மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மேயர் மீது தொடர்ந்து மண்டலத் தலைவர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர். போட்டோ, வீடியோ எடுக்கத் தடை இதன் எதிரொலியா? அல்லது வேறு காரணமா என விசாரணையில் இறங்கினோம்.

cc

வேலூர் மாநகராட்சியின் ஆளும்கட்சி கவுன்சிலர் சிலர், “"நாங்க பதவிக்கு வந்து இரண்டு வருடமாகிடுச்சி, ஒவ்வொரு கவுன்சிலரும் தேர்தலில் பல லட்சம் செலவு செய்து கவுன்சிலராகியிருக்கோம். ஒவ்வொருத் தருக்கும் இதுவரை 20 லட்ச ரூபாய் அளவுக்கு வேலை தந்துருக்காங்க, அவ்வளவுதான். மாநக ராட்சியில் எந்தப் பணிக்கு டெண்டர்விட்டா லும் ஒப்பந்தம் எடுப்பவர் 15% கமிஷன் தருகிறார். அதில் 10% துறை அமைச்சருக்கு, மாவட்ட அமைச்சருக்கு, மாநகரச் செயலாள ருக்கு, தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு, மேயருக்கு 1 சதவிகிதம், அரை சதவிகிதம் துணைமேயர் எடுத்துக்கொள்கிறார். மீதியுள்ள அரை சதவிகிதம் 58 கவுன்சிலர்களுக்குத் தரவேண்டும். அந்தத் தொகையை கவுன்சிலர்களுக்கு பங்குபிரித்துத் தருவதில்லை.

இதுமட்டுமல்ல, சைக்கிள் ஸ்டேண்ட், காய்கறி மார்க்கெட், கழிப்பறை, சாலையோரக் கடைகள் தினசரி வசூல் ஒப்பந்தங் களை மேயர் சுஜாதா, மாநக ரச் செயலாளர் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்தி இருவரும் தங்கள் பினாமி பெயரில் எடுத்துநடத்துகிறார்கள். அதிலிருந்து வரும் லாபத்தை நாங்கள் கேட்கவில்லை, கமிஷன்தான் கேட்கிறோம், அதையும் தருவதில்லை.

Advertisment

வேலூர் மாநகரத்துக்குள் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு தொகுதிகள் வருகின்றன. 60 வார்டுகளில் நடக்கும் பணி களுக்கு, கவுன்சிலர்களுக்கான அரைசதவிகித கமிஷனை அந்தந்த எம்.எல்.ஏ.க்களிடம் தந்து விடுகிறோம் என்கிறார் மேயர். உதாரணமாக வேலூர் தொகுதிக்குள் வரும் 34 வார்டுகளில் நடக்கும் பணிகளுக்கான கமிஷன் கார்த்தி எம்.எல்.ஏ.விடம் தரப்படுகிறது. கவுன்சிலர்களுக் குத் தரவேண்டிய கமிஷனை எங்கே என மேயரிடம் கேட்டபோது, எம்.எல்.ஏ.விடம் போய்க் கேளுங்கன்னு சொன்னார். மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.விடம் கேட்ட தற்கு, மாநகராட்சியில் துப்புரவு பணிக்கான பணியாளர்கள், இயந்திரங்கள் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. எடுத்துள்ளார். அதற்கான கமிஷன் தொகை பல லட்சம் வரவேண்டியுள்ளது. அவர் இதுவரை தரவேயில்லை. அதனால்தான் உங்களுக்கு பங்கு தரமுடி யலைன்னு சொன்னார்.

