தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் இதுவரை 32,774 பேருக்கு மட்டுமே அரசுப் பணிகளில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய படி மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வங்காட்டவில்லை, வாக்குறுதியை கிடப்பில் போட்டுள்ள தால் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.
இதற்கு உதாரணமாக, தமிழக அரசின் வருவாய்த் துறையில் மூன்றாண்டு களாகக் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 27.9.24 அன்று, சென்னையிலுள்ள வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். வெளியிட்ட அறிவிப்பில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 1.1.2020 முதல் 31.12.2022 வரை, மூன்றாண்டு காலத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்த விபர அறிக்கை வரப்பெற்று, அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 564 காலிப்பணி யிடங்களுக்கு தமிழ்நாடு அரசின் அடிப்படைப் பணி விதிகளில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, மேற்படி காலிப் பணி யிடங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதல்படி நிரப்பிட வேண்டுமென்று தெரி விக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பின்படி தமிழகத் திலுள்ள எந்த மாவட்டத் திலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டால் உடனே விண்ணப்பித்து வேலை பெறலாமென்று பலர் காத்துக் கிடக்கிறார்கள்.
இது குறித்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி, இளமங்கலத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி நம்மிடம், "கணவரை இழந்த நான், இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். எங்கள் திட்டக்குடி வட்ட வருவாய்த் துறையில் 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச்சில் வந்தது. முறைப்படி விண்ணப்பித்து, ஏழு மாதங்களாகக் காத்திருக் கிறேன். ஆனால் அதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் உரிமைச் சட்டப்படி சென்னையிலுள்ள கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு தகவல் கோரினோம். ஆனால் அதுகுறித்த விவரங்களைத் தங்களுக்கு வழங்க வழிவகை இல்லையென்று மறுத்து பதிலளித்துள்ளனர். இப்படியிருந்தால் எப்படி? அரசு அறிவித்தபடி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்னைப் போன்ற தகுதியுள்ளவர் களைத் தேர்வுசெய்ய வேண்டும். அதில் முறைகேடுகள் நடக்காமல் அதிகாரி கள் நேர்மையாகச் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்கிறார்.
வதிஷ்டபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் நம்மிடம் கூறும்போது, "ஏற்கெனவே வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பப்போவதாக அறிவித்த அறிவிப்பு ஏழு மாதமாக முடங்கிக் கிடக்கிறது. தற்போது கூட்டுறவுத்துறை மூலம் காலியாகவுள்ள 3,280 ரேஷன் கடை காலிப் பணியிடங்களை நிரப்பப் போவதாகவும், அதற்கான தகுதியுள்ளவர்கள், நவம்பர் 7ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் வருவாய்த்துறை அறிவிப்புபோல் கிடப்பில் போடாமல் வேலை வழங்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் வேலைக்காக விண்ணப் பிப்பவர்களை பணி நியமனம் செய்யும்போது, குறுக்கு வழியில் யாருக்கும் வேலை வழங்கக் கூடாது. கடந்த காலங்களில் கிராம உதவியாளர் பணி நியமனங்களில் பல லட்சங்கள் பெற்றுக்கொண்டு முறைகேடாகப் பணி வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே நேரடி நியமனங்களில் அரசு அதி காரிகள் தகுதி அடிப்படையில் பணி வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும்'' என்கிறார்.
மேலும், "ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அப்படியே நிரப்பப்பட்டாலும், மக்கள் தொகைக்கேற்ற விகிதத்தில் அலுவலர்கள் எண்ணிக்கை இல்லாததால், பணிச்சுமை அதிகரித்து, மக்களின் கோரிக்கைகள், விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் கிடப்பில் கிடக்கின்றன. உதாரணமாக, எங்கள் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வீடு, மனை, நிலம் போன்றவற்றை அளவீடு செய்வதற்கு முறைப்படி பணம் செலுத்தி விண்ணப் பித்தவர்கள் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அலுவலர்கள் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நில அளவீடு செய்ய மனு அளித்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அளவீடு செய்து கொடுக்கவேண்டுமென்றும், தவறும் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படுமென்றும் அறிவித்துள்ளார். ஆனால் அவரது அறிவிப்பு செயல்படுத்தப் படாமல் இருப்பதால், நடைமுறையில் வருவாய்த்துறையில் மக்களின் மனுக்கள் மாதக்கணக்காகக் குவிந்துவருகின்றன. இதற்கான தீர்வு எப்போதுதான் வருமோ'' என்றார் விஜயகுமார்.
இப்படித்தான் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் காத் திருக்க வைக்கிறார்களோ என வருத்தப்படு கிறார்கள் வேலை பெற காத்திருப்போர்!