சாமானிய மக்க ளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக பல்வேறு ஆணையங்கள் செயல்பட்டுவருகின்றன. அதேபோல், நாளைய இந்தியாவை உருவாக்கக் கூடிய குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்ட வும், பாதுகாக்கவும் உரு வாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். இந்த ஆணையத் தின் மூலம், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்களைத் தடுக்க இயலும். ஆனால் இந்த ஆணையம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளாக செயல்படாமல் முடக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதும் செயல்படாத நிலையிலேயே இருக்கிறது என்றும், அதனால் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆணையத்துக்கான தலைவர், செயலா ளர், உறுப்பினர்களுக்கான பொறுப்புகள் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே செல்லும். மூன்றாண்டு கள் முடிந்ததும் புதிதாகத் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும். இந்த மூன்றாண்டு களுக்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின் அப்போது புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அப்படித்தான் அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த ஆணையத்திற்கு புதிய நிர்வாகிகள், உறுப் பினர்கள் நியமிக் கப்பட்டனர்.
ஆனால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்பதற்கு, ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழ் நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்த சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான நிர்வாகிகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, "எங்களது பணிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில் எப்படி புதிய ஆணையத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க முடியும்?'' என்ற கேள்வியை எழுப்பி, முன்னாள் உறுப்பினரான சரண்யா மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், இதுகுறித்த விசாரணையை உயர் நீதிமன்றமே பார்க்குமென்று தீர்ப்பளித்தது. அதன்பின்னர், இவ்வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இச்சூழலில், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணைய நிர்வாகிகளின் பதவிக்காலமும் முடிவடையும் தறுவாயில் உள்ளதால் ஆணையத்தின் செயல்பாடு முற்றிலும் தடைபட்டுள்ளது. ஆக, கடந்த பத்தாண்டுகளாக ஆணையம் இருந்தும் செயல்படவில்லை. தற்போது புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டும் அவர்களால் செயல்பட முடிய வில்லை. பழைய நிர்வாகிகளும் செயல் படவில்லை என்ற சூழல் நிலவுகிறது.
இந்த ஆணையத்தின் முக்கிய தேவையே, குழந்தைகளுக்கான முக்கியமான 4 சட்டப்பிரிவு களைச் செயல்படுத்துவது தொடர்பானது தான். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டம், இளம் சிறார் சட்டம் என முக்கியமான இந்த சட்டங்கள் தொடர்பான வழக்குகளை இந்த ஆணையத்தால் கையாள முடியவில்லை. என்.சி.ஆர்.டி. டேட்டாப்படி கடந்த ஆண்டில் மட்டும் 4,500க்கும் மேற்பட்ட போக்சோ சட்ட வழக்கு பதிவாகியுள்ளது. குழந்தைகள் திருமணம் 12% அளவுக்கு நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை, குழந்தைகள் உரிமைகள் மறுக்கப்படுவதையும், குழந்தை கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள் ளது என்பதையுமே காட்டுகிறது.
இதுகுறித்து பேசிய குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன், "இந்த ஜனவரியோடு முந்தைய ஆணையத்தின் காலம் முடிவடையும் சூழ்நிலை யில், மேலும் புதிதாக தொடங்கப்படும் ஆணையத்திற்கு சிறந்த கட்டடம் மற்றும் அதற்கான இணையதளத்தை நிறுவுவது போன்றவற்றுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு வெறும் 52 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதுபோன்று இல்லாமல், கேரளா போன்று 7 கோடி அளவிற்கான நிதி இதற்கென்று தனியாக ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் பல முன்னெடுப்பு கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட்டால் தான் வருங்காலத்தில் குழந்தைகளின் நலனை ஆணையத்தின் மூலம் பாதுகாக்க முடியும்'' என்றார்.
தற்போது குழந்தைகள் ஆணையம் செயல்படாத சூழ்நிலையில், மகளிர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொல்லப் படுகிறது. அதற்கென தனித்தலைவர் மற்றும் உறுப்பினர்களை வைத்து இயங்கிவருகிறார்கள். இந்த ஆணையத்திலும் 2021 வரையிலான 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டன, எவ்வள்வு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன என்ற விவரங்கள் இல்லை.
ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் 2022ஆம் ஆண்டு 2,616 மனுக்களும், 2023ஆம் ஆண்டு இதுவரை 2,960 மனுக்களும் வந்துள்ளன. மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் மாவட்டங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வுகள் காண வழிகாட்டுகிறார். இதுமட்டுமின்றி தற்போது மகளிர் ஆணையத் திற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, புகார் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எவ்வளவு புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன, இன்னும் எவ்வளவு பென்டிங் போன்ற விவரங்கள் ஏற்றப்பட்டுள்ளன. அதோடு, மகளிருக்கான மாரத்தான் போட்டி முன்னெடுக்கப்பட் டுள்ளது.
இதனைப்போன்று குழந்தைகள் ஆணையத்திற்கும் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு போது மான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, அதற்கான நிர்வாகிகள் நியமிக் கப்படுவது, இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு, இந்தியாவின் வருங்காலத் தூண்களான குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் நிலைநாட்டி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பான இந்தியாவை உருவாக்க முடியும் என்கிறார்கள் குழந்தைநல ஆர்வலர்கள்.