school

வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த வெங்கட்டாபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தை மதுக்கூடமாக்கி கும்மாளமடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நடிகர் ஃபகத் பாசி-ன் "ஆவேசம்'’ படத்திலுள்ள இலுமினாட்டி பாடலை பின்னணி இசையாக்கி, அங்கன்வாடி மையத்தில் மது குடிப்பது, புகைப்பது, கும்மாளமடிப்பதென, வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அமுதா, தி.மு.க. வேலூர் ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் தம்பதியின் மகன் சரணும், அவருடைய நண்பர்களும் வீடியோ எடுத்து, யூட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். சரணுக்கு சினிமா ஆசை இருப்பதால் அடிக்கடி ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிடுகிறாராம். தனது தாய் சேர்மனாக இருப்பதால், தனது வீடியோவுக்கு அவரின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள். குழந்தைகளுக்கான அரசு பள்ளியில் நடந்த சமூகவிரோதச் செயலால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.

Advertisment

அங்கன்வாடி மைய சாவி இவர்களிடம் எப்படி வந்தது? என வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விசாரித்தபோது, ""கோடை விடுமுறை என்பதால் பள்ளியைப் பூட்டி சாவிகளை எங்களிடம் ஒப்படைப்பார்கள். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிகளில் சீரமைப்புப்பணியாக பெயின்ட் அடிப்பது, ஜன்னல் கதவுகளைச் சரிசெய்வது போன்ற பணிகள் நடைபெறும். இந்த பணிகளை சேர்மனின் கணவரும், ஒ.செ.வுமான ஞானசேகரன் பினாமி பெயரில் செய்கிறார். வெங்கட்டாபுரம் அங்கன்வாடி சீரமைப்புப் பணிகள் நடப்பதால் சாவி ஞானசேகரிடம் உள்ளது. ஞானசேகரின் அக்கா மகன் வெங்கடேசன், எங்கள் அலுவலகத்தில் தற்கா-க கார் ஓட்டுநராக ஸ்கீம் பி.டி.ஓ.வுக்கு கார் ஓட்டுகிறார். அலுவலக டிரைவராக இருந்தாலும், தனது மாமா எடுத்துச்செய்யும் பணிகளை வெங்கடேசன் தான் மேற்பார்வையிடுகிறார். அந்த வெங்கடேசனும், சரணும் சேர்ந்து பள்ளிக்குள் வீடியோ எடுத்துள்ளார்கள்'' என்கிறார்கள்.

வீடியோ விவகாரம் பெரிதானதும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, வேலூர் பி.டி.ஓ. கார்த்திகேயனிடம் புகார் தரச்சொல்லிஉத்தரவிட்டார். ஆளுங்கட்சி பிரமுகர்கள் தந்த நெருக்கடியின் காரணமாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் ஐ.பி.சி. 510, 290, 448 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க. பிரமுகரின் மகன் சரண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சில மாதங்களுக்கு முன்பு கடலூர் வேப்பூரில் ஒரு தென்னந்தோப்பில் கார் ஒன்று எரிந்து போயிருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இதே சரண், சுற்றுலா சென்றபோது கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதற்காக போதையில் காரை தீ வைத்து எரித்துவிட்டு ஊருக்குப்போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.