வேளாண் பயிர்கள் புயல் மழையினால் சேதமடைவதாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் நஷ்டமடைவதைக் கருத்தில்கொண்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மத்தியில் "பிரதான் மந்திரி பாசில் பீம யோஜனா' என்ற ஒருதிட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் ஆண்டுக்கு இருமுறை, அதாவது குறுவை பருவம், சம்பா பருவ காலங்களில் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், கம்பு, சோளம், உளுந்து, பருத்தி, வெங்காயம், எள், மணிலா உட்பட பல்வேறு வேளாண் பயிர்களுக்கும் இன்சூரன்ஸ் செலுத்துமாறு மத்திய அரசு அறிவித்தது.
விவசாயிகள், கடந்த 2018, 19, 20-ம் ஆண்டு களில் என ஒவ்வொரு ஆண்டும் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மத்திய அரசு அறிவித்த பயிர் காப்பீட்டுத் தொகைக்கான பணத்தைச் செலுத்தி வருகிறார்கள். அப்படி பணம் செலுத்திய விவசாயிகள் புயல், மழை, வறட்சி ஆகிய காலங்களில் தாங்கள் பயிரிடும் விளை பயிர்கள் சேதம் அடைந்ததும் அதுகுறித்து உடனடியாக வேளாண் அலுவலர் களுக்கு தகவல் தெரிவித்தும், புகைப்படங்களாக வீடியோ காட்சிகளாக எடுத்து அனுப்பி, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று பலமுறை எடுத்துக் கூறியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈடு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு பணம் செலுத்துமாறு தமிழக அரசின் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பணம் செலுத்தியும் நஷ்டஈடு வழங்காத கிடைக்காத நிலையில் மீண்டும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு நாங்கள் எப்படி பணம் செலுத்த முடியும் என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லப்ப நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனி, "2017-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு பருவ காலங்களிலும் பயிர்க் காப்பீட்டுக்கு முறைப்படி பணம் செலுத்திவருகிறேன். எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல், உளுந்து, எள், பயிர் செய்து வருகிறேன். 2018-ம் ஆண்டு புயலில் உளுந்து, நெற்பயிர்கள் சேதமடைந்தன. சேதத்தைப் பார்வையிட்டு நஷ்டஈடு கிடைக்க உதவி செய்யுங்கள் எனப் பல முறை அதிகாரிகளிடம் கூறினேன். எங்களால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார்கள். வங்கியில் கேட்டால், வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தால்தான் காப்பீடு வழங்க முடியும் என்று கூறிவிட்டார்கள்.
என்னைப்போன்ற லட்சக்கணக்கான விவசாயி களுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி பிரீமியம் தொகை செலுத்தியும் இழப்பீடு கிடைக்கவே இல்லை. இதுகுறித்து கடந்த ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமிக்கு புகார் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலினுக் கும் இது குறித்து புகார் எழுதியுள்ளேன். தற்போது மிகுந்த சிரமத்தோடு விவசாயம் செய்துவரும் எங்களுக்கு தமிழக அரசே பயிர் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த முன்வர வேண்டும்'' என்கிறார்.
ஆசனூரைச் சேர்ந்த விவசாயி முருகன் , "எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்படி நான் உட்பட ஆசனூர், இறைவாச நல்லூர், பிள்ளையார் குப்பம், குன்னத்தூர், புதுக்கேணி, எறையூர், புகைப்பட்டி, பிடாகம் உட்பட உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகள் என்னைப் போலவே இத்திட்டத்தில் இணைந்து, பயிர் காப்பீடுத் தொகையைச் செலுத்தியும் பயிர்ச் சேதத்துக்கான நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கவே யில்லை. இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து மனு கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் பயிர்க்காப்பீட்டுக்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களும், வேளாண் துறை அதிகாரிகளும் வெளியிடுகிறார்கள். இத்திட்டத்தின்மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். எங்களையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டு மானால், மத்திய, மாநில அரசுகளே எங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தவேண்டும். அப் போதுதான் எங்களால் நம்பிக்கையாகவும், நிம்மதியாகவும் விவசாயத்தில் ஈடுபட முடியும்" என்கிறார்.
விவசாயிகளில் பலர், பயிர்க் காப்பீட் டுத் திட்டத்திற்கு தேசிய வங்கிகளில் பணம்செலுத்தியதற்கான ரசீதுகளை யெல்லாம் நம்மிடம் கொண்டு வந்து காட்டி மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எங்களை ஏமாற்றும் திட்டமா? என்று கேட்கும் விவசாயிகளின் கேள்விக்கு மத்திய மாநில அரசுகள்தான் பதிலளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாதத்தில் ஒரு நாள் அவரவர் தொகுதி யிலுள்ள விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தியுள்ளார். எனவே சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் முதலில் எங்களைப்போன்ற விவசாயிகளின் நிலையை சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து, பயிர்க் காப்பீட்டுக்கான தொகையை முறையாகச் செலுத்திய பின்பும் நஷ்டஈடு கிடைக்காத குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.