திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் சுதாகர், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாண்டவர், மாணவரணி துணைச் செயலாளர் முருகேசன் உள்பட 8 பேர், தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் பட்டுக்கோட்டை பிரிவுச் சாலை அருகே உள்ள ஒரு பேக்கரியுடன் இணைந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியபோது தகராறு ஆகியிருக்கிறது.

dmk

கடையிலிருந்த பெண் ரேவதி அவர்களைத் தட்டிக்கேட்க, தி.மு.க.வினர் அப்பெண்ணிடம் ஓவராக வம்பு செய்யவும், பேக்கரி உரிமையாளர் ஆனந்த் மகன் வசந்த் தலையிட்டு விசாரித்தார். தி.மு.க.வினர் அவரிடமும் தகராறு செய்து, கடையிலிருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கத் தொடங்கினர். அதுகுறித்து, கடை உரிமையாளர் சூரக்கோட்டை ஆனந்துக்கு தகவல் கொடுக்கவும், அவர் தனக்கு ஆதரவாகக் கிராமத்தினரை அழைத்துக்கொண்டு அங்கு வருவதற்குள் பேக்கரியை மொத்தமாகச் சூறையாடியிருந்தனர்.

வெகுண்டெழுந்த கிராமத்து மக்கள், அங்கிருந்து தி.மு.க.வினர் அனைவரையும் விரட்டிப் பிடித்ததில், 8 பேரில் 2 பேர் ஓடிப்போக, மிச்சமுள்ள 6 பேரையும் நையப்புடைத்தனர். பின்னர், காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டெடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை யில் சேர்த்தனர். தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட பேக்கரிக்கடை ஊழியர்களும் சிகிச்சையெடுக்கிறார்கள்.

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக கடை பெண் ஊழியர் ரேவதி, மன்னார்குடிக்காரர்கள் 6 பேர் மீதும், மன்னார்குடி பாண்டவர் கொடுத்த புகாரின் பேரில் பேக்கரி ஊழியர்கள் உள்பட 9 பேர் மீதும் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிலைமை விபரீதமானதால், இவ்விவகாரத்தில் சமாதானமாகப் போகலாமென்று மன்னார்குடி தி.மு.க. புள்ளிகள், தஞ்சை தி.மு.க. ஒன்றியச் சேர்மன் கணவர் கேசவன் மூலமாக, பேக்கரி உரிமையாளர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பொருளை வாங்கிக்கொண்டு போகாமல், போதையில் கடையிலிருக்கும் பெண்ணிடம் வம்பிழுத்து கடையை உடைப்பது என்ன நியாயமென்று பேக்கரிக்கடையினர் கேட்கிறார்கள். இதுகுறித்து மன்னார்குடி தி.மு.க. ந.செ. வீரா கணேசன், "அந்தக் கடையில் சிகரெட் கேட்டப்ப கடைப்பொண்ணு காலங்கடத்தியிருக்கு... வேகமாக்குடும்மா, பணம் கொடுத்து தானே சிகரெட் கேட்கிறோம்னு கேட்டிருக்காங்க... உடனே டீக்கடைப் பையன் எடக்குமடக்காப் பேசவும் தகராறாகியிருக்கு. இதில் சம்பந்தப்பட்டவங்களில் தி.மு.க.காரங்களும் இருந்ததால அ.தி.மு.க.காரங்க பெருசுபடுத்திட்டாங்க. இப்போ எங்களுக்குள்ள சமாதானம் பேசியாச்சு'' என்றார். எனினும், தலைமை வரை இந்த விவகாரம் போயிருப்பதாகவும் நடவடிக்கை இருக்கும் என்றும் உள்ளூர் தி.மு.க.வினரிடம் பதட்டமும் உள்ளது.

Advertisment