தமிழ், மலையாளம், இருளா, கொடகு, குரும்பா, தோடா, கோடா, படாகா, கன்னடா, கொராகா, துளு, தெலுங்கு, கோண்டீ, கோண்டா, குல், குவி, பெங்கோ, மண்டா, கோலாமீ, நைகிரி, நைகீ, பரிஜீ, ஒல்லாரி, கடாபா, குருக்ஸ், மால்டோ, பிராகுல் போன்ற 26 மொழிகள் திராவிடக் குடும்ப மொழிகளாகும். இதில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு என 5 மொழிகள் தான் மக்கள் பேசுகின்றனர். அதிலும் துளு எழுத்து வடிவத்தில் இல்லை. மொழியை காப்பாற்ற வேண்டுமென தமிழறிஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகம். இதன் தமிழ் பிரிவு, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து 2017 டிசம்பர் மாதம் நக்கீரன் இதழில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதனை மேற்கோள்காட்டி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராகயிருந்த மு.க.ஸ்டாலின், "திராவிடன் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு அரசு உதவிகள் செய்து பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சி அதனைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது தி.மு.க. தலைவரே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிக்கு வந்துள்ளார். திராவிட மாடலை முன்னிறுத்தும் அவரின் பார்வை, திராவிடன் பல்கலைக்கழகத் தின் மீது திரும்பவேண்டும் என்கிற கோரிக்கை அங்குள்ள தமிழ் மாணவர்களிடமிருந்தே எழுந்துள்ளது.
திராவிடன் பல்கலைக்கழகம் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் நகரிலிருந்து 7 கி.மீ. தொலை வில் 1100 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறையின் நோக்கமே தமிழ்மொழி வளர்ச்சிக்காக வும், ஆய்வுக்காகவும், தமிழின் தொன்மையான நூல்களான சங்க இலக்கியம், தொல்காப்பியம், குறளோவியம் போன்றவற்றை பிறமொழிகளுக்கு கொண்டு செல்லவேண்டும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மற்ற மொழியினர் அறிந்துகொள்ள வேண்டும், தெலுங்கு, கன்னடம், மலையாள இலக்கிய நூல்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும், பிற மொழிகளின் அதே தன்மைகளை தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும், படிக்கவேண்டும் என்பதுதான்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்த மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பி ரமணியத்தின் எண்ணத்தில், முயற்சியால் உருவானது திராவிடன் பல்கலைக்கழகம். ஆந்திராவில் என்.டி.ராமா ராவ் ஆட்சியில் முக்கிய பங்குவகித்த தமிழகத்தை சேர்ந்த செல்லப்பா, காசிவிஸ்வநாதன் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் திராவிட தத்துவ மையத்தை ஆந்திராவில் தொடங்கிய சுப்பிரமணியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா அரசின் சார்பில் திராவிடப் பல்கலைக்கழகத்தை தமிழகம் -ஆந்திரா -கர்நாடகா மூன்று மாநில எல்லை இணையும் பகுதியில் அமைக்க முடிவுசெய்து அதன்படியே குப்பம் தேர்வுசெய்யப்பட்டது. 1997-ல் கலைஞர் அரசு 50 லட்ச ரூபாய் நிதியளித்தது. தொடக்கத்தில் ஆராய்ச்சி படிப்புகள் மட்டுமே இருந்தன. பின்னர் இளநிலை, முதுநிலை, உயர்நிலை படிப்புக்கான பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு இப்போது சுமார் 1500 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசியபோது, இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் அனைத்துப் பாடப்பிரிவிலும் தலா 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உண்டு. மீதியுள்ள 60 சதவீதம் பொதுப்பிரிவாக இருக்கும். வேண்டுமானால் இதிலும் பிறமாநில மாணவர்கள் சேரலாம். பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ஒருவர் உறுப்பினர். தமிழ்த்துறையில் இளங்கலை, முதுகலை, எம்.பி.எல்., பி.எச்டி போன்ற ஆய்வு படிப்புக்கும் மாணவர்கள் இங்கு குறைவாகவே வருகின்றனர். அதற்கு காரணம், தமிழ்நாட்டின் எல்லையிலுள்ள கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்குவந்து படிப்பதற்குத் தயங்குகின்றனர். இங்கு படித்தால் சான்றிதழுக்கு மதிப்பில்லை, வேலை கிடைக்காது என ஒரு பொய் பிரச் சாரம் நடக்கிறது. இங்கு படித்துப் பெறும் பட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே செல்லுபடியாகும் என அரசு விளம்பரப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் சீட் நிரம்பிவிட்டால் இங்கு வந்து சேர தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கவேண்டும் என்றவர்கள், தஞ்சை தமிழ் பல்கலைக் கழத்தின் துணைவேந்தராக தற்போதுள்ள பாலசுப்பிரமணியன், திராவிடன் பல்கலைக் கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதையும் குறிப்பிட்டனர்.
