கவர்னரின் பேரன் என்று உதார்விட்டபடி ஏராள மானோரிடம், கோடிக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டிய மோசடி மன்னன் ஒருவரை, சுற்றி வளைத்து மடக்கியிருக்கிறது சென்னை போலீஸ்.
அந்த மோசடி மன்னனின் பெயர், நாகராஜ் சாஹர். ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குடியேறி, பிறகு தனக்குத் தெரிந்த நண்பர்களின் மூலமாக பிரபல ரிவர்வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் தற்போது வசித்து வருகிறார். இவரது மகனும் மகளும் கூட, மோசடித் தொழிலில் நாகராஜோடு கைகோத்திருந்ததுதான் உபரி ஷாக்.
நாகராஜ் சாஹர், பா.ஜ.க. முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டு, அவற்றைக் காட்டியே பலரையும் ஏமாற்றியிருக்கிறார். மேலும் தன்னை ஒரு முக்கிய பிரமுகரின் பினாமி என்றும், தான்தான் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் பேரன் என்றும் உதார் விட்டு வந்ததோடு, தான் சொன்னால் கோடிக்கணக்கில் கடன் கிடைக்கும் என்று பலருக்கும் ஆசைகாட்டி, மோசம் செய்திருக்கிறார். இவரிடம், திரைப்புள்ளிகள் தொடங்கி அரசியல் புள்ளிகள் பலரும் ஏமாந்ததுதான் பெருங்கொடுமை.
இந்தப் பட்டியலில் சிக்கியவர்தான் முகமது நூர்தீன். சென்னை அடையாறைச் சேர்ந்தவர் இவர், மருந்துக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இது குறித்து நம்மிடம் பேசிய நூர்தீன், "முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் பேரன்னு சொன்னதால்தான் இவரை நம்பினோம். 75 கோடி ரூபாய் லோன் வாங்கித் தர்றதாச் சொன்னவர், அதுக்கு சர்வீஸ் சார்ஜுன்னு சொல்லி, பூர்ணிமா என்பவரின் வங்கிக் கணக்கில், முதல்கட்டமா 60 லட்சம் போடச்சொல்லி வாங்கினார். அதன் பிறகு, குடும்பத் திருமணத்துக்குத் தேவைன்னு சொல்லி, நகையாக 22 லட்சம் ரூபாய் அளவுக்கு வாங்கித் தரச்சொன்னார். இப்படி தொடர்ந்து வாங்கிய நாகராஜ், லோன் வாங்கித் தரவே இல்லை. பிறகுதான் இவர் பீலா நாகராஜன் என்பதைத் தெரிஞ்சிக்கிட்டு 2019லில் அவர்மேல் புகார் கொடுத்தோம். புகாருக்கு நடவடிக்கை இல்லாததால், இப்ப மறுபடியும் அடையாறு ஏ.சி.யான நெல்சனிடம் புகார் கொடுத்தோம். உடனே ஒரு ஸ்பெஷல் டீமைப் போட்டு, நாகராஜ் சாஹரைக் கைது செஞ்சிருக்காங்க. எங்களைப் போல் பல பேர் இவரிடம் கோடிகளைக் கொடுத்து ஏமாந்திருக்காங்க''’என்கிறார்.
கைதான, நாகராஜ் சாஹரிடம் நடக்கும் விசாரணையில் மேலும் பல திடுக் தகவல்கள் வெளிவரலாம் என்கிறது காக்கிகள் தரப்பு.