மருத்துவச் சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 8 நோயாளிகள் இறந்ததாக மருத்துவ ஆய்வறிக்கை வெளியாகி வட மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூரோமெலியோய்டோசிஸ் என்பது பர்கோல்டேரியா சூடோமல்லே எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய். இது மூளை மற்றும் முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தும். அரிதாகப் பரவும் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அடுத்தடுத்து நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து 2023, மே 9ஆம் தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளுக்கு அலர்ட் மெசேஜ் அனுப்பியுள்ளனர் சி.எம்.சி. மருத்துவர்கள். உஷாரான தமிழ்நாடு சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள், மே 14ஆம் தேதி வாக்கில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மூத்த மருத்துவர்கள், சி.எம்.சி. மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர். - என்.ஐ.இ. மருத்துவர்கள் இருந்தனர். அந்த ஆய்வு முடிவுகள், "தி லான்செட்' என்கிற மருத்துவ அறிவியல் இதழில் கட்டுரையாக தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2022, ஜூலை முதல் 2023 ஏப்ரல் வரையிலான 10 மாதத்தில் 21 பேர் இந்நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மற்றொருவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் பெண்கள். இந்நோயால் பாதிக்கப்பட்ட 21 பேரில் 9 பேர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ள னர். இறந்தவர்களில் 8 பேர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள். குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆய்வின் போது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருந்தன. ஒரு பல் மருத்துவ மனையில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை ஆய்வு செய்தோம், அதில் ஒரு காலி சலைன் பாட்டிலை ஆய்வு செய்த போது, அதில் குறிப்பிட்ட பாக்டீரியா இருப்பதை கண்டறிந் தோம். அந்த சலைன் பாட்டில் நீரை பல நோயாளிகளுக்கு தந்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோயால் பாதிக்கப் பட்ட மற்றவர்கள் சுகாதாரமற்ற உமிழ்நீர் முழுங்கியதால் அப்பாக்டீரியா பரவியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை தான் திருப்பத் தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அச்சத்தை உருவாகியுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் மருத்துவமனை பெயர் குறிப்பிடாவிட்டாலும் வாணியம்பாடியிலுள்ள அறிவு பல் கிளினிக்கில் 2025, மே 30ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார இணை இயக்குநர் ஞானமீனாட்சி தலைமையில் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், "இந்த கிளினிக்கிலுள்ள மருத்துவர் தந்த தவறான சிகிச்சையால்தான் என் தாயார் இறந்தார்' எனக் கடந்த 3 ஆண்டுகளாக பலவகையிலும் போராடிவரும் ஸ்ரீராம்குமாரிடம் நாம் பேசியபோது, "2023-ல் எங்கம்மா இந்தி ராணிக்கு பல் வலின்னு வாணியம்பாடியில் மருத் துவர் அறிவரசனின் வி.டி.எஸ். பல் கிளினிக்குக்கு அழைத்துச்சென்றேன். சொத்தைப்பல் எனச் சொல்லி சிகிச்சை அளித்தார். இரண்டு நாளாகியும் வலி குறையாமல் அப்படியே இருந்ததால் மீண்டும் அவரிடமே காட்டியதும், பக்கத்தில் இருக்கற பல் தான் பிரச்சனை, இரண்டு பல்லையும் எடுக்க வேண்டுமென்றார். நாங்கள் அதன்பின் வேலூரி லுள்ள வேறொரு பல் மருத்துவமனையில் அம்மாவை காட்டியபோது, தவறான சிகிச்சையால் நோய் பாதிப்பு அதிகமாகியிருப்பதால் வேறெங் காவது பார்த்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
உடனே சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அழைத்துவந்து காட்டினோம். "இன்பெக் ஷன் மூளைவரை பரவி சீழ் வைத்துவிட்டது, காப்பாற்றுவது கடினம்' எனச் சொன்னார்கள்... இருந்தும் மருத்துவமனையில் அனுமதித்தோம். இறுதியில் 2023, ஏப்ரல் 15ஆம் தேதி அம்மா இறந்தார். எங்கம்மாவுக்கு 52 வயதிலும் பி.பி,, சுகர் எதுவும் இல்லை. பல் வலிக்கு சிகிச்சையெடுக்கச் சென்று உயிரிழந்துவிட்டார். நான் வாணியம் பாடிக்கு வந்து அறிவரசனிடம், சிகிச்சை ரிப் போர்ட்டை கொடுங்களென்று கேட்டேன், அவர் தர மறுத்துவிட்டார். என்னை, இணை இயக்குநர் மாரிமுத்துவை போய்ப் பார்க்கச் சொன்னார். அவரோ, என்ன நோய்னு தெரியல, விசாரிச்சிட்டு கூப்பிடறேன்னு சொன்னாரு, அழைக்கவேயில்லை. எங்கம்மா மாதிரி வரதன், சத்யா, நர்மதா, ஜெயசீலி, அபிசூர்ரஹ்மான், இளங்கோ, அனிதா பிரேம குமாரி என 8 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையெடுத்து அடுத்தடுத்து இறந்தது தெரிந்த தால் நான் எங்கம்மாவின் மெடிக்கல் ரிப்போர்ட் டை விடாமல் கேட்டேன்.
