"ஹலோ தலைவரே, தமிழக சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது.''”
"ஆமாம்பா, இது தற்போதைய தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் ஆச்சே?''”
"உண்மைதாங்க தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் முழுமை யான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியாது. இப்போது, கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரித்துவருகிறார்கள் அதிகாரிகள். அதேசமயம், தேர்தலை மையப்படுத்தி புதிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நிதி நெருக்கடியிலும், கடன் சுமைகளிலும் தத்தளித்துவரும் அரசு, வரி இல்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நினைக்கிறது. அதேசமயம், வரி இல்லா பட்ஜெட்டைத் தயாரிக்க முடியுமா? என்று அதிகாரிகள் தடுமாறு கிறார்கள். எனினும் மறைமுக வரி இருக்கும் என்று கோட்டை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதேபோல் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்க பட்ஜெட்டில் என்னென்ன அறிப்புகளைச் செய்யலாம் என்கிற ஆலோசனைகளும் நடக்கிறது.'' ”
"வரும் பட்ஜெட்டில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பான நல்ல அறிவிப்பும் இருக்கலாம்னு சொல்றாங்களே?''”
"மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளை முழுமையாக நீக்கும்படி, முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாராம். நிபந்தனை கள் நீக்கப்பட்டுவிட் டால் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும். இதை சாத்தியப் படுத்த முயல்கிறது ஸ்டாலின் அரசு. அதேசமயம், இந்த உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்கிற கோரிக் கைகளும் எழுந்துள்ளன. இது ஒருபுற மென்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய தி.மு.க. அரசு கமிட்டி அமைத்திருப்பதைக் கண்டிக் கும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இந்த பட்ஜெட்டிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக முதல்வர் அறிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் கள். இந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். தற்போதைய நெருக் கடியில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாத சூழலில் தி.மு.க. அரசு இருப்பதால், அரசு ஊழியர்களின் பிற கோரிக்கைகளில் சிலவற்றை இந்த பட் ஜெட்டில் அறிவித்து அவர்களை சமாதா னப்படுத்தும் முயற்சிகளும் நடக்கிறது.''”
"சரிப்பா, கீரியும் பூனையுமா இருந்த எடப்பாடியும் வேலுமணியும் சமாதான மாயிட்டாங்க போலிருக்கே?''”
"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே நடந்து வரும் மறைமுக மோதலை முடிவுக்கு கொண்டுவர, அ.தி.மு.க. சீனியர்கள் முயற்சி எடுத்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி யிடம் பேசிய அவர்கள், ’நம் கட்சியில் குழப்பத்தை உருவாக்கணும்னு வேலுமணிக்கு பா.ஜ.க. கொம்பு சீவுகிறது. அதற்கு நீங்கள் இடம் தராதீர்கள் என்று சொல்லி, அவரை சமாதானப்படுத்தி னார்கள். அதேபோல் வேலுமணி யிடமும், மண் குதிரையான பா.ஜ.க.வை நம்பி, எடப்பாடி யைப் பகைத்துக்கொள்ளா தீர்கள் என்று புரிய வைத்தனர். இதனால், வேலுமணியிடம் கடந்த சில மாதங்களாக சரிவர பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த எடப்பாடி, சில நாட்களாய் அவரைத் தொடர்புகொண்டு பேசிவருகிறார். அதேபோல் வேலுமணியும், எடப்பாடியிடம் இணக்கம் காட்டுகிறார். தன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 10ஆம் தேதி, எடப்பாடியை அன் போடு அழைத்திருக்கும் வேலுமணி, அவரிடம், "அண்ணே அண்ணே' என உருகியிருக்கிறார். அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வினரை கோவைக்கு அழைத்திருந்த வேலுமணி, அதில் எடப்பாடிக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து அவர் மனதைக் குளிர வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இதன் மூலம், ’"எங்களிடையே எந்த மோதலும் இல்லை. எடப்பாடிதான் எனக்கும் தலைவர் என்று அவர் பா.ஜ.க.வுக்கு உணர்த்த ஆரம் பித்துவிட்டார்' என்கிறது அவரது தரப்பு.''”
