நான்காண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு. இந்தச் சூழலில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் பிரமாண்டமான சந்திப்பு நிகழ்வை நடத்தினார் ஸ்டாலின்.

சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் தமிழக அரசின் செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன் ஐ.ஏ.எஸ். டீம். இந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி, மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., டி.ஜி.பி. சங்கர் ஜூவால், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், பிரதிநிதிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மதிய விருந்துடன் முடிய 3 மணிக்கும் மேலானது.

cm

நிகழ்ச்சியில் முதல்வர் உட்பட மேடையில் யாரும் அமரவில்லை. மேடைக்கு கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அனைவருடன் அமர்ந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். பேசுபவர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து மேடையேறி மைக் பிடித்தனர்.

சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரை யும் வரவேற்றுப் பேசினார் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். இதனையடுத்து தொடக்க உரையாற்றிய ஸ்டாலின், "இங்கு இருக்கக்கூடிய பலரும் எனக்கு ஓரளவுக்கு தெரிந்த முகம்தான். நிறைய பேர்களிடம் நேரடியாகவும், தொலைபேசியிலும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவன் நான். அதே நேரத்தில், இன்றைக்கு ஒரே நேரத்தில், உங்களை ஒருசேர சந்திப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்.

Advertisment

தமிழக மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று கடந்த 2021, மே 6-ந்தேதி தி.மு.க. ஆட்சி அமைந்தது. 7-ந் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதி களை கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு நிறைவேற்றியிருக்கிறோம்.

cm-nakkheerangopal

புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை நிறைவேற்றுவதில் அக்கறையாக இருக்கின்றோம். சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக ஒவ்வொரு நாளும் இருந்து வருகிறது. இது, உங்களுக்கு நன்றாகத் தெரியும்! சரியான இலக்கை நிர்ணயித்து, அதில் உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது. முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் ஒன்றிய அரசு இன்னொரு பக்கம்! இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது.

Advertisment

அரசுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கொள்கை அரசு! இன்னொன்று, சேவை அரசு! திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும் கொள்கை, சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகின்ற அரசாக இருக்கிறது. இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதையும், எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் எந்த இடத்திலும் கொள்கையில் நாங்கள் தடம் மாறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளில் நாங்கள் சோர்ந்து போகவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் தி.மு.க. அரசின் முத்திரைத் திட்டங்கள்.

cc

இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்களுடைய பங்கு மிக அதிகம். அதற்கு முதலில் என்னுடைய நன்றி. நீங்கள் நேர்மையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டதால்தான் அரசின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. விமர் சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறவன் நான். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டங்களை நாம் செயல்படுத்துவதைப் பார்த்து பல மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்துகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களை நீங்கள் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும். என்னை விமர்சிக்க வேண்டாம் என நான் சொல்ல வில்லை. என்னுடைய 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டதுதான். எல்லோருடைய கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை நல்ல திட்டங்களைப் பாராட்டுவதில் காட்டுவதில்லை. தயங்காமல் விமர்சிப்பதைப் போல தயங்காமல் பாராட்டுங்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த, உங்களுடைய ஆழமான பார்வையும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட ஸ்டாலினையோ, தி.மு.க. அரசையோ பாராட்ட வேண்டாம். தமிழ்நாட்டை பாராட் டுங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தனித்துவத் தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது''’என்றார் முதல்வர்.

cm

முதல்வரின் உரையைத் தொடர்ந்து அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியாளர்கள் பேசினர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசும்போது, ”"முதல்வர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற சமயத்தில், கொரோனா எனும் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல, தமிழ்நாட்டின் பொருளாதாரமும், நிதிக் கட்டமைப்பும் மிகுந்த நெருக்கடியில் இருந்தன. நிதிச்சுமை மிக மோசமாக இருந்தது.

அதனை எதிர்கொள்ளவேண்டிய மிகக்கடின மான பொறுப்பு முதல்வருக்கு ஏற்பட்டது. அவருடைய ஆலோசனை, தொலைநோக்குப் பார்வை, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் ஆகியவை தான் பேரிடர்களை சமாளித்து இன் றைக்கு பொருளா தார வளர்ச்சியிலும், தொழில்துறை வளர்ச்சியிலும் வியத்தகு இலக்கை எட்டியிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.

cc

குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், விடியல் பயணத் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்டவை. இந்தத் திட்டங்களின் பலன்களை கண்கூடாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்''’என்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் மூலம் நிறைய புள்ளி விபரங்களுடன் சுட்டிக்காட்டினார் தலைமைச் செயலாளர் முருகானந்தம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, "ஏழு விதமான உறுதி மொழிகளை சொல்லிவிட்டுத்தான் ஆட்சிக்கே நாங்கள் வந்தோம். அதில் நான்காவது உறுதிமொழி, பள்ளிக்கல்வி மற்றும் ஹெல்த் சம்பந்தப்பட்டது. இதில் கல்வி சம்பந்தப்பட்ட உறுதிமொழிகளில் முக்கியமானது லேர்னிங் அவுட்கம் பற்றியது. தமிழகத்தில் 67 லட்சம் மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களுக்காக தமிழக முதல்வர் பட்ஜெட்டில் ஒதுக்கியது 46,767 கோடி ரூபாய். ஆனால், இந்தியா முழுவதும் 25 கோடி மாணவர்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 78,572 கோடி ரூபாய்தான். ஆக, பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக, மாணவ -மாணவிகளின் எதிர்காலம் சிறக்க நிதி ஒதுக்கீடு செய்கிறார் முதல்வர். திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடக்கும்போது, ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறோம். அதில் உங்கள் அவுட்கம் என்ன என்பது பற்றி நிறைய கேள்வி எழுப்புவார் முதல்வர்''’என்று ஆரம்பித்து, தனது துறையில் நடக்கும் திட்டங்களை விவரித்தார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "ஒன்றிய அரசும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறது; தமிழக அரசும் தாக்கல் செய்கிறது. ஆனால், இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒன்றிய அரசின் பட்ஜெட் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்காக மட்டும் போடப்படும் பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால், நம்முடைய முதல்வரின் ஆலோசனையின்படி போடப்படும் பட்ஜெட் என்பது தமிழகத்திலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மை செய்கிற பட்ஜெட்டாக இருக்கிறது''’என்றார்.

