விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது எக்கியார்குப்பம். கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு பகுதியில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அமரன் என்ற பிரபல கள்ளச்சாராய வியாபாரி விற்ற கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட் டோர் மே 13-ஆம் தேதி மாலை குடித்துள்ளனர். அதில் இக்கிராமத்தைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சந்திரன், சுரேஷ், மண்ணாங்கட்டி உள்ளிட்ட நபர்கள் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்துள்ளனர்.

f

இவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். இவர்களை அவர்களது உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணிவேல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜமூர்த்தி, மூதாட்டி மலர்விழி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற அனைவரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சரக டி.ஐ.ஜி. பகலவன் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உட்பட அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. எக்கியார்குப்பம் மீனவர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தியெடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகைவாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகிய ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக எக்கியார்குப்பம் உட்பட கடற்கரையோர கிராமங்களில் மிகவும் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமரன் விற்பனை செய்த கள்ளச் சாராயத்தை குடித்துவிட்டு எக்கியார்குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். விஷச்சாராய வியாபாரிகளை கைதுசெய்ய எஸ்.பி. உத்தரவிட்டதைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியான பிரபல கள்ளச்சாராய வியாபாரி அமரன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரம் செய்துவந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் அதிரடியாக கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரியும் இதற்கு உடந்தையாக இருந்து மாமூல் வசூல்செய்யும் காவல்துறையினர் மீதும் நட வடிக்கை எடுக்கக் கோரியும் 500-க்கும் மேற்பட் டோர் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராய வியாபாரிகள், உடந்தையாக இருந்த காவல்துறை யினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.

Advertisment

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவரமறிந்த சமூக ஆர்வலர் நம்மிடம், "கர்நாடக மாநிலத்திலிருந்து காலம் காலமாக பெங்களூர், ஓசூர், திண்டிவனம் வழியாக புதுச்சேரி பகுதிக்கு லாரிகளிலும் டேங்கர் லாரிகளிலும் மெத்தனால் கலந்த எரிசாராயம் கடத்திவரப்படுகிறது. இதை மொத்த சாராய வியாபாரிகளிடமிருந்து கடற்கரை ஓர கிராமங்களிலுள்ள சின்ன சாராய வியாபாரிகள் வாங்கி அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து விற்பனை செய்கிறார்கள். தண்ணீர் அதிக அளவு கலந்தால் போதை குறைவாக இருக்குமாம் அதனால் குறைவான அளவு தண்ணீரை கலந்து விற்பனை செய்கிறார்கள். இதைக் குடிப்பவர்கள் குடல்வெந்து உயிரிழந்து வருகிறார்கள்.

ss

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற சாராயத்தைக் குடித்த கடலூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காவலர்கள் கண்துடைப்புக்காக எப்போதாவது சிலமுறை வாகன சோதனையின்போது சாராய கடத்தல் பேர்வழிகளை சரக்கோடு பிடித்து கணக்குக் காட்டு வது உண்டு. இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட் டால் அப்போது சில நாட்கள் உயரதிகாரிகள் பிரஷர் காரணமாக பரபரப்பான நடவடிக்கை இருக்கும். கனகசெட்டிகுளம் கள்ளச்சாராய கடைக்கு 30,000, காலாப்பட்டு கடைக்கு 15,000, சேதாரப்பட்டு கடைக்கு 25,000, ssலிங்கரெட்டிப் பாளையம் கடைக்கு 40,000, காட்டேரிக்குப்பம் கடைக்கு 30,000 சந்தப் புதுகுப்பம் கடைக்கு 15,000 திருவக்கரை கடைக்கு 10,000... இவையெல்லாம் காவல்துறைக்கு மாதம் தோறும் லஞ்சமாக கொடுக்கப்படும் பணப் பட்டியல் என்கிறார்கள்.

தமிழக அரசு இறந்துபோனவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட் டம் பெரும்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, சின்னத்தம்பி, கரிக்கன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன், அவரது மனைவி சந்திரா ஆகியோர் அப்பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி அமாவாசையிடமிருந்து கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்ததில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திலும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு களையடுத்து தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராய வியாபாரிகள் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய பிரச்சினைக்கு நிரந்தர முடிவுகட்டவேண்டும் அரசு!