இங்குள்ள தமிழக மாணவர்களோ, "எம்.ஏ.வில் 10 பேர், இளங்கலையில் 17 பேர், ஆய்வு மாணவர்களாக 6 பேர் உள்ளோம். இளங்கலை தவிர மற்றவர்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் தமிழ்நாடு அரசு தருகிறது, இது மிகவும் குறைவு. அதையும் ஆண்டின் இறுதியில் அல்லது அதற்கடுத்த ஆண்டுதான் தருகிறார்கள். 2018-2019-ஆம் ஆண்டுக்கான ஸ்காலர்ஷிப் இன்னும் தரவில்லை. அதேபோல் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்காலர்ஷிப் வழங்குவ தில்லை. இத்தனைக்கும் நாங்கள் எந்த கோர்ஸில் சேர்ந்தாலும் தமிழையும் ஒரு பாடமாக எடுக்கிறோம். அதனை அரசு கவனத்தில் எடுத்து ஸ்காலர்ஷிப் தரவேண்டும்'' என கோரினர்.
"தமிழ்த்துறையில் பேராசிரியர், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரி யர்கள் பதவிகளில் தமிழ்நாடு அரசு 4 பேரை நியமிக்க வேண்டும். ஆனால் 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். கா- இடம் பற்றி முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை. இப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனம் செலுத்துவார்'' என்றார்கள் நம்பிக்கையுடன்.
திராவிடன் பல்கலைக்கழகத்திலுள்ள பிரமாண்டமான நூலகத்தில் தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாள நூல்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கப்பட்டிருந்தன. தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. "தமிழ் நூல்கள் குறைவாக இருப்பதால் எங்களைப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கு சிரமமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனக்கு வரும் நூல்களை நூலகங்களுக்கு தந்துவருகிறார். ஆய்வு படிப்புக்கு தேவையான நூல்களை இந்த நூலகத்துக்கு வழங்கினால் நம் மாணவர்களுக்கும், தமிழ்மொழி குறித்து ஆய்வுசெய்யும் பிறமொழி மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்'' என கோரிக்கை விடுத்தனர் மாணவர்கள்.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை சேர்ந்தவர்களோ, "இந்தப் பல்கலைகழகம் தொடங்கியபோது அதற்கான நிதியை ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தனர். தொடக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா அரசு கள் தலா 50 லட்சம் தந் துள்ளன. அதன்பின் இந்த மூன்று மாநிலங்களும் நிதி வழங்குவதில்லை. நிதியை தாராளமாக வழங்கினால் இங்கு பல பாடப்பிரிவுகள் தொடங்கலாம், நிறைய மாணவர்கள் சேர்ந்து படிப்பார்கள். பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியில் மூலிகைப் பண்ணை உள்ளது. சித்தர்களின் வாழ்வு, சித்த மருத்துவம் குறித்த படிப்புகளை இங்கு தொடங்கலாம், ஆய்வு மாணவர்களை சேர்க்கலாம். அப்படிச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் குறித்து ஆந்திரா, கர்நாடகா மாணவர்களும், மக்களும் அறிந்துகொள்ள முடியும், அவர்களும் ஆய்வு செய்வார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் பிற மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது'' என்றார்கள். அதுபோல, "கலைஞர் இருக்கை' ஒன்றை தமிழ்நாட்டின் சார்பில் உருவாக்கினால் ஆய்வுப் பணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
தொடக்கத்தில் "பெரியார் பவன்' என்கிற பெயரில் கட்டப்பட்ட கட்டிடத்தில்தான் பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்தது. அதன்பின் தமிழ்நாட்டின் திருவள்ளுவர், ஆந்திரா வேமண்ணா, மலையாள நாராயண குரு, கர்நாடகா பசவண்ணா பெயரில் தனித்தனி கட்டடம் கட்டப்பட்டு அவர்களின் சிலை முகப்பில் வைக்கப்பட்டது. பெரியார் பவன் இன்னமும் தகர ஷீட் போடப்பட்ட கட்டடமாகவே உள்ளது. அங்கு உடற்கல் வித் துறை, வணிகவியல் துறை இயங்கிவருகிறது. இங்கு ஒரு பெரியார் சிலை வைக்கவேண்டும்'' என சொல்லி ஆச்சர்யத்தை தந்தார் ஒரு மலையாள பேராசிரியர்.
பல்கலைக்கழகத்தில் பெரும் சிக்கலாகியிருப்பது அலுவலக கோப்புகள் பரிமாற்றம்தான். தமிழ்வளர்ச்சித் துறை ஒரு கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பு கிறது என்றால் அது தமிழ் மொழியில் வரும். அந்தக் கடிதம் தமிழ்த்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள உதவி பேராசிரியர்கள் யாராவது அதனை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும். அந்தக் கடிதத்துக்கு அவர்கள் ஆங்கிலத்தில் பதில் தருவார்கள். அதனை மீண்டும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது பெரும் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தமிழ் -ஆங்கிலம் அறிந்த அலுவலர்கள் நியமித்தால் இந்தப் பணிகளை செய்ய ஏதுவாகயிருக்கும் என்கிறார்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தும்மல ராமகிருஷ்ணாவை நாம் சந்தித்து பேசியபோது, "திராவிடன் பல்கலைக்கழகம் தொடங்க தமிழ்நாடும் மிக முக்கிய காரணம். தொடக்கம் முதலே, தமிழ்நாடு இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நிர்வாகம் செய்வதை அறிந்தேன். பல்கலைக்கழகத்துக்கு அதிக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.