"அ.தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பாளர் களிடம் காணொலி வழியாக எடப்பாடி ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, 9ஆம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியினருக்கு அறிவுரை வழங்கிய எடப்பாடி, அவர்களை எச்சரிக்கை யும் செய்தார். தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி விவகாரம் ஆகிய 2 விசயங்கள் குறித்துப் பேச்சைத் தொடங்கிய அவர், "தேர்தல் பணிகளில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. அதற்கேற்ப உங்களிடம் வேகம் இல்லை. பூத் கமிட்டியில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அதன் பொறுப்பாளர்களை நியமித்து, பணிகளில் தீவிரம் காட்டுங்கள். கூட்டணி, கூட்டணி என ஆளாளுக்கு பொதுவெளியில் பேசுகிறீர்கள். இனி அப்படிப் பேசக்கூடாது. அதுகுறித்து நான் பார்த்துக்கொள்கிறேன்'’என்றெல்லாம் அட்வைஸ் செய்தவர், "திருச்சியில் உள்ள நம் கட்சியினர் அங்குள்ள அமைச்சர்களுடன் கள்ள உறவு வைத்திருக்கிறீர்கள். தொழில் உறவும், கான்ட்ராக்ட் உறவும் வைத்திருக் கிறீர்கள். நீங்கள் மாறவே இல்லை. இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இனியும் நீங்கள் மாறவில்லையெனில் நான் சர்வாதி காரியாக மாறிவிடுவேன்'’என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். எடப்பாடியுடன் முரண்பட்டு சில மாதங்களாக தனி ஆவர்த்தனம் நடத்தி வந்த செங்கோட்டையன், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.''
"நடிகர் விஜய் முஸ்லீம்களைக் குறிவைப்பதாக டாக் அடிபடுகிறதே?''”
"தி.மு.க.வுக்கு முஸ்லீம்களின் வாக்கு வங்கி கணிசமாக இருப்பதை உணர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை, தி.மு.க.வை ஆதரிக்கும் இவர்களை அங்கிருந்து பிரிக்க நடிகர் விஜய்யைப் பயன்படுத்திக்கொள்கிறதாம். அது சொன்னதன்பேரில்தான் அண்மையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது த.வெ.க. இதற்காக ஏகத்துக்கும் கரன்ஸியை வாரி இறைத்திருப்பவர் ஆதவ் அர்ஜுன்தான் என்கிறார்கள். மேலும், இஸ்லாமிய லெட்டர்பேடு அமைப்புகளைக் கூட தன் அலுவலகத்துக்கு அழைத்து, நடிகர் விஜய்யை ஆதரியுங்கள் என்று, கனமான கவர்களையும் ஆதவ் விநியோகித்து வருகிறாராம். எனவே, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் எங்கள் பக்கம் கொண்டுவருவோம். அதேபோல் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளையும் கணிசமாகத் திரட்டுவோம் என்கிறதாம் ஆதவ் தரப்பு.''”
"டெல்லியின் திட்டப்படிதான் அமலாக் கத்துறை தி.மு.க. பிரமுகர்களைக் குறி வைத்து ரெய்டுகளை நடத்துகிறது என்கிறார் களே?''”
"அமைச்சர் செந்தில்பாலாஜியின் கீழிருக்கும் டாஸ்மாக்கில் அதிரடி ரெய்டை நடத்தியிருக்கும் அமலாக்கத்துறை, அமைச்ச ருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளை யும் தீவிரமாகத் துழாவியிருக்கிறது. அதே போல் தி.மு.க. எம்.பி,,ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலைகளிலும் அவர் தொடர் பான இடங்களிலும் கூட ரெய்டுகளை நடத்தியிருக்கிறது. ஆனாலும் இந்த ரெய்டுகளின்போது என்னென்ன கைப் பற்றப்பட்டது என்கிற விபரங்களை ஊடகங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள்கிறது அமலாக்கத்துறை. காரணம், இது டெல்லியின் விருப்பத்திற்காகவே நடத்தப்படும் ரெய்டுகளாம். அதன் விபரங்கள் முழுதும் டெல்லிக்கு மட்டுமே செல்கிறதாம். இதனை வைத்து அரசியல் மூவ்களை நடத்த டெல்லி திட்டமிட்டிருக்கிறதாம். எனவே இந்த ரெய்டுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.''”
"தமிழக உயர் காவல்துறை அதிகாரி பற்றிய புகார் முதல்வர்வரை சென்றிருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அவர் காவல்துறையில் இருக்கும் மிகப்பெரிய அதிகாரி. இவர் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திடமிருந்து நிலத்தை வாங்கியதோடு, கணிசமாகப் பணத்தையும் பெற்றிருக்கிறாராம். இந்த விபரம் இந்துத்துவா ஊடகங்களைச் சேர்ந்த சிலர் மூலம், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிக்குப் போய்ச் சேர, இதனால் தனது குட்டு பகிரங்கமாகி விடுமோ என்று அஞ்சிய அந்த காவல்துறை அதிகாரி, இந்துத்துவா ஊடகத்தினருக்கு மிக அதிக முக்கியத்துவத்தைத் தர ஆரம்பித்த தோடு, மாநில பா.ஜ.க. நிர்வாகியிடமும் அதிகமாக நெருக்கம் பாராட்டுகிறாராம். இதனால் தனக்கு சிக்கல் வராது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்க... இதை ஸ்மெல் செய்த உளவுத்துறை, அவருக்கே தெரியாமல் தமிழக முதல்வருக்கு இது குறித்து நோட் அனுப்பியிருக்கிறதாம்.''”
"தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாகியிருக்குதே?''”
"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது கர்நாடக அரசு. இதன்மூலம் அது தமிழகத்துக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறது. இதுபற்றி, தமிழக அரசு கவலைப்படாமல் இருப்பதாகக் கண்டனம் தெரிவித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தராத படி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், இத்திட்டத்தைக் கைவிடுவ தாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க 22-ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்யவேண்டும் என்றும், முதல்வர் ஸ்டா லினுக்கு வேண்டுகோளை வைத்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த அணை விவகாரம் இருமாநிலங்களுக்கும் இடையில் புகைச்சலை ஏற்படுத்திவருகிறது.''”
"இந்த நேரத்தில் வாட்டாள் நாகராஜ், அங்கே சச்சரவை கிளப்பியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த நேரத்தில், அங்கேயுள்ள கன்னட சலுவாலியா என்னும் அமைப்பை நடத்திவரும் வாட்டாள் நாகராஜ், மேகதாது அணையைக் கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால் தமிழ் சினிமாக்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வாட்டாள் நாகராஜ், இரு மாநில உறவுகளுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர். இந்த நிலையில், அவரின் கருத்தைக் கண்டித்து, கர்நாடக முதல்வர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு கடிதம் எழுதி யுள்ள "தகவல் பெறும் உரிமை' அமைப்பின் பொதுச்செயலாளரும் செயற்பாட்டாளருமான ஈரோடு வள்ளிநாராயணன், "தொடர்ந்து பிரிவினை வாதம் பேசும் வாட்டாள் நாகராஜை கண்டித்து, அவரைக் கைது செய்யவேண்டும். கர்நாடக அரசின் தூண்டுதலில்தான் அவர் அப் படிப் பேசுவதாக கருதி, அதனை கண்டிக்கும் வகையிலும் தமிழகத்தின் உரிமையை நிலை நிறுத்தும் வகையிலும் கர்நாடக பேருந்துகளை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய திருக்கும்' என்று தெரிவித்திருக்கிறார். இது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.''”
"நானும் எனக்குக் கிடைத்த ஒரு ஏடாகூடத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகக் கூறி, தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. அதில் பேசிய மாஜி மந்திரி ராஜேந்திர பாலாஜி, கனிமவள லாரிகளைச் சிறைப்பிடித்து உடைப்போம்னு பேசி பதட்டத்தை உண்டாக்கியிருக்கார். இந்தக் கனிமவளக் கடத்தல் என்பது கடந்த ஆட்சியிலிருந்தே தொடர்கிறது. இதற்காகவே கேரள மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பையும் ஏற்படுத்திக்கொண்ட கடத்தல் ஆசாமிகள், இங்கே இருக்கும் ஏஜெண்ட்டுகளுடன் தகவல்களைப் பகிர்ந்துக்கறாங்களாம். இதைக் கண்டு கொள்ளாமலிருக்க,அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வங்கிக் கணக்குகளில் மொய்யையும் எழுதி விடு கிறார்கள். கொஞ்சநாளா, அந்த மொய்ப்பணம் போகாத கோபத்தில்தான் கடத்தலைக் கண்டிப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்தறாங் களாம். இப்ப, ராஜேந் திர பாலாஜியின் ஆவேசத்துக்கான கோபம் எல் லோருக்கும் புரிஞ்சிருக்கும்.''’
____________
இறுதிச் சுற்று!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள் கிழமைத் (10/03/25) தொடங்கியது. கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், "தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தாததால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 2000 கோடி ரூபாயை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பழிவாங்கும் நோக்கத்தோடு கல்வி நிதி முடக்கப்பட்டுள்ளது'' என்று குற்றம்சாட்டினார். இதனை மறுத்து பதிலளித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், "தேசியகல்விக் கொள்கையான பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேசும் சில எம்.பி.க்களும் என்னை நேரில் சந்தித்து உறுதியளித்தனர். இப்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்'' என்று ஆவேசம் காட்டினார்.
இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனிடையே, கனிமொழி கருணாநிதி பேசும்போது, "தேசிய கல்விக் கொள்கை யை ஒருபோதும் தி.மு.க. ஏற்றுக்கொண்டதில்லை. இது குறித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மும்மொழிக் கொள்கையை தி.மு.க. எம்.பி.க்கள் ஏற்பதாக ஒருபோதும் சொன்னதில்லை. தமிழ்நாடும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது. தமிழக எம்.பி.க்களையும் தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் (தர்மேந்திரபிரதான்) பேசியது வேதனையளிக்கிறது" என்றார். தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் ஆவேச குரல் எழுப்பினர்.
-இளையர்