நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் திண்டுக்கல்லை தி.மு.க. கோட்டையாக்கியுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 42 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி, பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியைத் தக்கவைத்துள்ளது. பணத்திற்கும் சிபாரிசுக்கும் அடிபணியாமல் கட்சிக்காக உழைத்தவர்களுக்குத்தான் பதவிகள் கொடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி வெளிப்படையாகக் கூறிவந்ததுபோல், கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்துவந்த மாநகர கவுன்சிலரான இளமதியை மேயராகவும், அதேபோல் பத்து வருடங்களாக கட்சிப் பணியாற்றிய மாநகரச் செயலாளரும், மாநகர கவுன்சிலருமான ராஜப்பாவை துணை மேயராகவும் சிம்மாசனத்தில் அமர வைத்ததைக் கண்டு அனைத்துத் தரப்பினருமே பாராட்டுகிறார்கள்.
அதேபோல் மண்டலத் தலைவருக்கான தேர்தல் வருகிற 30-ஆம் தேதி நடக்க இருப்பதால் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், தலா 12 வார்டுகளாகப் பிரித்து வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு மண்டலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது அதிலும் வடக்கு மண்டலத்தைத் தவிர மற்ற மூன்று மண்டலமும் குளறுபடி களாகவே கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த நான்கு மண்டலத்திற்கான தலைவர் பதவிகளுக்கு ஆண், பெண் கவுன் சிலர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலும் அமைச்சர் ஐ.பி.யின் ஆசி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் மண்டலத் தலைவர்களாக வர முடியும் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.
இது சம்பந்தமாக மாவட்டப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஐ.பி.யின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "மாநகரில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுக்குரியவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் மேயரையும்.துணை மேயரையும் அமைச்சர் நியமித்திருக்கிறார். அதுபோல் 4 மண்டலத் தலைவர் களையும் நியமிப்பதில் கூட ஜாதி, மத அடிப்படையில் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதில் வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை இந்திராணி, சரண்யா, சாந்தி ஆகிய மூன்று பெண் கவுன்சிலர்கள் மேயர் ரேஸில் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பவர்கள். எனவே இந்த மண்டலத் தலைவர் பதவியாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். அதுபோல் அமைச்சர் ஐ.பி.யின் தீவிர விசுவாசியான சுபாஷ் மற்றும் ஜானகிராமனும் மண்டலத் தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். இருந்தாலும் சுபாஷ், சரண்யா, இந்திராணி ஆகிய மூவரில் ஒருவருக்கு வடக்கு மண்டலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
அதுபோல் தெற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை சௌராஷ்ட்ரா மக்கள் நிறைந்த பகுதி. அப்பகுதியில் வெற்றிபெற்ற லட்சுமி, நித்தியா, சுபாஷினி ஆகிய மூன்று பெண் கவுன்சிலர்களும் மேயர் ரேஸில் இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் மண்டலத் தலைவர் பதவி கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். இதில் முன்னாள் கவுன்சிலர் தக்காளி ராமமூர்த்தியின் மருமகளான நித்தியாவை மேயராக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேல்மட்டம் வரைக்கும் போய் காய் நகர்த்திப் பார்த்தார். ஆனால் அது எடுபடவில்லை. அதனால மண்டலத் தலைவர் பதவியாவது அமைச்சர் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். அதனால் நித்தியா அல்லது லட்சுமிக்கு மண்டலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
கிழக்கு மண்ட லத்தைப் பொறுத்தவரை, அருள் வாணி, வெங்க டேஷ், சித்திக், லட்சுமி ஆகியோர் மண்டலத் தலைவர் பதவிக்கு போட்டி போடு கிறார்கள். இதில் 17-வது வார்டில் சுயேட்சையாக வெற்றிபெற்ற பிரபல தொழில் அதிபர் சர்வேயர் ரத்தினத்தின் மகனான வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பி. முன்னணியில் கட்சியில் இணைந்தார். அதைத் தொடர்ந்து துணைமேயர் ரேஸிலும் இருந்துவந்தார். ஆனால் அதும் கிடைக்கவில்லை. அதனால் மண்டலத் தலைவர் பதவியாவது அமைச்சர் ஐ.பி. ஆசியுடன் வாங்கிவிட வேண் டும் என்ற முயற்சியில் களம் இறங்கியிருப்பதால் வெங்கடேஷ், சித்திக், அருள்வாணிக்கு இடையேதான் கடும் போட்டி இருந்துவருகிறது.
மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, பிலால் உசேன் மற்றும் விஜயா ஆகிய இருவருக்கும் இடையே மண்டலத் தலைவர் பதவிக்கான போட்டி இருக்கிறது. இப்பகுதி முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதி என்பதால் பிலால் உசேனுக்குத்தான் மண்டலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி நான்கு மண்டலத் தலைவர் பதவிகளைக் கூட ஜாதி, மத அடிப்படையில் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிஅமைச்சர் ஐ.பி. தேர்வு செய்துவருகிறார்'' என்று கூறினார்கள்.
மண்டலத் தலை வரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும்வரை இப்பதவிக்கான மல்லுக் கட்டு தொடர்ந்தபடியேதான் இருக்குமென்று தெரிகிறது.