில்லை. இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு விரக்தியை வெளிப்படுத்த, பா.ம.க. தொண்டர்களோ கண்டுகொள்ளாமல் கடந்து போயினர். கவரை கொடுத்து கவர் பண்ணிட்டாரே!
பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையிலான பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாயன்று, ஆர்.எஸ். மடை பகுதியில் ஒன்றிய செயலாளர் முத்துமுருகன் தலைமையில் ஓ.பி.எஸ். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது நேரம் இரவு 10 மணி. அதன்பின்னர், தரணி முருகேசன் ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு திட்டமிட்டபடி செல்ல முடியாததால் கடுப்பான தரணி முருகேசன், "ஆட்களை திரட்டி நிற்க வைச்சிருக்கோம்னு தெரியுதுல. சீக்கிரம் முடிச்சு அனுப்ப வேண்டியதுதானே?'' என முத்துமுருகனிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டிருக்கிறார். இதில் தரணி முருகேசனுக்கு செமத்தியான கவனிப்பு நடந்த தாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர், முத்து முருகன், மாவட்டத் தலைவர் தரணி முருகேசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேணிக்கரை சந்திப்புப் பகுதியில் சாலை மறியல் செய்ததோடு, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகவும், பலாப்பழச் சின்னத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்! இறுதியில், பா.ஜ.க. மா.த. தரணி முருகேசன், ராமநாதபுரம் மாடக்கொட்டன் பகுதியில் தங்கியிருந்த ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து, பெரிய தொகையை வாங்கிக்கொண்டு சமாதானமடைந்ததாகத் தகவல். இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா!
விழுப்புரம் தொகுதியில் திருநாவலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகன், வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பதற்காக தனது வீட்டில் ஆலோ சனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் வந்த தேர்தல் பறக்கும் படையினர் அரைமணி நேரமாக சோதனையிட்டு பணம் ஏதுமில்லாமல் வெறுங்கையோடு திரும்பினர்! அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயது விவசாயி அடைக்கலசாமி, தனது 25 ஏக்கர் விவசாய நிலத்திலிருந்து கிடைத்த பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இவரது வீட்டுக்குள் புகுந்த வருமான வரித்துறையினர், அங்கிருந்த சில லட்சம் பணத்தைக் கைப்பற்றி விசாரிக்க, தனது பேத்தி திருமணத்துக்காக வைத்திருப்பதாகக்கூறி, திருமண அழைப்பிதழ், வாங்கவேண்டிய சீர்வரிசை சாமான்கள் பட்டியல் உள்ளிட்டவற்றை காட்டியிருக் கிறார். அரசியல்வாதிகளின் பணம் உங்களிடம் இருக்கிறதா என விசாரித்த அதிகாரிகள், அப்படியேதும் இல்லாததால், கூப்பிடும்போது விசாரணைக்கு வரவேண்டுமெனக் கூறிவிட்டு வெறுங்கையோடு திரும்பியிருக்கிறார்கள்! அதிகாரிகளையே எவனோ சுத்தல்ல விட்டிருக்கான்!
கோவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர், கடந்த செவ்வாயன்று சூலூர், சுல்தான்பேட்டையை அடுத்த புளியமரத்து பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது பெண் ஒருவர், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வீர்கள்?'' என வேட்பாளரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். ஒவ் வொரு கேள்விக்கும் மாநில அரசின் மீது பழி சொல்லித் தப்பித்தவர், "ஏராளமான மாணவர் களின் உயிர்களைப் பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்வீர்களா?'' என்ற கேள்விக்கு மட்டும், "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம், நீட் தேர்வை விலக்கிவிட்டுத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப் பட்ட அரசியல் தேவையில்லை'' எனத் திமிராக பதிலளித்தார். அவரது திமிர்ப்பேச்சு வீடியோ வாக சமூக வலைத்தளங்களில் வைரலாக, விழுகிற நாலு ஓட்டுக்கும் அவரே வேட்டு வச்சுக்குவார் போல என கலாய்த்து வருகின்றனர். திமிரை அடக்குவார்களா கோவை வாக்காளர்கள்?
"கோவை பா.ஜ.க. வேட்பாளருக்கு பயந்து, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு மாஜி வேலுமணி வரவில்லை' என நக்கீரனில் பதிவு செய்திருந்தோம். சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் அருகே செய்தியாளர்களை சந்தித்த கோவை அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனோ, "எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருந்து செயல்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொங்கு மண்டலம் முழுவதும், நான்கைந்து நாடாளுமன்றத் தொகுதிகளை கவனிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால் அதுபற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை'' என வேலுமணிக்கு ஆதரவாக பொத்தாம்பொதுவாகப் பேசி வைத்தார். இது வேலுமணியை சென்றடைய, மறுநாளே அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு தன்னுடைய இருப்பைக் காண்பித்தார். இருப்பினும், "இல்லைங்க, பத்திரிகையில போட்டுட்டாங்க... வேட்பாளரும் பேசிட்டார்... வேற என்ன செய்ய முடியும்?'' என பா.ஜ.க. வேட்பாளரிடம் பம்மியதாகத் தகவல்! வராமல் விடமாட்டீங்கறாங்களே!
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் வீடுவீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், "அரசியலில் நேர்மையான முறையில் பணியாற்றி வருகிறேன். வாக்குக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த தேர்தலில் களமிறங்கி யுள்ளேன். புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் போட்டி யிடும் நமச்சிவாயம் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாயும், காங்கிரஸின் வைத்திலிங்கம் 200 ரூபாயும் கொடுக் கின்றனர். தேர்தலில் பணம் பட்டுவாடா வழங்கப் படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித் தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப் பில்லை. பணப்பட்டுவாடா கொடுக்கப்பட்டதை உரிய ஆதாரத்துடன் தலைமை தேர்தல் ஆணையத் திடம் புகாரளிப்பேன். இந்த தேர்தலில் பறக்கும் படையே இல்லை. பணப்பட்டுவாடா அதிகம் நாடப்பதால் இந்தத் தேர்தலையே ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்தலை அறிவிக்க வேண்டும்'' என்றார். அ.தி.மு.க. அம்புட்டு நல்ல கட்சியா?
பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே. பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். லால்குடி, திருமங்கலம் மாதா கோயில் தெருவில் வசிக்கும் ஐ.ஜே.கே. கட்சியின் கிளைச்செயலாளர் வினோத் சந்திரன், அப்பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. வட்டாட்சியரின் உத்தரவின் பேரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய சோதனையில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறமுள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பெயர்ப் பட்டியல் மற்றும் "டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதிப் பணிகள்' என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள், 100 துண்டுப் பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை எனக் கூறியதையடுத்து, அப்பணம் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. கழிவறையக்கூட விட்டுவைக்கலையா!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள ராஜேந்திரத்தில், ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த தகவலையடுத்து அங்கு சென்றபோது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அஜித் என்பவரிடமிருந்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினர், ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். பறக்கும் படைக்கு வேலை அதிகம்போல!
-எஸ்.பி.எஸ்., ராஜா, நாகேந்திரன், துரை.மகேஷ், இராம்குமார்