ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாலும் பழைய, பழுதான, ஆபத்தான கட்டிடங்கள் பயமுறுத்துவதாலும் மாணவர்கள் சேர்க்கை தடைபட்டுள்ளது.

scc

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் எஸ்.களபம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக் கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதாக பள்ளித் தலைமையாசிரியை மகாலெட்சுமி பலமுறை உயரதிகாரிகளுக்குக் கடிதம் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த 20-ஆம் தேதி மரத்தடியில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது, 4-ஆம் வகுப்பு மாணவன் பரத் பள்ளிக்குள் வைத்திருந்த புத்தகப் பையை எடுக்கச் சென்றபோது, பழுதான கட்டி டத்தின் மேற்கூரை இடிந்து கொட்டிக் காயமடைந் தான். உடனடியாக அவனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, டீன் பூவதி ஆகி யோர் அங்குசென்று ஆறுதல் கூறிவிட்டு, விபத்துக் குக் காரணம் என்னவென்று விசாரணை நடத்தினர். கட்டிடம் மிகவும் சேதமடைந்திருப்பதாக தலை மையாசிரியர் மகாலெட்சுமி கடந்த வாரம்கூட கடிதம் அனுப்பியிருந்த நிலையில், கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதற்காக, பள்ளித் தலைமையாசிரியரின் கவனக்குறைவு என்று காரணம் காட்டி பணியிடைநீக்கம் செய்ய வைத்துள்ளனர் என அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர் சங்கத்தினர்.

"புதுக்கோட்டை கொத்தமங்கலம், நகரம், கீரமங்கலம் உள்பட பல கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பழுதான பள்ளிக்கட்டிடங்கள் உள்ளன. அறந்தாங்கி நகரை ஒட்டிய மூக்குடி கிராமத்தில் கடந்த 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளியில் ஒரு கட்டிடம் பழுதானதால் கடந்த 5 வருடமாக அங்கே படித்த மாணவர்களை அரை கி.மீ. தள்ளியுள்ள கிராம சேவை மையத்திற்கு மாற்றியுள்ளனர்'' என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், ‘’"கடந்த ஆண்டு திருநெல்வேலியில் தனியார் பள்ளி கழி வறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பாழடைந்த, சிதிலமடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டதில், 9,573 பள்ளிகளில், 13,036 கட்டிடங்கள் பாழடைந்தது எனக் கண்டறியப்பட்டது. அதில் கடந்த 2022 மே மாதம் வரை 4810 கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி களில் கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளது, அப்படிப்பட்ட பள்ளிகளில் தான் அசம்பாவிதங்கள் நடக்கின் றன''’என்றனர்.

"திருப்பத்தூர் மாவட்டத்தி லுள்ள அம்மனாங்கோவில் காட்டூர் நடுநிலைப்பள்ளியில் 5 கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் சுமார் 100 பேர் படிக்கின்றனர். 1960-ல் ஆரம்பப் பள்ளி கட்டுவதற்காக பஞ்சாயத்துத் தலைவராக இருந்த திருப்பதி இடம் தந்துள்ளார். அப்பள்ளிக்கு அறிஞர் அண்ணாவை அழைத்து வந்து அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தக் கட்டிடம் இப்போது பாழடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனை இடிக்க வேண்டுமென, கடந்த 10 ஆண்டுகளாக அப்பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கூறிவருகின்றனர். தலைமையாசிரி யரும் இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்டுங்கள் எனக் கடிதம் எழுதுகிறார். ஆனால் அதனை இடிக்கவிடாமல் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் தடுத்துவருகிறார்.

Advertisment

ss

"எங்கப்பா திருப்பதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருக்கற பில்டிங். அதனால் இதை இடிக்கக்கூடாது'ங்கறார் எக்ஸ் எம்.எல்.ஏ. "இடித்துவிட்டு கட்டப்படும் புதிய கட்டிடத்தில் பழைய கல்வெட்டு வைக்கிறோம்' எனச் சமாதானம் செய்தும் ஏற்கவில்லையாம். கட்டிடத்தின் அரு கிலும், உள்ளேயும் பிள்ளைகள் விளையாடுகிறார் கள். அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அங்குள்ள தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட்டால் தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்'' என்றார்கள்.

‘"எண்ணும் எழுத்தும்'’ என்கிற திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் புழல் அழிஞ்சிவாக்கம் கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த நிகழ்ச்சிக்குச் சென்றபோது, வடகரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யை ஆய்வு செய்தவர், “"பாது காப்பான முறையில் பள்ளி வளாகம், கட்டிடங்கள் உள்ளதா? படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை உள்ளதா என்பதை ஆசிரியர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சி -எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு பார்க்காமல் மக்கள் பிரதிநிதிகளும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து சரிசெய்ய வேண்டும்'’எனக் கேட்டுக்கொண்டார்.

மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்வதோடு, அறிக்கை பெற்றும் நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவ-மாணவிகளின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

Advertisment

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்