நான்காண்டுகளில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து விவரித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "திராவிட நாயகர் முதல்வரின் ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டி லிருந்து தயாரிக்கப்படுவவை. மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக் கிறது. தொழில் வளர்ச்சிக்கான உகந்த மாநிலம் தமிழ்நாடுதான்'' என்று தொழில் வளர்ச்சிக்காக தி.மு.க. அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங் களை விரிவாக விவரித்தார்.

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும் போது,’"தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதே நமது அரசின் முக்கிய நோக்கம். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் சக்சஸ்ஃபுல்லாக எடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின்ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது''’என்பதை விவரித்து ஐ.டி. துறையின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், தங்கள் துறைகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுகின்றன, அவை களுக்கான நிதி ஒதுக்கீடுகள் எவ்வளவு, திட்டங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்பதையெல்லாம் புள்ளிவிபரங்களுடன் விவரித்தார்கள்.

துணைமுதல்வர் உதயநிதி பேசும்போது, "விளை யாட்டுத் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது தமிழ் நாடு. நம்முடைய முதலைமைச்சர் கடந்த 2023-ல் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் எனும் திட்டத்தைத் துவக்கி வைத்து, அந்த திட்டத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்து உதவினார். இதனையடுத்து ஏராளமான நிறுவனங்கள் நிதி உதவி செய்தன.

விளையாட்டு வீரர்கள் வெற்றிபெற்ற பிறகே அவர்களை ஊக்கப்படுத்த தொகை வழங்குவது பொதுவாக இருந்துவரும் சூழலில், நமது அரசு தான், ஒரு நாட்டில் விளையாட வீரர்கள் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே இந்த பவுண்டேசன் மூலம் ஏற்றுச் செயல்படுத்துகிறது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் மூலம் பலன் பெற்ற நமது வீரர்கள் இதுவரை 100-க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார்.

குறிப்பாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு, அதில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை விவரித்தார் உதயநிதி. தொடர்ந்து பேசியவர், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் அரசியல் மாச்சரியமில் லாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் வளர்ச்சிபெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. அதேபோல, நான் முதல் வன் திட்டத்தின் மூலம், யு.பி.எஸ்.சி, தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ -மாணவிகளை ஊக்கப்படுத்த நிதி உதவியும் தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே தமிழகத் தைச் சேர்ந்த 47 பேர் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்றனர். இனி ஒவ்வொரு வருடமும் 200 பேர் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இது மட்டுமல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்வதை இலக்காக வைத்து செயலாற்றியது தி.மு.க. அரசு. அந்த இலக்கை அடைந்த நிலையில், 2023-ல் 30,000 கோடி வழங்கப்பட்டு, தற்போது 35,000 கோடியாக உயர்த்தி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 37,000 கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்'' என விவரித்துப் பேசினார் துணை முதல்வர் உதயநிதி.

இதனையடுத்து பத்திரிகையாளர்களுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' மனோ சந்தாலியா, "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன், "டைம்ஸ் ஆஃப் இந்தியா' அருண்ராம், "புதிய தலைமுறை' சமஸ், "நியூஸ் 18 தமிழ் நாடு' தென்னிந்திய தலைவர் வினித், "ஜனசக்தி' ஆசிரியர் டி.எம்.மூர்த்தி என சிலர் மட்டும் பேசினர். பேசிய அனைவரும் தி.மு.க. அரசின் நான்காண்டு ஆட்சியை பாராட்டி னார்கள். இதேபோன்று அடிக்கடி பத்திரிகையாளர்கள் சந்திப்பை முதல்வர் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "இந்து என்.ராம்' வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், இந்த நிகழ்வுக்கு வரவில்லை. €

நிகழ்ச்சியில் "மாலை முரசு' கண்ணன் ஆதித்தன், தினகரன் ஆர்.எம்.ஆர்., "தினத்தந்தி' சிவந்தி ஆதித்தன், கலைஞர் டி.வி. திருமாவேலன், வசந்த் டி.வி. விஜய்வசந்த் எம்.பி., ராஜ் டி.வி. சகோதரர்கள், "நியூஸ் 18' கார்த்திகைச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் துறையின் செயலாளர்கள் மட்டுமே அரசின் சாதனைகளை விளக்கிப் பேசுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த முதல்வர், "சில அமைச்சர்கள் பேசினால் நன்றாகயிருக்கும்' எனச் சொன்னதால், அமைச்சர்கள் பேசினார்கள். நிகழ்ச்சியில் துறை செயலாளர்கள், அரசின் சாதனை விபரங்களை புள்ளிவிபரத்தோடு பேசுவதற்கு தயாராக வந்திருந்த நிலையில்... நேரமின்மை காரணமாக அவர்களால் பேச முடியவில்லை. அதனால் அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்வரின் செயலர் உதயசந்தி ரன் ஐ.ஏ.எஸ். பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்த நான்கு ஆண்டு கால சாதனைகளைப் பற்றி பேசுவதற்கு இந்த மூன்று மணி நேரம் போதாது'' என பெருமிதத்துடன் பேசினார். முதல்வர், மதியம் 2:45 மணி வாக்கில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கலைவாணர் அரங்கத்தி லிருந்து கிளம்பினார்.