சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் சூமோட்டோவாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த வழக்கில் "தங்களுக்கு எதிர்மறையாக எதுவும் நடக்காது என அமைச்சர்கள் இருவரும் நம்பிக்கைகொண்டிருந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவு அமைச்சர்களை மட்டுமல்ல; தி.மு.க. தலைமையையும் அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது' என்கிறார்கள்.
தங்கம் தென்னரசு வழக்கின் பின்னணி!
தமிழகத்தின் நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, கலைஞர் ஆட்சியில் (2006-2011) பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 74.85 லட்சம் அளவுக்கு சொத்து குவித்ததாக 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசால் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 2012 பிப்ரவரியில் பதிவு செய்தது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை. இதே ஆண்டு நவம்பரில் குற்றப் பத்திரிகையும் தாக்கலானது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக மாற்றப் பட்டதையடுத்து, தங்கம் தென்னரசுவுக்கு எதிரான இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அரசியல் பழிவாங்கலுக்குக்காகப் போடப்பட்ட பொய் வழக்கு என வாதாடிய தங்கம் தென்னரசு, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென 2019-ல் மனுத் தாக்கல் செய்தார். ஆனாலும், இதில் எந்த உத்தரவும் அப்போது பிறப்பிக்கப்படவில்லை.
2021-ல் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இந்த நிலையில், 2022-ல் இந்த வழக்கில் துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, வருமானத்தை விட 1.54 லட்சம் ரூபாய் மட்டுமே கூடுதலாக இருப்பதாகவும், குற்றப் பத்திரிகையில் இருப்பதுபோல 74.85 லட்சம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதனையேற்று, 2022, டிசம்பர் 12-ல் தங்கம் தென்னரசுவையும், அவரது மனைவியையும் விடுதலை செய்தார் அன்றைய சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். வழக்கின் பின்னணி!
தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ஆர். 2006-2011ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அமைச்சராக இருந்தார். வருமானத்துக்கு அதிகமாக 44.59 லட்சம் ரூபாய் சொத்துக்களைக் குவித்ததாக 2011, டிசம்பரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், அவரது மனைவி ஆதிலட்சுமி, அவரது நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது ஜெயலலிதா ஆட்சியின் அன்றைய லஞ்ச ஒழிப்புத்துறை. 2012, செப்டம்பரில் குற்றப்பத்திரிகையும் தாக்கலானது.
வழக்கின் விசாரணை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், ஸ்ரீவில்லி புத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றமாக 2019-ல் மாற்றப்பட்டதையடுத்து, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க. பொறுப்புக்கு வந்தது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தாக்கல் செய்திருந்த மனு மீது 2021, செப்டம்பரில் விசாரணையைத் துவக்கியது லஞ்ச ஒழிப்புத்துறை.
விசாரணையின் இறுதியில், அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை, குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டதைப்போல 44.59 லட்சம் ரூபாய் கூடுதலாக இல்லை; வருமானத்துக்கு அதிகமாக 1.49 லட்சம் ரூபாய் தான் இருக்கிறது என அறிக்கைத் தாக்கல் செய்தார் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அதிகாரி. அதாவது தங்கம் தென்னரசுவுக்கு என்ன மாதிரி அறிக்கையை தாக்கல் செய்ததோ அதேபோன்ற அறிக்கையை தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். உள்ளிட்ட வர்களை 2023, ஜூலை மாதம் 28-ந் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார் அன்றைய நீதிபதி திலகம்.
இந்த நிலையில்தான், அமைச்சர் கள் இருவருக்கும் எதிராக தாமாக முன்வந்து (சூமோட்டோ) மேல் முறையீட்டு வழக்காக ஆகஸ்ட்டில் எடுத்துக் கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சூமோட்டோ வழக்கின் விசாரணையில் போது, அமைச்சர்கள் இருவரின் தரப்பிலும் ஆஜரான தமிழக அரசின் அன்றைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சூமோட்டோவாக எடுத்துக் கொண்டதை கடுமையாக எதிர்த்தார்.
நீதிமன்றம், குறிப்பிட்ட அரசுக்கோ, கட்சிக்கோ உரித்தானதல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப்போக வைத்து விடுகின்றனர்.
"நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்த விவகாரத்தில் கண்களை மூடிக்கொண்டு நீதிமன்றம் இருந்துவிட முடியாது'’என்று சூமோட்டோவாக எடுத்துக் கொண்டதற்கான காரணங்களை அடுக்கினார்.
சூமோட்டோவை எதிர்த்து அமைச்சர் கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்த சூமோட்டோ வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என அறிவித்தார்.
அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்கை விசாரிக்கத் தொடங்கினார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். வழக்கின் விசாரணை யின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தரப்பில், ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்ட பிறகு சூமோட்டோவாக விசாரிக்க எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. ஆனால், அப்படி எடுத்துக்கொண்டால் எல்லா வழக்குகளையும் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இது நீதித்துறைக்கு உகந்தது அல்ல! அமைச்சர் என்பதால் உள்நோக்கத்துடன் மறு ஆய்வு செய்யக்கூடாது என்கிற ரீதியில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல தங்கம் தென்னரசு தரப்பில், ஆதாரங்களை புறம்தள்ளிவிட்டு முந்தைய ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அதை எப்படி நியாயமான விசாரணையாக ஏற்க முடியும்? புலன் விசாரணை அதிகாரி தாக்கல் செய்த ஆதாரங்களை மறைக்காமல், புறந்தள்ளாமல் கூடுதல் ஆதாரங் களை இணைப்பது மறு விசாரணையாகாது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என மேல்விசாரணையில் வழக்கை முடித்தால், குற்றம்சாட்டப்பட்டவர்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்கிற வாதங்களை முன்வைத்து வாதாடப்பட்டது.
மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யினர் முன் வைத்த வாதங்களும், அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டது சரிதான் என்பதாகவே இருந்தன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "அரசு தரப்பின் இரண்டு அறிக்கைகளையும் ஆராயும்போது முரண்பாடுகள் இருப்பது தெரியும். இரண்டில் எது உண்மை என்பது விசாரணையில் ஆராயப்பட வேண்டுமே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் கட்டத்தில் அல்ல! குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, அதிகார வரம்பை மீறியதன் வாயிலாக சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற் கான வழிகளை கண்டுபிடித்து அதன்படி செயலாற்றியுள்ளனர். இதனை சிறப்பு நீதிமன்றம் கவனிக்காமல் விட்டது துரதிர்ஷ்டமானது. சட்டவிரோதமான அந்த உத்தரவுகளில் தலையிடுவதை அரசியல் சாசன கடமையாக இந்த நீதிமன்றம் கருதுவதால், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. இந்த வழக்கு களை சிறப்பு நீதிமன்றம் தினமும் மீண்டும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க வேண்டும்''’என்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
விடுதலை ரத்து செய்யப்பட்டிருப்பதும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பதும் அமைச்சர்களையும் தி.மு.க. தலைமையையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து அரசின் மூத்த வழக்கறிஞர்களிடம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு ஸ்டே வாங்க முடியுமா? என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் விடுதலை ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவுதான். இவர் களைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர் களுக்கு எதிரான சூமோட்டோ வழக்கிலும் இதேபோன்று தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புண்டு. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு மீண்டும் விசாரணையை நடத்த உத்தரவிட்டிருப்பதால் இந்த வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வருவதற்கு அடுத்த வருடம்கூட ஆகலாம். அடுத்த வருடம் என்பது சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகக்கூடிய ஆண்டு. அதனால், அரசியல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றோடு பின்னிப் பார்த்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடிகள் அதிகமாகும்.
எங்களுக்குக் கிடைக்கிற தகவல்கள்படி, அரசியலில் வலிமையாகவும், தேர்தலை எதிர்கொள்ள நிதி ஆதாரமாகவும் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த 10 அமைச்சர்களையும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 மாஜி அமைச்சர்களையும் குறிவைத்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மெல்ல, மெல்ல ஆரம்பித்து, அடுத்தாண்டில் அது சீரியஸாகும். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் ஒருசேர பதம் பார்ப்பதே டெல்லியின் அரசியல் திட்டமாக இருக் கிறது''’என்கிறார்கள் மிக அழுத்தமாக!