மருத்துவமனை வாசலில் தர்ணா செய்தும் தரவேயில்லை. பதிலாக, நான் மிரட்டுவதாகப் புகாரளித்து சிறைக்கு அனுப்பினார். வெளிவந்ததும் கலெக்டர், எஸ்.பி. எனப் பலருக்கும் மனு அனுப்பி னேன், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் என்னை சிறைக்கு அனுப்பினார். 2023, இறுதியில் சென்னை பொது சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் மனு தந்தேன், அவர்கள் என் மனுவை பெற்றுக்கொண்டதற்கு கடிதம் எதுவும் தரவில்லை. அதன்பின் அறிவு பல் கிளினிக் எனப் பெயர் மாற்றிக்கொண்டு செயல்படுகிறார் அந்த மருத்துவர். அந்த மருத்துவர் தவறான சிகிச்சை யளித்தே 8 பேர் உயிரிழந்துள்ளார்கள் எனச்சொன் னேன், நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இப்போது மருத்துவக்குழுவே கிளினிக்கில் நடந்த தவறால் தான் 8 பேர் இறந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள் ளது. இப்போது அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? 8 பேரின் இறப்புக்கு நியாயம் கிடைக்குமா?'' எனக் கேள்வியெழுப்பினார்.
அகில இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கோகுல்ராஜ், மருத்துவர் அறிவரசன் இருவரும் செய்தியாளர்களிடம், "இந்த ஆய்வறிக்கை முற்றிலும் தவறானது, ஸ்ரீராம்குமார் பிரச்சனை செய்தபோது கிளினிக் ஒன்னரை மாதம் மூடியிருந்தது. அப்போது ஆய்வுக்குழு உள்ளே வந்து உபகரணங்களை ஆய்வு செய்து, பரிசோதனைக்காக எடுத்துச்சென்றது. கோவிட் காலத்தில் மாசடைந்த உப்புக் கரைசலால் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம், அதற்கு மருத்துவமனை மீது குற்றம்சாட்டுவது தவறு. ஆய்வறிக்கையை எங்களுக்கு முழுமையாக வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து சங்கம் முடிவெடுக்கும்'' என்றார்கள்.
இறந்துபோன நோயாளிகளின் உறவினர்களில் இரண்டு குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, காவல் நிலையத்தில் புகார் தந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருகிறது என அந்த கிளினிக்குக்கு போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அடுத்த சில நாட்களில், "இரண்டு தரப்பிலும் விசாரித்துவிட்டோம். மருத்துவர் அறிவரசன் சிறப்பாக மருத்துவம் பார்க்கக்கூடியவர், 18 வருடமாக மருத்துவம் பார்க்கிறார். அவரது சிகிச்சையால் நோயாளிகள் இறந்தார்கள் என்பது மருத்துவரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவரது மருத்துவ மனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நடவடிக்கை எடுங்கள்'' எனச்சொல்லி வாணியம்பாடி காவல்துறை ஆய்வாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அப்போது இணைஇயக்குநராக இருந்த மாரிமுத்து. அவர் கடிதம் எழுதிய அதே வாரத்தில்தான் உயர் மருத்துவர்கள் அந்த கிளினிக்கில் ஆய்வு நடத்தி, நோயாளிகளுக்கு பாக்டீரியா பரவியது அங்கிருந்துதான் என அறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர். அப்படியிருக்க அந்த மருத்துவர் சிறப்பாக சிகிச்சையளிக்ககூடியவர் என மாவட்ட மருத்துவ அதிகாரி சர்ட்டிபிகேட் தந்தது சந்தேகத்தை எழுப்புகிறது.
இதுகுறித்து வேறு சில மருத்துவர்களிடம் கேட்ட போது, "பல் மருத்துவர்கள் பல்லை செக் செய்யும்போது பெரியோஸ்டீயல் லிஃப்ட் எனப்படும் கருவி யை பயன்படுத்துவார்கள். பல் இம்ப்ளீ மென்ட் செய்தபின் அந்த கருவியை உட னுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையென அந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது. அதேபோல் அறுவைச் சிகிச்சை அறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தினமும் கொதிக்கும் சுடுதண்ணியில் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். 6 மாதத்துக்கு ஒருமுறை அந்த அறை மற்றும் அங்குள்ள பொருட்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறதா? பரப்பு கிறதா என பரிசோதனை செய்து சர்ட்டிபி கேட் வாங்க வேண்டும். அப்படி செய்யவில்லையெனில் கிருமித்தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாவட்ட சுகாதாரப் பிரிவு மருத்துவ அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தார்களா எனத் தெரியவில்லை'' என்றார்கள்.
இந்நிலையில், பிரச் சினைக்குரிய பல் மருத்துவ மனைக்கு தற்போது அதிரடி யாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத் தூர் மாவட்ட பொது சுகா தாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி கூறுகையில், "மருத்துவர் அறிவரசனிடம் விசாரித்தபோது, அவரது பதில் ஏற்புடைய தாக இல்லை. அதன் காரணமாக அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளோம். இது சம்பந்தமாக மெடிக்கல் போர்டுக்கும், மருத்துவ அசோசியேஷனுக்கும் இவர்மீது புகாரளிக்கவுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
இந்தியாவில் பாதுகாப்பான மருத்துவ வசதிகள் கொண்ட மாநிலம் எனப் பெயரெடுத்துள்ளது தமிழ்நாடு. இந்நிலையில், 8 பேரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதுவே இறந்தவர்களுக்கு செய்யும் நீதி.