தடுப்பூசி வந்தாலும், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கைத் தவிர உலகம் முழுக்க வேறு கண்டுபிடிப்பு எதுவும் இல்லை. அப்படித் தான் தமிழகத்தில் 10-ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையுடன் வாடுகிறார்கள்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 50 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா என பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது முழுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 45 நாட்களுக்கு மேலாக வெளி மாநிலங்களுக்கு உற்பத்தியான ஜவுளிகள் அனுப்ப முடியாமல் ரூபாய் 500 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் சென்றமாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. இதனால் விசைத்தறி உற்பத்தியைப் பாதி அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டு அதேபோல் இயங்கியது.
இதனால் நாளொன்றுக்கு 50 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியான இடத்தில், 20 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இந்நிலை யில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடந்த 6-ஆம் தேதி முதல் முழு உற்பத்தியையும் நிறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சென்ற 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் விசைத்தறிகள் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாமல் மூடப்பட்டு உள்ளது.
.இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 15 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள ஒரு லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, ஏறக்குறைய ஏழுலட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
அதேபோல் ஜவுளித்தொழில் வேட்டி, லுங்கி, சேலைகள், காடாத்துணிகளை மடிக்கும் தொழிலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். அன்றாடக் கூலி அடிப்படையில் பணி மேற்கொள்ளும் அவர்களுக்கு துணி உற்பத்தி இருந்தால் மட்டுமே வேலை இருக்கும். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கால் இந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடினார்கள்.
இப்போது முழுஊரடங்கு துவங்கியதாலும், துணி உற்பத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்ட தாலும், வேலைவாய்ப்பை முழுமையாக இழந்துள்ளனர். "வீட்டு வாடகை, உணவு பொருட்கள் வாங்க கூட முடியாமல் தவித்துவருகிறோம். அரசு எங்கள் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்'' என்று பரிதாபமாக கோரிக்கை வைத்தார் வெங்கடாசலம்.
கொரோனா எனும் சங்கிலியை அறுக்க ஊரடங்கு அவசியம்தான். தமிழகத்தில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வேலைகளில் ஈடுபடும் தினக்கூலி தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் என்கிற வழிவகை செய்வதும் அரசின் கடமை.