டெல்லி தமிழ் கல்விக் கழகத்துக்கு மூடுவிழா நடத்தும்வகையில், மாணவர்கள் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் பணத்தை வசூல்செய்து டெல்லிவாழ் ஏழை எளிய தமிழ் மாணவர்களுக்கு கல்விகிட்டாமல் செய்து வருகின்றனர் சிலர். இதற்கெதிராக டெல்லி தமிழ் மக்கள் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக பணிபுரிந்த டெல்லிவாழ் மக்கள், தங்களின் குழந்தைகளுக்கு பாரம்பரிய தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும்வகையில் 1923-ஆம் ஆண்டு மதராசி கல்விச் சங்கத்தை உருவாக்கினர். 1972-ஆம் ஆண்டு கலைஞரால் மதராசி கல்விச் சங்கம், டெல்லி தமிழ் கல்விச் சங்கம் எனப் பெயர்மாற்றப்பட்டது. அதன் வளர்ச்சிக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, தற்போது 7,000 மாணவர்கள், 500 ஆசிரியர்கள், 8 பள்ளிகள் என வளர்ச்சி கண்டுள்ளது.
இக்கழகத்தின் பள்ளிகள் 95% டெல்லி மாநில அரசாலும், 5% டெல்லி தமிழ்க் கல்விக்கழகத்தாலும் நிர்வகிக்கப்படுகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள 15 லட்சம் தமிழ் மக் கள் பயன்படும் வகையில் உள்ளது இக்கழகம்.
இந்தப் பள்ளிகளில் தமிழர்கள் படிப்பதற்கான சூழ்நிலை இல்லை, தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர், தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் நிதி வழங்குபவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படு கிறது என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன. 2021, 2022 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதியே அற்ற ஆசிரியர்களுக்கு, பல லட்சங்கள் பெற்றுக்கொண்டு பணிநியமனம் வழங்கப்பட் டுள்ளதாம். இதனை டெல்லி போலீஸும், சி.பி.ஐ.யும் விசாரணை செய்தன. இதில் முன்னாள் டெல்லி கல்வி இயக்குனராக இருந்த உதித்பிரகாஷ் ராய், அவரது மனைவி ஷில்பா ராயை போலி அனுபவச்சான்றிதழ் மூலமாக பணிநிய மனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. டெல்லி தமிழ் கல்விக்கழகச் செயலாளர் ஆர்.ராஜு செய் யும் குற்றங்களுக்கு உதித்பிரகாஷ் பாதுகாப்பாக இருந்துள்ளார். தகுதியே இல்லாத பலருக்கு ஆசிரியருக்கான போலிச் சான்றிதழை இவரே தயார்செய்து கொடுத்து அதற்கு ஒரு குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக்கொள்வாராம். தமிழக அரசு டெல்லி மயூர்விஹார் பகுதியில் பள்ளி தொடங்க 5 கோடி நிதி வழங்கியுள்ளது. அதனையும் இவர்கள் சுருட்டியுள்ளனர். இதுபோன்ற பல விஷயங்கள் சி.பி.ஐ. விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த ஊழல்களை மூடிமறைக்க, தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனை அணுகி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றுவருகிறாராம் ராஜு. தற்போதும் 4 பள்ளிகளுக்கு பணம்பெற்றுக்கொண்டு முதல்வர் களை நியமித்துள்ளாராம். நயினார் நாகேந்திரனின் உதவிக்குக் கைமாறாக உறவினரான சுமதி என்பவருக்கு இப்பள்ளிகளில் ஒன்றில் முதல்வர் பதவி வழங்கியுள்ளாராம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கும் அவரது மகனுக்கும் தேர்தல் நிதிவழங்க தயாராக உள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்சமயம் ஜூலை மாதத்துக்கான மாணவர்களின் சேர்க்கை நடந்துவருகிறது. அதிலும் தமிழ் மாணவர்களுக்கு சீட் வழங்காமல், வடமாநில மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். அவர்களிடம் 2 லட்சம் வரை கல்விக் கட்டணமாக வசூல்வேட்டை நடத்துகிறாராம்.
யார் இந்த ராஜு? டெல்லி விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஆபிஸ் பாயாக பணியைத் தொடங்கிய இவர், தன்னுடைய மகனின் படிப்பிற்காக டெல்லி தமிழ் கல்விக் கழகத்தில் உறுப்பினராகி பிறகு 2010 ஆண்டு தேர்தலில் நின்று வெற்றிபெற்று பதவிக்கு வந்தவர். பிறகு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு முக்கியமான புள்ளிகளைப் பிடித்துக்கொண்டு, ஒருகட்டத்துக்குப் பின் இந்த அமைப்புக்குத் தேர்தலே நடத்தாமல் தன்னை நிரந்தரமான உறுப்பினராக அறிவித்துக்கொண்டு ராஜ்ஜியம் நடத்திவருகிறார்.
இதுகுறித்து டெல்லிவாழ் தமிழர்களி டம் கேட்டபோது, “"டெல்லி தமிழ் கல்விக் கழகத்தில் தமிழர்களுக்கான முழு உரிமை களும் மறுக்கப்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கவரும் மாணவ-மாணவிகள், டிரைவர், வீட்டு வேலை, கூலித்தொழில் செய் பவர்களின் குழந்தைகள். இந்த குழந்தைகளி டம் பள்ளிக் கட்டணம் பெறக்கூடாது என்பது விதி. அந்த விதியை மீறி இவர்கள் வசூல் செய்வது நியாயமா? இப்பள்ளிக்கு டெல்லி அரசுதான் 95% செலவிடுகிறது, மீதமுள்ள 5%தான் நிர்வாகம் செலவு செய் கிறது. அதையும் தமிழக அரசு கொடுக் கிறது. அதுபோக 7 பள்ளிகளிலும் தமிழர் கள் மட்டும் 2,300 பேர். மீதமுள்ள 5,000 பேர் வட இந்தியர்களாகவே உள்ளனர். அவர்களிடம் ஒரு மாணவருக்கு 2 லட்சம் வரை நிதி பெற்றுக்கொண்டுதான் சீட்டே கொடுக்கிறாங்க. அந்த நிதியெல்லாம் எங்கே போனது?.
இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர்கள் ஆசிரியர் களாக உள்ளனர். அப்படி ஒருவர் தகுதி யின்றி ஆசிரியராக நியமிக்கப் பட்டுள்ளதை ஆதாரத்துடன் நிரூ பித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. 170 ஆசிரியர்களில் 50 பேர் போலி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிவழங்கி வருகிறார்கள். இதுபோன்ற பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி எப்படி கிடைக்கும்? தமிழர்களுக்காகத் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கலைஞரால் மேம்பாடுகண்டது இந்தப் பள்ளி. தற்போதுள்ள தி.மு.க. அரசு இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து நிர்வாகத்தை மாற்றி, சீர்செய்தால் இந்த ஏழை எளிய மக்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்''’ என்கிறார்கள்.
இதுகுறித்து விளக்கம்பெற செயலாளர் ராஜூவைத் தொடர்புகொண்ட போது, நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.
-சே