தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. பெரியளவில் நிலை குலைந்து போய்விட்டது என்கிறார்கள் நிர்வாகி களும் தொண்டர்களும். தற்பொழுது கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க., அதற்கான தீர்வைத் தேடி டெல்லியில் பா.ஜ.க.வின் உதவியை நாடியுள்ளது.
"மாநிலம் முழுக்க கட்சியை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவராலும் முடிய வில்லை. கட்சி அலுவல கத்தில் உள்ள ஊழியர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. கட்சி நிதி சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துச் செலவழிக்க முடியாமல் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் திணறுகிறார்கள்'' என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.
எல்லாம் சசிகலாமயமாக இருக் கிறது. சசிகலாவின் நிர்வாகத்தில் இருந்து கட்சி நிதியை இன்றுவரை மீட்க முடியவில்லை. என்னதான் 65 எம்.எல்.ஏ.க்களை ஜெயித்திருந் தாலும் ஒரு மாநில அளவில் கூட்டம் நடத்தி சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. இதுவரை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மூன்று முறை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற் றுள்ளது. எங்கே அந்தக் கூட்டங்களில் சசிகலா பற்றி பேசினால், கட்சியில் நிலவும் சசிகலா ஆதரவு நிலை வெளிப் படையாகத் தெரிந்துவிடுமோ என்கிற அச்சம் அ.தி.மு.க. தலை மைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எந்தக் கூட்டத்திலும் சசிகலா என்கிற பேச்சை உச்சரிக்கவே கூடாது என்கிற நிலையாணையை இ.பி.எஸ். பிறப்பித்திருக்கிறார்.
இதற்கு நேர் மாறாக ஓ.பி.எஸ்., சசிகலா ஆதரவு நிலையை வெளிப்படையாகவே மேற்கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ்., சசிகலாவை ஆதரிக்கிறார் என்பது வெளிப்படையான ரகசியமாகவே கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இ.பி.எஸ்., அவருக்கு நெருக்கமான சி.வி.சண் முகம், ஜெயக்குமார் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சசிகலா எதிர்ப்பு சுருங்கிவிட்டது. அதிலும் முன்பு சசிகலாவை அதிக மாக எதிர்த்த கே.பி.முனு சாமி தற்பொழுது பின்வாங்கிவிட்டார்.
கொஞ்சம் கொஞ்ச மாக எடப்பாடி, கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார். சமீபத்தில் ஏழு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்தனர். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்வதில் தி.மு.க. குறியாக இருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், கட்சி மாறிய நிலை மாறி, அ.தி.மு.க. வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் இருபத்தைந்து பேர் உள்கட்சித் தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வில் இணை வார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருப் பார்கள். சட்டமன்றத் தேர்தலில் அங்கு தி.மு.க. அடைந்த தோல்வியை கட்சித்தாவல் மூலமாக ஸ்டாலின் ஈடுகட்டுவார் என்கிற தகவல் அ.தி.மு.க. வட்டாரங்களிலேயே பெரிதாக எதிரொலிக்கிறது.
இந்நிலையில் கொங்குமண்டலத்தில், கரூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வையே தி.மு.க.வில் கொண்டுவந்து சேர்த்துவிட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதற்கு முத்தாய்ப்பாக கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என தி.மு.க அரசு வழக்குப் போட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவே தப்பிக்க முடியவில்லை என்பதுதான் சட்ட வரலாறு.
தி.மு.க ஆட்சியில் அடுத்தது அமைச்சர் வேலுமணிதான் டார்கெட். இதனை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே தி.மு.க. அரசு வெளிப்படையாக அறி வித்துவிட்டது. சி.ஏ.ஜி. அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்ட அமைச்சர் தங்கமணி, ஆவினில் ஏகப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களை விழுங்கிய ராஜேந்திர பாலாஜி ஆகியோர், வெளிப்படையாக நடவடிக்கைகள் பாயும் என தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள்.
இந்நிலையில்... பிரதமர் மோடியின் குட்புக்கில் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றிருக்கிறார். தி.மு.க அரசுக்கு எதிராக தமிழக பா.ஜ.க.வினர் கொள்கை ரீதியாக போராட்டம் நடத்துவதென்றால் நடத்துங்கள், மற்றபடி தேவையில்லாமல் எந்தப் பிரச்சினையும் செய்யக்கூடாது என பா.ஜ.க. தலைமையே உத்தரவிட்டிருக்கிறது. எது செய்வதாக இருந்தாலும், தலைமைக்குத் தெரியாமல் செய்யக்கூடாது என ஒரு நிலையாணை பா.ஜ.க. மேலிடத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள்.
கன்னியாகுமரி பாதிரியார் பொன்னையா மீது தி.மு.க. அரசு கைது நடவடிக்கை எடுத்ததும், அந்த பாதிரியார் பற்றி, அவரை தி.மு.க. ஆதரிக் கிறது என முதலில் அறிக்கைவிட்ட பா.ஜ.க.வினர், உடனடியாக வாயை மூடிக்கொண்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. பா.ஜ.க.வின் இந்த நிலை அ.தி.மு.க. தலைமையை அதிக குழப்பத்தில் ஆழ்த்தியது.
