ஆக.30 அன்று எஸ்.ஐ. ரவிக்குமார், எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான இரண்டு தனிப்படைகள் தூத்துக்குடியின் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் விழிப்பாக வாகனம் ஒன்றை எதிர்பார்த்திருந்தனர். அந்த வழியாக வந்த இரண்டு சொகுசுக் கார்களை மடக்கித் துருவ, இரண்டு கார்களிலும் 5 மூட்டைகளில் அடைக்கப்பட்ட 245 கிலோ கஞ்சா இருந்தது. அதனைக் கைப்பற்றிய தனிப்படையினர் இரண்டு கார்களின் டிரைவர்கள், அதிலிருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்டவர்களை விசாரித் திருக்கிறார்கள். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் என்றாலும் சர்வதேச சந்தைக்குக் கடத்தும்பட்சத்தில் அதன் மதிப்பு ஐந்து மடங்காகும்.
காரிலிருந்த பெண்களில் ஸ்ரீமதி நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவர். பழக்கம் காரணமாக இவர்களுடன் இந்தக் கடத்தலில் இணைந்திருக்கிறார். சட்டக்கல்லூரி மாணவியான ஸ்ரீமதி திருமண மானவர். மற்றொருவர் 30 வயதான ஷிவானி. தூத்துக்குடியின் மாதவ நாயர் காலனியைச் சேர்ந்த ஆரோன் ராஜேஷின் மனைவி. இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கஞ்சா கடத்துவதை வழக்க மாகக் கொண்டவர். கடத்தலில் நெட்வொர்க்குகளைக் கொண்ட தேர்ந்த புள்ளி. ஆந்திர போலீசாரால் தேடப்படுபவர் ஆரோன்.
ஆந்திராவின் நக்சலைட் ஆதிக்க கம்மம் நகரக் காடுகளில் விளைவிக்கப்படுகிற தரமான கஞ்சாவை மூட்டைகளாக்கி, வாகனத்தின் ரகசிய அறையில் வைத்து ஆந்திராவிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளத்திற்கு கொண்டு வருபவர். வழியோரங்களில் போலீசின் தீவிரக் கெடுபிடி யிலிருந்து தப்பிப்பதற்காக பெண்களாகிய எங்களைப் பயன்படுத்தி கடத்திவருபவர் ஆரோன் என்று விசா ரணையில் சொல்லியிருக் கிறார் ஸ்ரீமதி.
பிடிபட்ட இந்த விஷயங்களனைத்தையும் எஸ்.பி.க்குத் தெரியப்படுத்த, மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தப் படையும் பல கோணங்களில் நூல்பிடித்து கடத்தலில் தொடர்புடைய தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த 16 பேரை தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதில் பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வின் நிர்வாகிகள் சிக்கியதுதான் காக்கிகளை அதிரவைத்துள்ளது. இரண்டு பெண்களோடு டிரைவர் இசக்கிகணேஷ், ஆரோன், தூத்துக்குடியின் விக்னேஸ் வரன், அருண்குமார், திரு மணி, ராஜா, காளீஸ்வரன், திருமணிகுமரன், தேவ னாம்பட்டியைச் சேர்ந்த சரவணன், சென்னை ரங்க நாதபுரத்தைச் சேர்ந்த சம்பத்குமார், நுங்கம்பாக்கம் ஜோசப் கனிட் ஸ்ரீபாலன், செயின்ட்தாமஸ் மவுண்ட் டைச் சேர்ந்த தயாளன், சாத்தான்குளம் மணிகண்டன், குமரி மாவட்டம் இணையம் பகுதியின் ஜெனி உள்ளிட்டவர்களை அள்ளிக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
இவர்களில் ராஜா பா.ம.க. நிர்வாகி. வக்கீலான மணிகண்டன் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். வக்கீல் அணியின் முக்கியப் பொறுப்பிற்காக கட்சித் தலைமைக்கு தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. தலைவரால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறாராம்.
