"ஐயா நா குடியிருந்த வீட்ட இடிச்சி தரைமட்டமாக்கிட் டாகய்யா! எனக்கு ஞாயம் வேணும்யா'' என்று கையறு நிலையி லிருக்கும் சுப்பிரமணியம் என்பவர் நம்மிடம் வேதனையோடு பேசினார். தென்காசியில் குடியிருந்துவிட்டு, பின்னர் அம்மாவட்டத்தின் பாவூர்சத்திரம் நகரில் குடியேறிய சுப்பிரமணியனை அவரது ஊரில் சந்தித்தபோது, அவரும், அவரது சகோதரி சுப்புலட்சுமியும் நடந்தவற்றை சொன்னார்கள்.
"எங்க அப்பா முருகையா செட்டியார் நாட்டு வைத்தியம் பார்த்துவந்தார். தென்காசி பக்கமுள்ள வெள்ளக்கால் கிராமத்தில தான் என்னோட தந்தையும், நாங்களும் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு எங்களுக்கு பாத்தி யம். பல வருஷமா அவுக நாட்டு வைத்தியம் பண்ணி வந்தாக, நான் ஒத்தாசையா இருந்தேன். எங்கப்பா காலமாகிட்டாங்க. அவருக்கு பின்னால நான் அந்த வீட்ல குடியிருந்தேன். அதுக்கு பிறகு அந்த ஊரவிட்டு வெளியேறி தென்காசிக்கு வந்துட்டோம். அந்த வீடு சம்பந்தமா O.S. NO 51/2016 படி தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில வழக்கு நம்பராயிருக்கு. அப்புறமா அந்த வழக்கு தள்ளுபடியாயிடுச்சி. 1994ல இங்க இடம் இருக்குற மதுரைக்காரர் பழனிவேல் நெல்லையப்பன்றவர்ட்ட நாலு மனைக்கு இருபதாயிரம் விலை பேசி, முன்னாள் வி.ஏ.ஓ. சுடலையாண்டித் தேவரை சாட்சியா வச்சி அட்வான்ஸ் ஏழாயிரம் கொடுத்திருந்தேன். அந்த இடம் எங்க அனுபவத்தில் இருந்திச்சி. ஆனா பேச்சுப்படி அவரு மனையும் குடுக்கல, பணத்தையும் திரும்பத் தரல.
இதுக்கிடையில 06.02.2024 அன்னைக்கி வெள்ளக்கால் கிராமத்துக்கு வீட்டப்பாக்கப் போனப்ப வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாகி வேலி போட்டுருந்திச்சி. அந்தப்பக்கம் விசாரிச்சப்ப, செல்வசுந்தரி, பழனிவேல் நெல்லையப்பன்னு மொத்தம் 11 பேர் சேர்ந்து வீட்ட இடிச்சிட்டதாச் சொன்னாக. எனக்கு இதால 40 லட்சம் நட்டம்யா. வழக்கு நிலுவையில் இருந்ததால கோர்ட்டுல இதப்பத்தி மனு குடுத்தேன். காப்பிய போலீசுக்கும் அனுப்பினேன், நடவடிக்கை இல் லையா'' என்றார் சன்னமான குரலில்.
நாம் அவரிடம் பழனிவேல் நெல்லையப்பனின் தொடர்பு விவரத்தை கேட்டபோது, "அதுபத்தி எனக்குத் தெரியாது. நீங்களே விசாரிச்சுக் குங்க''ன்னு வெடுக்கென்று சொல்லிவிட்டார். நாம் எவ்வளவோ முயன்றும் பழனிவேல் நெல்லையப்பன் பற்றிய தொடர்பு கிடைக்கவில்லை.
சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து கிராமத்திலிருக்கிற சிலரிடம் கேட்டபோது, "அந்தாளு ஒரு டைப்புங்க. வெவரம் சொன்னா கேக்கவே மாட்டாரு, சொன்னதையே சொல்லுவாரு. இந்த ஊர்லதான் குடி யிருந்தாக. ஊரக் காலிபண்ணி அஞ்சாறு வருசமாச்சி. மதுரைக்காரர்ட்ட மனைக்கி அட்வான்ஸ் குடுத்தது பழைய வி.ஏ.ஓ. சுடலையாண்டித் தேவரு. அவுக காலமாயிட்டாக. சுப்பிரமணியம்லாம் அட்வான்ஸ் குடுக்கல. நிலம் அனுபவம் சுடலையாண்டிக்குத்தான் இருந்திச்சி. அவரு வேற கிராமத்திலிருந்ததால அந்த மனைய பாத்துக்குங்கன்னு சுப்பிரமணியம், சுப்புலட்சுமி மேற்பார்வைல விட்டிருந்தார். ஒப்பந்தப்படி மதுரைக்காரர் மனைய குடுக்கலைங்றதால சுடலையாண்டி நடவடிக்கை எடுக்கணும்னு 2006ல நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு புகார் கூட பண்ணாருங்க'' என்றனர்.
சுப்பிரமணியன் நம்மிடம் கொடுத்த ஆவணக் காப்பிகளில் சுடலையாண்டி மனை குறித்து 29.12.06-ல் எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவுமிருந்தது. அதுபற்றி சுப்பிரமணியனிடம் கேட்டதில் முன்னுக்குப்பின் முரணான பதிலே சொல்கிறார்.
வெள்ளக்கால் கிராம ஊராட்சி யின் தலைவியாக மூன்றாம் முறை யாகத் தொடர்ந்து பொறுப்பிலிருப்பவர் செல்வ சுந்தரி. சுப்பிரமணி யனின் புகார் குறித்து அவரிடம் கேட்டதில், "இந்த கிராமத்திலுள்ள குறிப்பிட்ட சமுதாய மக்கள், தங்களோட நிலத்தை கிராமத்துக்கு வேண்டிய ரேசன் கடை, பள்ளிக்கூடம்னு கட்ட இனாமா அரசுக்கு நிலம் குடுத்ததால இனாம் வெள்ளக்கால் ஊர் பெயராச்சு. அந்தச் சின்ன வீடு பழனிவேல் நெல்லையப்பனுக்குச் சொந்தமான பழைய காலத்து வீடு. வீடு சும்மா கெடக்கேன்னு, சுப்பிரமணியோட தந்தை நாட்டு வைத்தியர் முருகையா செட்டியார் தனக்கு பழக்கமானவர்ன்றதால இரக்கப்பட்டு, அவருக்காக அந்தக் காலத்திலேயே வீட்டக் குடுத்தாரு பழனிவேல். வாடகைன்னு ஒரு பைசாகூட வாங்கல. முருகையா செட்டியார் காலமான பின்பு சுப்பிரமணியம் வீட்டக் காலிபண்ணிட்டு வெளியூர் போய் அஞ்சு வருசமாச்சு.
பாழடைஞ்ச அந்தப் பழைய வீட்ல பாம்பு பல்லிக அடையும், யாரும் அந்தப் பக்கம் போறதில்ல. அந்த பாழடைஞ்ச வீட்ல அயோக் கியத்தனமான செயல்க நடப்பதா தெரிஞ்சி விவகாரமாயிடக் கூடாதேன்னு யோசிச்சு, பழனியப்பன் தான் பாழடைஞ்ச தன்னோட வீட்ட இடிச்சி சுத்தி வேலி போட் டுட்டாரு. இதுதான் நடந்ததுய்யா. இதுக்கு என்னையும் சேர்த்து பத்துப்பேரு இடிச்சாகன்னு ஒரு புகாரக் குடுத்திருக்காரு சுப்பிரமணி. புகார விசாரிக்கணும் வாங்கன்னு அதிகாரிக கூப்பிட்டா சுப்பிரமணி யன் போறதில்ல. அவரு பாட்டுக்கு எங்கயாவது சுத்திட்டிருப்பாரு. நாங்க காத்துக்கிடந்து திரும்புனது தான் மிச்சம். என்ன பேசுறோம்னு அவருக்கே தெரியாது அப்படிப் பட்ட ஆளு. ஒரு வீட்டுத் தீர்வை ரசீதை வெச் சிக்கிட்டு என்னோட வீடு. எனக்கு பட்டாக் குடுங்கன்னு கேட்டா எந்த அதிகாரிய்யா பட்டா குடுப்பாக?'' என்றார் விளக்கமாக.
பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் குடும்பத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தீர விசாரித்து அவர்களுக்குத் தகுந்த நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கை.