கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், வட இந்தியாவில் சிகிச்சை என்ற பெயரில் பலவித நம்பிக்கைகளும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.

குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கோசாலையொன்றில் அமைக்கப்பட்ட கோவிட் சிகிச்சை மையத்தில் அலோபதியுடன் இணைந்து பால், பசு மூத்திரம், நெய், சாணம், தயிர் இவையனைத்தும் இணைந்த பஞ்சகவ்யம் கோவிட் நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

re

டெட்டோடா கிராமத்தின் ராஜாராம் கோசாலை ஆசிரமத்தில்தான் 5,000 பசுக்களுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம் அமைந்துள்ளது. வேதலக்சண பஞ்சகவ்ய ஆயுர்வேதிக் கோவிட் தனிமைப்படுத்தல் மையம் என்பது இதன் பெயர்.

Advertisment

30 நோயாளிகளுடன் அமைந்துள்ள இந்த மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆயுர்வேத நிபுணர்களும் இணைந்து நோயாளிகளைக் கையாளுகின்றனராம். ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியும் இந்த மருத்துவ மையத்தில் உண்டாம். ஆனாலும், சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடைபெறுமாம்.

எல்லாம் சரி, பஞ்சகவ்யம் கோவிட்டை குணப்படுத்துகிறதா?, பஞ்சகவ்யத்தின் மருத்துவத் திறன் குறித்து எத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?, அதற்கான நிரூபணம் என்ன, அல்லது பெருகிவரும் கொரோனா நோயாளிகளுக்கான அலோபதி மருத்துவ வசதிகள் பூரணமாக இல்லாத நிலையில், நோயாளிகளின் கோபத்தை மடைமாற்ற இந்த சிகிச்சை மையம் பயன்படுத்தப்படுகிறதா என்பதற்குச் சரியான விடையில்லை.

tre

Advertisment

இந்து மதத்தில் பசு மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகக் கருதப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் உறையும் பசுவிலிருந்து கிடைக்கும் எதுவுமே புனிதமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பசு சிறுநீரைக் குடிப்பது, பசுஞ்சாணத்தை உடலில் பூசிக் குளிப்பது அனைத்தும் கோவிட் தொற்றிலிருந்து காக்கும் என சிலர் சொல்லும்போது, அப்பாவி நபர்கள் அதனை எளிதாக நம்பிவிடுகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டு விடுதலையான பிரக்யாசிங் தாக்கூர், போபால் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராவார். கொரோனா இரண்டாவது அலையால் மத்தியப்பிர தேசத்தில் தீவிரமாகப் பாதிக்கப்பட் டுள்ள மாவட்டம் பிரக்யாசிங்கின் தொகுதிக்குள்தான் வருகிறது. மக்களுக்கு நிவாரணமளிக்கவோ, குறைகளையவோ அவர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் பசுவின் கோமியத்தைக் குடிப்பதால்தான் தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவர் கூறியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

கடந்த மே 16-ஆம் தேதி சாந்த் நகரில் பேசிய அவர், “ஒரு நாட்டுப் பசுவின் கோமியத்தைக் குடிப்பது, நமது நுரையீரல் தொற்றுகளைக் குணப்படுத்துகிறது” என மருத்துவத்துக்கு எதிரான மூடக் கருத்துகளை மக்கள் நடுவே அள்ளிவிட்டார். தவிரவும், கோமியம் குடித்ததால்தான் தனக்கு கொரோனா தொற்று வரவில்லை எனவும் உறுதி படக்கூறினார். ஆனால் இதே பிரக்யா சிங், கொரோனா முதல் அலையின் போது, கொரோனா தொற்று அறிகுறி கள் தென்பட்டபோது, மேலும் சற்றுக் கூடுதலாக கோமியம் குடிப்பதை விட்டுவிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்னால், பசுவின் கோமியம்தான் தனது புற்றுநோயைக் குணப்படுத்தியதாகச் சொல்லிக்கொண்டு திரிந்தார். தற்போது கொரோனாவை குணப்படுத்துவதாகச் சொல்கிறார்.

treat

பிரக்யாசிங்கின் இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பி.சி. சர்மா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷவர்தனுக்கு, “மத்திய அரசாங்கம் பசு மூத்திரம் கொரோனா தொற்றுக்கு நிவாரணமளிக்கிறது என்பதை உறுதிசெய்துவிட்டதா?” எனக் கேட்டு கடிதமெழுதியிருக்கிறார்.

வாரத்துக்கு ஒருமுறை உடலெல்லாம் பசு சிறுநீரில் ஊறிய சாணத்தைப் பூசிக்கொண்டு, பசுவைத் தொட்டுப் பேசிக்கொண்டு சென்றால் தங்களுக்கு கொரோனா வராது என குஜராத் மக்கள் நம்புகின்றனர்.

ஆங்கில மருந்துக் கம்பெனியில் இணை மேலாளராகப் பணியாற்றும் கௌதம் மணிலால் என்பவர், “மருத்துவர்கள் கூட இங்கே வருகின்றனர். இந்த சிகிச்சை முறை அவர்களது நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதாக நம்புவதோடு, நோயாளிகளை தைரியமாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படியும் ஊக்கப்படுத்துகின்றனர்.” மணிலால் எந்த மருத்துவர்களைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை.

குஜராத்தின் ஸ்ரீஸ்வாமிநாராயணன் குருகுல விஸ்வவித்யா பிரதிஸ்தானம் எனும் துறவிகள் மடத்தில்தான் இந்த சாணக்குளியல் வைத்தியம் நடக்கிறது.

ஆனால் உண்மையில் இந்திய மருத்துவக் கழகத்தின் தேசியத் தலைவரான டாக்டர் ஜெயலாலோ, “"சாணமோ, பசு சிறுநீரோ நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்று எதுவும் கிடையாது. மாறாக, இப்படிச் செய்வதால் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும் நோய்கள் தொற்ற வழியிருக்கிறது. தவிரவும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி இப்படி சாணம் பூசிக்கொண்டு நிற்கையில் கொரோனா தொற்று பரவவும் வழியிருக்கிறது''’என எச்சரிக்கிறார்.

இதற்கிடையில் கொரோனாவுக்கு பசு சிறுநீர், சாணம் மருந்து என்பதற்கு மறுப்புத் தெரிவித்து முகநூலில் பதிவிட்டதற்காக பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவையும், சமூகச் செயல்பாட்டாளர் எரன்ட்ரோவையும் மணிப்பூர் மாநில அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

-க.சுப்பிரமணியன்