ஆரோன் ஆந்திராவிலிருந்து கடத்திவரும் கஞ்சா மூட்டைகளை, தான் குத்தகைக்கு எடுத் திருக்கும் சாத்தான்குளத்திலிருக்கும் ஒதுக்குப்புற மான பண்ணைத் தோப்பிற்கு கொண்டுவருவ துண்டு. பலபேரைக் கொண்ட நெட்ஒர்க்குடன் செயல்படுகிற கடத்தல் புள்ளியான ஆரோன், அந்தத் தோப்பை வெகு நாட்களாக டிரான்ஷிப் பாய்ண்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். கடத்திவரப் படுகிற மொத்த கஞ்சா மூட்டை களையும் இங்கு கொண்டுவருகிற ஆரோன், அதனை தரம்பிரித்து இலங் கைக்குப் போட்களில் கடத்துவதற்கு ஏற்ற வகையில் சேப்டியான பண்டல்களாகப் போட்டு தூத்துக்குடி மற்றும் தருவைக்குளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்துவதுண்டாம்.
அண்மையில் சிக்கிய 250 கிலோ கஞ்சா மூட்டைகள், கடந்த வாரம் கோவில்பட்டி வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ கஞ்சா மூட்டைகள் இந்தத் தோப்பிற்கு கொண்டுவரப்பட்டு ரீபேக் செய்யப்பட்டு கடத்தப்படவிருந்தது என்றார் தனிப்படையின் அந்த முக்கிய அதிகாரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை முனிச்சாலை ரோட்டில் 200 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய மதுரைக் கும்பலிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியின் ஆரோன் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ கஞ்சாவில் 200 கிலோ வாங்கியதையும், ஆரோன் கொண்டுசென்ற ரெண்டாயிரம் கிலோ கஞ்சா இலங்கைக்குக் கடத்தும் பொருட்டு அவரின் சாத்தான்குளம் தோப்பிற்கு கொண்டுசெல்லப் பட்டதையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்தே மதுரையின் கீரைத்துரை போலீஸ், தூத்துக்குடி போலீசாரின் துணையோடு சாத்தான்குளத்தின் தோப்பை முற்றுகையிட்ட வர்கள், அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஆனால் ஆரோன் உள்ளிட்ட அவரது சகாக்கள் பிடிபடாமல் தப்பிவிட்டனராம். இப்படி அண்மையில் ஆரோன் தரப்பினர் கடத்திய கஞ்சாவின் மதிப்பு மட்டும் ரூ.21 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
“கஞ்சாவை இலங்கைக்கு எந்தவகையில் கடத்துவது என்று மூளையாகச் செயல்பட்டது, நுங்கம் பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் கனிட் ஸ்ரீபாலன் என்பவர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சர்வதேச அளவில் கடத்தல் மாஃபியாக்களின் தொடர்பு நெட்வொர்க்குகள் கொண்டவர். இலங்கையில் இவர் மீது போதை கடத்தல் வழக்குகள் நிலுவையிலிருந்தாலும், இன்டர்போல், ’’ரா’’ உள்ளிட்ட மிகப்பெரிய உளவு அமைப்புகளின் வாண்டடு புள்ளி. பல வருடங்களாக சென்னையிலிருந்துகொண்டே ஆரோன், இலங்கை உள்ளிட்ட சர்வதேச போதை கடத்தல் டான்களுக்கு கஞ்சா கடத்தல் புரோக்கராகச் செயல்பட்டுவந்தவர்.
ஜோசப் கனிட் ஸ்ரீபாலன் பிடிபட்டதை இலங்கை உள்பட பிற நாட்டு உளவு அமைப்புகளுக்கு முறைப்படி தெரிவித்து விட்டோம். மொத்தப்பேர்களும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்''’என்கிறார் தூத்துக்குடி எஸ்.பி.யான பாலாஜி சரவணன்.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதே தமிழகத்துக்கு நல்லது!
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்