சசிகலாவின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வை ஆட்டம் காண வைத்துள்ளது. தி.மு.க., அ.தி. மு.க.வை அழித்துவிடும் நிலைக்கு காய்களை நகர்த்துகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாமெல் லாம் ஜெயிலுக்குப் போகவேண்டியதுதான் என தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி அ.தி. மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். என்றா லும், அது நடைபெறும் வேகத்தை தடுக்க, என்ன செய்வது என அ.தி.மு.க.வுக்குப் புரியவில்லை.
சசிகலா, தி.மு.க. ஆகிய இரண்டு விஷயத் திலும் மத்திய பா.ஜ.க.வினர் என்னவென்று அ.தி.மு.க.வுக்கு புரியவில்லை. இருவரையும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சசிகலா மீது பா.ஜ.க. வழக்குகள் தொடுக்க வேண்டும். தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய ஏஜென்ஸிகள் பாயவேண்டும். ஏற்கனவே தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் சீனியர் தலைவர்களான ஜெகத்ரட்சகன் ஆகியோர் மீது மத்திய அரசு பாய்ந்திருக்கிறது. இது தவிர பொன்முடி, செந்தில்பாலாஜி உட்பட... தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மீது அ.தி.மு.க. அரசு வழக்குகள் தொடர்ந்து அவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை வேகப்படுத்தப்பட வேண்டும். இதுதான் அ.தி.மு.க.வைக் காப்பாற்ற ஒரே வழி என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடக்கும்போது ஓ.பி.எஸ்.ஸிடம் எடப்பாடி விளக்கினார்.
அதனால்தான் ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர் கள் சந்திப்பில்... "விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தும் சோதனை அரசியல் பழிவாங்கும் செயல்'' என பேசினார். எடப்பாடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் உள்ளது. சசிகலாவை தேர்தலுக்கு முன்பு கட்சியில் சேர்க்க வேண்டும். பா.ஜ.க. தரப்பில் சசிகலா அணிக்கென தனியாக சீட் ஒதுக்கும் வகையில் அதிக தொகுதிகளைத் தரவேண்டும். கூட்டணியில் விஜயகாந்த், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்றவர்களை சேர்க்கவேண்டும் என்கிற அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க எடப்பாடி மறுத்துவிட்டார். அ.தி.மு.க.வின் வாக்குகள் முழுமையாக பா.ஜ.க. பக்கம் வரவில்லை. அதனால்தான் கொங்கு மண்டலத்திலேயே அண்ணாமலையும் முருகனும் தோற்றுப்போனார்கள்.
இதற்கிடையே பா.ஜ.க.வால்தான் அ.தி.மு.க. தோற்றது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய பேச்சு பா.ஜ.க. வட்டாரத்தில் அ.தி.மு.க. மீதான கோபத்தைக் கிளறிவிட்டது. அதற்கு, சப்பைக்கட்டு கட்டும் வகையில் ஓ.பி.எஸ். முதலிலும், பிறகு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் இணைந்தும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி உறுதி என அறிக்கை வெளியிட்டது, டெல்லியிலிருந்து வெளிப்பட்ட கோபத்தின் எதிரொலிதான். அதனால் எடப்பாடி மீது பா.ஜ.க. வட்டாரங்கள் கடும் கோபத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி, ஓ.பி.எஸ். மகன் மூலமாக பிரதமரிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டார். ஓ.பி.எஸ். மகனுக்கு பா.ஜ.க. வட்டாரத்தில் நல்ல மரியாதை இருக்கிறது. அவருக்கு அமைச்சர்கள் தங்கும் இடத்தில் புதிய பங்களா ஒன்றை நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். அந்த பங்களாவில் பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு ஓ.பி.எஸ். குடும்பத்துடன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அப்படியே எடப்பாடி கேட்டுக்கொண்டபடி பிரதமரிடம் ஓ.பி.எஸ். அப்பாயின்ட்மெண்ட் கேட்க... அவருடன் இ.பி.எஸ்.ஸும் இணைந்துகொண்டார்.
பாராளுமன்றத் தேர்தலை ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன்தான் சந்திக்க வேண்டும் என்பது பா.ஜ.க. நிலை என்பதால், அந்த ஒரு பாயின்ட்டில்தான் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. பேசும் என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள். பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர், அமித்ஷா, நட்டா, பியூஷ் கோயல் என அனைவரையும் சந்தித்து சசிகலா மற்றும் தி.மு.க. ஆகியோர் பற்றி ஒரு பெரிய ஒப்பாரியே வைப்பது என்ற முடிவுடன்தான் அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி சென்றனர். அத்துடன் பியூஷ்கோயல் போன்றோருடனான பண விநியோக பஞ்சாயத்துகளும் டெல்லி விசிட்டில் அடக்கம். இந்த சந்திப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அடுத்த ஒருசில நாட்களில் தெரியவரும். இப்போதைக்கு நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்பது மட்டுமே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. அதைத்தொடர்ந்து சசிகலா விஷயத்தில் எடப்பாடி என்ன நிலை எடுப்பார் என்பது தெரியவரும். என்ன நடந்தாலும் நான் பா.ஜ.க. பக்கமே, சசிகலாவுடனான என்னுடைய மறைமுக நட்பு தொடரும். என் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கவேண்டும் என்பது ஓ.பி.எஸ்.ஸின் நிலை.
இந்த டெல்லி பயணத்தில் எடப்பாடியின் கைகளை விட ஓ.பி.எஸ்.ஸின் கை ஓங்கியிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். அப்படியெல் லாம் எடப்பாடி விட்டுவிட மாட்டார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்