மா.செ.விடம் போய் கேட்டதுக்கு, 34 வார்டு கவுன்சிலர்களுக்கான கமிஷன் தொகை யை மாநகரச் செயலாளரையே கேளுங்கன்னுட் டார். இப்படி மாத்தி, மாத்தி எங்களை பந்தாடறாங்க.

cc

Advertisment

கடந்த தீபாவளிக்கு ஒரு கவுன்சிலருக்கு 3 லட்ச ரூபாய் தந்தாங்க. என் வார்டுல மட்டும் 50 துப்புரவுப் பணியாளர்கள் இருக்காங்க. ஆளுக்கு ஆயிரம் ரூபாய் பணம், பட்டாசு பாக்ஸ், துணி என எடுத்துத்தந்ததில் ஒரு லட்சம் போய்டுச்சி. கட்சிக்காரங்களுக்கு தந்ததுபோக 20 ஆயிரம்தான் நின்னுச்சு. இதுதான் நாங்க இதுவரை கவுன்சிலராகி கிடைச்சது. மேயர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன் ஒருவரை முன்னிறுத்தினார். அமைச்சரின் ஆள் வந்தால் மாநகராட்சியில் தான் நினைப்பது எதுவும் நடக்காது என மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆதரவுடன் தனது தீவிர ஆதரவாளர் சுஜாதா ஆனந்தகுமாரை மேயராக்கினார் மாநகரச் செயலாளர் கார்த்தி.

இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலையிடுவதில்லை. தனது காட்பாடி தொகுதியிலுள்ள 10 வார்டுகளின் பணிகள் குறித்து மட்டுமே பேசுகிறார். இது எம்.எல்.ஏ., மேயருக்கு சௌகரியமாகிடுச்சி. காய்கறி மார்க்கெட் டெண்டர் எடுத்த மேயரோட ஆளுங்க, எல்லையைத் தாண்டிவந்து வசூல்செய்து பிரச்சனையாச்சு. ஒருமாதத்துக்கு முன்பு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்... மாநகராட்சியில் நிதிக்குழு, வரிவிதிப்புக் குழு, கல்விக் குழு என 6 குழுக்கள் உள்ளன. இதில் எந்த குழுவும் இரண்டு வருடமா கூடலைன்னு தெரிஞ்சு, "என்னம்மா நிர்வாகம் செய்யறன்னு மேயரைக் கண்டிச்சு, உன்னை மாத்தறமாதிரி நடந்துக்காதம்மா'ன்னு எச்சரிச்சார்.

கவுன்சிலர்கள் கூட்டுச்சேர்ந்தால் கேள்வி கேட்பார்கள் என எம்.எல்.ஏவும், மேயரும் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். மாநகராட் சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக எதுவும் பேசிவிடக்கூடாதுன்னு ஒவ்வொரு கூட்டத்துக்கும் எம்.எல்.ஏ. கார்த்தி, நேரில்வந்து மேயர் அறையில் உட்கார்ந்து கொள்கிறார். நாங்கள் மேயரைக் கேள்வி கேட்டால் எம்.எல்.ஏ.வுக்கு கோபம் வருது. நான்தானே கவுன்சிலர் சீட் தந்தேன், மேயரை எதிர்த்துப் பேசறீங்கன்னு மிரட்டறாரு. இதனால எங்க வார்டுகளிலுள்ள மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், குப்பை, கொசு பிரச்சனை என எந்தக் குறைகளையும் பேசமுடியாம இருக்கோம். அமைச்சர், மா.செ. ஆதரவு கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்தில் மேயரை கேள்வி கேட்கறாங்க. அந்தக் குறைகள் செய்தியாவதால் இனி வீடியோ, போட்டோ எடுக்கக்கூடாதுன்னு அறிவித்துள்ளார். இதற்கு முன்பிருந்த மேயரே பரவாயில்லை, இந்தம்மா மோசம் என மக்கள் பேசுமளவுக்கு கொண்டுவந்துவிட்டார்'' என்கிறார்கள் வெறுப்பாக.

மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.வைத் தொடர்புகொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை.

இதுகுறித்து மா.செ. நந்தகுமாரிடம் கேட்டபோது, “"நான் எந்த ஒப்பந்தமும் பெறவில்லை, என்னுடனுள்ள கட்சி நிர்வாகி ஒருவர் எடுத்திருக்கிறார். கவுன்சிலர்களின் குறைகள், கமிஷன் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விசாரிக்கிறேன்...''’என்பதோடு முடித்துக்கொண்டார்.