தமிழகத்திலிருக்கும் இரண்டு பிரதான மாநில கட்சிகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் பெரும்பான்மையுடன் மாறிமாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகிறார்கள். தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் இவ்விரு கட்சிகளோடு மாறிமாறி கூட்டணி வைப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது கூட்டணியிலிருக்கும் கட்சிக்கு அமைச்சர் பதவி தருவதென்று செயல்பட்டுவந்தது. தற்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வுக்கோ, தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதுவும் தனிக்கட்சியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற பேராசை எழுந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வலுவாக இருக்கும்வரை தனித்துக் காலூன்ற முடியாது என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு உணர்த்தி வருகிறது.
எனவேதான் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கறையான்போல் அ.தி.மு.க.விற்குள் நுழைந்து, அக்கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்காவது முயற்சி செய்யலாமென்ற எண்ணத்தோடு, அ.தி.மு.க.வோடு இணைந்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, தி.மு.க. பெரும்பான்மையுடன் வெற்றியைத் தன்வசப்படுத்தியது. தங்களுடைய தோல்விக்கு காரணம் பா.ஜ.க. தான் என்பதை உணர்ந்த அ.தி.மு.க., இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்தது. ஆனால் தற்போது, எந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வை சிதறு தேங்காயாக உடைத்ததோ, அதே பா.ஜ.க. வோடு மீண்டும் கூட்டணி சேர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., வைத்தி லிங்கம் என்றிருந்த சீனியர்கள் அனைவரையும் எப்படி பா.ஜ.க. திட்டமிட்டுப் பிரித்து அவர்களுக்குள் கட்சி, சின்னம், பொதுச்செயலாளர் பதவி யாருக்கு சொந்தமென்று ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியதோ, தற்போது அதேபோன்ற திட்டத்தை தி.மு.க.விற் குள்ளும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பா.ஜ.க. மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் பதவியை தனது மகன் உதயநிதிக்கு வழங்கிய விஷயமே அதற்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கிறதாம். தி.மு.க.வில் துரைமுருகன், எம்.ஆர்.கே., ஐ.பெரியசாமி, நேரு, ஜெகத் ரட்சகன் என்று இத்தனை சீனியர்கள் இருந்தாலும், கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த தன்னுடைய மகனுக்கு துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் கொடுத்துவிட்டார் என சீனியர்கள் வெளியில் காட்டிக்கொள்ளாத வெறுப்பில் இருக்கிறார் களாம். இந்த வெறுப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளதாம் பா.ஜ.க.
அதற்கான திட் டத்தை செயல்படுத்த முதலில் கையில் எடுத் திருக்கும் துருப்புச்சீட்டு தான் அமலாக்கத்துறை என்கிறார்கள். அ.தி.மு.க.விலிருந்து வந்த செந்தில் பாலாஜி முதல்வர் குடும்பத்திற்கும், துணை முதல்வருக்கும் மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கையானவ ராகவும் மாறியதால், அவருக்கான முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை தூசிதட்டிய அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அமைப்புகள், அவர் மீதான வழக்கை தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இதில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்தார். அவர் வெளியே வந்த மறுநாளே மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப் பட்டது. தற்போது நீதிமன்றம், செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று கூறியதால், செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, வேலூர் மக்களவைத் தொகுதி யில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட் டார். தேர்தலில் வாக் காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் நடை பெற்ற சோதனையில், 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை வருமான வரித்துறை மீண்டும் தூசு தட்டியுள்ளது.
அதேபோல் கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், தொடர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையின்போது அளித்த விவரங்களின்படி, 2013-ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சி.பி.ஐ. 2021-இல் ஒரு வழக்கு பதிந்து, அதன் பிறகு ஒரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நாளிலிருந்து ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை இந்த சோதனை நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் நேருவின் மகன் நேரில் சந்தித்ததாகவும், அவரது சந்திப்புக்கு பின் நயினார் நாகேந்திரன் நிர்மலாவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது குடும்பத்தினரை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில், கடந்த 2023, அக்டோபரில், அவருடைய வீடு மற்றும் அலுவலக பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
2006-11ல் அமைச்சர் பொன்முடி கனிமவளத் துறைக்கு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு வழக்கு பதியப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கை தூசி தட்டி ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியா வில், ஐக்கிய அரபு நாடுகளில் சில நிறுவனப் பங்குகளை பொன்முடியின் மகன் வாங்கியுள்ளார். இந்த பணப் பரிவர்த்தனையில் சட்ட மீறல் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.
மேலும், இளம் அமைச்சர்கள், சீனியர்கள் குறித்து கொடுக்கும் தகவல்களால் முதல்வரும், துணை முதல்வரும் அவர்களிடம் கடுமைகாட்டி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து தி.மு.க. தலைமை செய்வதை பார்த்த சீனியர்கள், துணை முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் ஒவ்வொருவருடைய சொத்துப்பட்டியல், வழக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து நேரடியாக ஒன்றிய அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனராம். இந்த சீனியர்கள் கூட்டணியை தி.மு.க.விலிருந்து உடைத்து வெளியேற்றும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது.
ஏற்கெனவே தி.மு.க.வை உடைக்க வேண்டு மென்ற எண்ணத்தில் வலம்வரும் பா.ஜ.க.விற்கு வேலையை சுலபமாக்கிக் கொடுத்துள்ளனர் சீனியர்கள். எனவே, டாஸ்மாக் ஊழலை முழுமையாக வெளியே கொண்டுவர பா.ஜ.க. தொடர்ந்து முயற்சிசெய்து வருகிறது. டாஸ்மாக்கில் ரூ.10 பில்லியன் அளவுக்கு ஊழல் நடந்தது தெரியவந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடரலாம் என்று உத்தரவிட்டது.
ஏற்கெனவே பா.ஜ.க. திட்டமிட்டு டாஸ்மாக் ஊழலை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தி.மு.க. சீனியர் அமைச்சர்கள் ஒன்றிய அமலாக்கத்துறையோடு நெருக்கம் காட்டுவதால், இந்த இக்கட்டான சூழலை முதல்வர் எப்படி எதிர்கொள்வார் என்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் தேர்தல் பேச்சுவார்த்தைகள் தொடங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.