மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானதற்கு தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருந்து ஏற்பாடுசெய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், கூட்டத்தில் நேரடியாக நகர மாவட்டச் செயலாளர் தளபதியை குற்றஞ்சாட்டிப் பேசியது மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி யையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
மேடையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அப்படி என்ன பேசினார்?
"தி.மு.க.வில் சில நாட்களாக வரும் தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களை புறக் கணிக்கக் கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. தலைவரின் பேச்சை மீறி சிலர் நடந்து கொள்கின்றனர். தலைவருக்காக நடத்தப் படக்கூடிய இந்த நிகழ்ச்சியை அவர்களும் புறக்கணித்து, யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
நான் ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் அதை இதயத்திலிருந்து கூறுவேன். அடிப்படை யாக எனக்கென கொள்கைத் தத்துவம் உண்டு. எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதனை நான் பின்பற்றுவேன். தந்தை பெரியாரின் கருத்தை நான் பின்பற்றுகிறவன். நான் யாருக்கும் அடிமையாக இருக்கத் தேவையில்லை. என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். நான் பெரிய மனிதன். எனக்காக ஜால்ரா தட்டு என யாரையும் சொல்லமாட்டேன். பெரிய மனிதனாக இருக்க முடியவில்லையென்றாலும் குட்டி மனிதர்களாக இருக்காதீர்கள். யாரிடமும் அவரைப் போய் பார்க்காதே, போஸ்டரில் பெயரைப் போடாதே என சொல்லமாட்டேன். நான் பெரிய மனிதன். எனக்காக போஸ்டர் ஒட்டு, வேலை செய் என சொல்லமாட்டேன். நான் பெரிய மனிதன்போல் நடந்துகொள்பவன்.
என்னால் பலனடைந்தவர்கள் பலர் மதுரையில் இருக்கிறார்கள். நான் எப்போதும் செய்நன்றி மறக்கமாட்டேன். நான் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. நான் தனி பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். 5 முறை அரசியல் அழைப்பு வந்தது. நான் தவிர்த்தேன். 6-வது முறையாக வந்த அழைப்பை ஏற்றேன்.
என் தலைவர் எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளார். நான் அதிலிருந்து கீழிடத்திற்கு இறங்க விரும்பவில்லை. இயற்கையில் என்ன நடக்குமோ அது நடக்கும். தகுதியுள்ள, குறையில்லாத, பெருந்தன்மையுள்ள ஆட்களை வீழ்த்த முடியாது. சிலர் தி.மு.க. கட்சிப் பொறுப்பைத் தருவதாகக் கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத் துள்ளனர். ஆனால் என் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்''’என்று பொங்கி வழிந்தார்.
"ஏன் இவ்வளவு தூரம் ஆதங்கப் படுகிறார் பி.டி.ஆர் தியாகராஜன்'' என தளபதியிடமே கேட்டோம். ’
"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு எப்போதுமே அவர்மேல் மிகுந்த மரியாதை உள்ளது. அவர் நம் கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம். நல்ல அறிவாளி. நிர்வாகத்திறன் உள்ளவர். சிறந்த பண்பாளர். அப்படிப்பட்டவர் ஏன் இப்படிப் பேசினார் என்றுதான் புரியவில்லை. அவருடன் இருப்பவர் கள் தவறாக அவருக்கு வழிகாட்டுகின்றனர். இப்படி ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, என்னை அழைத்தால் நான் அதை முன்னின்று செய்யத் தயாராக இருக்கிறேன். அவர் என்னை அழைக்கவே இல்லை.
தி.மு.க.வின் கட்டமைப்பு விதிகள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சி என் றால் முதலில் அந்த நகர் மாவட்ட செயலாளருக் குத்தான் முதலில் சொல்லவேண்டும். இவ்வளவு காலம் இப்படிதான் நடக்கிறது. மற்ற கட்சிகளைப்போல் இல்லை. தி.மு.க.வில் அமைச்சரே ஆனாலும், கட்சி மாவட்ட செயலாளரிடம் தகவலைச் சொல்லவேண்டும். இந்த அடிப்படையில் அமைச்சரிடமிருந்தோ, இல்லை அவரின் உதவியாளரிடமிருந்தோ நிகழ்ச்சிக்கு அழைப்பே இல்லை. நான் எந்த ஈகோவும் பார்க்கமாட்டேன். யாரையும் போகக்கூடாது என்று சொல்லவே இல்லை. இது என் தாய்மேல் சத்தியம். நான் உயிராக போற்றக்கூடிய என் தலைவன்மேல் சத்தியம்''’என்றார்
நிதியமைச்ச ரின் தந்தை காலம் தொட்டு நெடுங்கால மாக அவருடன் இருக்கும் ஆதரவாளர்களிடம் பேசினோம்.
"நடந்து முடிந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் தேர்தலில் இந்தமுறை பி.டி.ஆர். தியாகராஜன், தன் ஆதரவாளராக அதலை செந்திலை நிறுத்தினார். அவர்தான் அடுத்த மாவட்டச் செயலாலர் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் பெரும்பான்மையான கழக நிர்வாகிகள் தளபதி பக்கமிருக்க... கடைசியில் மீண்டும் தளபதியே தேர்ந்தெடுக் கப்பட்டார். இது கொஞ்சம் பி.டி.ஆருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
விருந்து நிகழ்ச்சி அய்யாவின் ஆதரவாளர் களான மேயரின் கணவர் பொன்வசந்த், மிசா செந்தில், அதலை செந்தில், மேலமாசிவீதி சரவணன், எஸ்.ஆர்.கோபி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு, பி.டி.ஆர்.தியாகராஜனை தலைமை ஏற்கவைத்துள்ளார்கள். இந்த விருந்துக்குப் போகவேண்டாம் என்று தளபதி பெரும்பான்மையான நிர்வாகிகளை வராமல் தடுத்துவிட்டார் என்று அவரிடம் சொல்ல, அதில் சூடாகித்தான், இதுபோல் காட்டமாக பி.டி.ஆர்.தியாகராஜன் பேசினார். அவர் இப்படி பேச்கூடியவரே இல்லை. இவர்களின் சொந்தப் பிரச்சனைக்காக அய்யாவைப் பயன்படுத்து கின்றனர். இது எதில் கொண்டுபோய் விடுமோ''’என்று ஆதங்கப்படுகின்றனர்.