வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது. வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராப்பர்ட்டி நிறுவனத்திடமிருந்து 28 கோடி ரூபாய் லஞ்சமாக வாங்கினார். அந்தப் பணத்தை அவரது மகன் சென்னை திருவேற்காடு பக்கத்தில் நிலங்களாக வாங்கிப் போட்டார். அவரது மகன் நடத்தும் கெமிக்கல் தொழிற் சாலைக்கு 28 கோடி ரூபாய் வருமானம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என தமிழக அறப்போர் இயக்கம் எழுப்பிய புகாரின் கீழ் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வழக்குப்பதிவு செய்திருந்தது. அது தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையே மிகவும் தயக்கத்துடன் பதிவு செய்த வழக்கை திடீரென வேகவேகமாக பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை கையிலெடுத்து வைத்திலிங்கம் மீது பாய்வதற்கு காரணம், அவர் எடப்பாடிக்கு எதிராகத் திரண்டிருக்கும் அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைப்பதுதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீப காலமாக ஓ.பி.எஸ்.சை விட்டு விலகுகிறார். ஓ.பி.எஸ். சொன்னால் கேட்பதில்லை. அவர் எடப்பாடியுடனும் பேசுகிறார். ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா, ஐ.டி.விங் தலைவர் ராஜ்சத்யன், செல்லூர் ராஜு போன்றவர்கள் அணி வகுக்கிறார்கள். ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்கிற குரல் வலுத்து வருகிறது. சமீபத்தில் மதுரையில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ஓ.பி.எஸ்.ஸின் பேரை மறைமுகமாக குறிப்பிட்டு “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜெயித்த ஆண்டிப்பட்டியில் கூட அ.தி.மு.க. வெற்றிபெற முடியவில்லை. இவர்கள் எல்லாம் கட்சித் தலைவர்களா? இவர்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடத் தகுதியி ல்லை” என்றார்.
எடப்பாடிக்கு எதிரான பேச்சு என அந்தப் பேச்சு வைரலாக்கப்பட்டது. ஆர்.பி.உதயகுமார் கோஷ்டியில் வைத்திலிங்கமும் இணை கிறார். அவர் எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவனுடன் பத்தீஸ் என்கிற ஹோட் டலில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்கிற செய்தி அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்பொழுது இளங்கோவன் வீட்டிலும் வைத்திலிங்கம் வீட்டிலும் இன்கம்டாக்ஸ் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்துள்ளது. அடுத்த ரெய்டு ஆர்.பி.உதயகுமார் வீட்டிலும் மற்றும் ஏற்கெனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ள வேலுமணி யின் பினாமிகள் அண்ணன் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர் ஆகியோர் வீட்டில் பாயப் போகின்றன என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
மொத்த ஆபரேஷனும் கட்சிக்குள் ஓ.பி.எஸ்.சை இணைப்பதற்காக நடத்தப்படுகிறது. அத்துடன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டும், சசிகலா, ஓ.பி.எஸ். அ.தி.மு.க.விற்குள் இணைக்கப்பட வேண்டும், பா.ஜ.க.வுடனான கூட்டணியை அறிவிக்க வேண்டும், அடுத்து அமையக்கூடிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைந்து, அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பா.ஜ.க. சார்பில் துணை முதலமைச்சராக அமர வைக்கப்பட வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் திட்டம். இதற்கு எடப்பாடி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் ரெய்டுகள் தொடரும். வைத்திலிங்கம் பா.ஜ.க.வின் இந்த பிளானுக்கு தலையசைக்க வேண்டும், இல்லையென்றால் அவர் கைது செய்யப்படுவார். எடப்பாடியின் பினாமியான சேலம் இளங்கோவன் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் எடப்பாடியின் பினாமிகள் இளங்கோவனைப் போன்று ரெய்டுக்கு உள்ளாவார்கள்.
இவையெல்லாம் டிசம்பர் மாதம் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் உறுதி செய்யப் பட வேண்டும். எடப்பாடி எப்பொழுதும் சொல்வது போல பொதுக்குழுதான் கட்சி நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்பதை மறுபடியும் நிரூபிப்பது போல பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ்., வைத்தி லிங்கம் இணைக்கப்பட வேண்டும். அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட வேண்டும். அவர் டெல்லியில் மத்திய மந்திரி ஆவார். அ.தி.மு.க.வின் டெல்லி விவகாரங்களை அவர் கவனித்துக் கொள்வார். தமிழகத்தில் எடப்பாடி முதல்வர் வேட்பாளர். அவருக்கு சமமான மத்திய மந்திரி ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு ஏற்ற பதவி வழங்கப்பட வேண்டும். இதுதான் பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு முன்வைக்கும் திட்டம்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடி யாக தொடங்கப்பட வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் வைத்திலிங்கமும் எடப்பாடியும் அமர்ந்து பேசவேண்டும். இல்லையென்றால் ரெய்டு நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் என தமிழக அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இது அ.தி.மு.க.வில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. எடப்பாடி சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை துவக்கி வைத்தார் என தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் எதிர்வினைதான் இந்த ரெய்டு நடவடிக்கைகள். எடப்பாடிக்கு எதிராக கடுமையான அதிருப்தி கட்சிக்குள் நிலவிவரும் சூழலை தங்களுக்கு ஆதரவாக திருப்பி பா.ஜ.க. குளிர்காய நினைக்கிறது. தமிழக பா.ஜ.க. விவகாரங்களில் சமீப காலமாக நிர்மலா சீதாராமன் அதிக அளவில் கலந்து கொள்கிறார். அவரது ஆதரவாளரான கே.டி. ராகவனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இவையெல்லாம் இந்த மெகா பிளானின் ஒரு பகுதிதான் என்பதோடு, அ.தி.மு.க.வில் இந்நிகழ்வுகள் மிகப்பெரிய பூகம்பத்தை விளைவித்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி அரசியல் பார்வையாளர்கள்.