இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வசூலிக் கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய தணிக்கைக் குழு, 2017 முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாவடியில், விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ.22 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற் கிடையில் செப்டம்பர் 1-ஆம் தேதி பல டோல்கேட்டு களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, "ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏழு ஊழல் களைப் பற்றி பேசியுள்ள சி.ஏ.ஜி. அறிக்கையில் முக்கிய மான ஒன்று "டோல்கேட்" ஊழல். செங்கல்பட்டு - பரனூர் டோல்கேட், பொதுப் பணத்தில் அமைக்கப் பட்ட டோல்கேட். அதன்வழியாக ஆகஸ்ட் 2019-லிருந்து ஜூன் 2020 வரை 1,17,08,438 வாகனங்கள் கடந்துசென் றுள்ளன. அவற்றில் 53 சதவிகிதம் அதாவது 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன வி.ஐ.பி. வாகனங்களாம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்தியாவிலுள்ள அனைத்து டோல்கேட்டு களையும் தணிக்கை செய் தால், உலக மகா ஊழல் வெளிச்சத்திற்கு வரும். பரனூர் டோல்கேட் மட்டு மல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளிலுள்ள மற்ற டோல்கேட்டுகளிலும் இதுதான் நிலைமை. ஆத்தூர் டோல்கேட்டைக் கடந்துசென்ற 36 சதவிகித வாகனங்கள் வி.ஐ.பி.க்களாம். வி.ஐ.பி. களுக்கு இலவசம். ஜனவரி 2020 முதல் செப். 2020 வரையிலான காலத்தில் கப்பலூர் டோல்கேட் வழியாகச் சென்றதில் 25 சதவிகித வாகனங்கள் வி.ஐ.பி. வாகனங்களாம்.
தனியார் டோல் கேட்டுகளில் இந்த கணக்கு தலைகீழாக உள்ளது. செங்குறிச்சி டோல்கேட் உளுந் தூர்பேட்டை அருகில் உள்ளது. அங்கே ஜனவரி 2020 முதல் செப். 2020 வரை கடந்துசென்ற வாகனங்கள் 49,77,901. அவற்றில் கட்டணம் கட்டாத வி.ஐ.பி. வாகனங்கள் 12.60%. கணியூர் டோல்கேட் 11.12%. வேலன் செட்டியூர் டோல்கேட் 7.13%. பாளையம் டோல்கேட் 6.93%. வைகுண்டம் டோல்கேட் 6.76%. கொடைரோடு டோல்கேட் 6.06%.
பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையான பரனூர் டோல்கேட்டில் 53 சதவிகித வி.ஐ.பி.க்கள் பயணம் செய்கிறார்கள். அதுவே தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட கொடை ரோடு டோல்கேட்டில் 6 சதவிகிதம்தான் வி.ஐ.பி.க் கள் பயணம் செய்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அரங்கேறி இருக்கிறது. சி.ஏ.ஜி அறிக்கையால் பல வகையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க டோல்கேட்டாக பரனூர் டோல்கேட் மாறியுள்ளது. உலகத்திலேயே 50 சதவிகித வி.ஐ.பி.க் கள் பயணம்செய்யும் பெருமைகொண்ட பரனூர் டோல்கேட்டை நவீன ஊழலின் அடையாளமாக “"பா.ஜ.க. மாடல் டோல்கேட்'”என்றே அழைக்கலாம்''’என்றார்.
சுங்கசாவடியில் நடக்கும் ஊழல் குறித்து தொடர்ச்சியாக வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர் பினய் காஸ் நம்மிடம், "சுங்கசாவடிகள் விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றன. காலக்கெடு முடிந்தும் சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறு கின்றன என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் அதிகமான சுங்கச்சாவடி கள் உள்ளன. இது விதிகளுக்கு முரணாக இருக் கிறது. கேரளாவில் 1,782 கி.மீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெறும் மூன்றே மூன்று சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளன. 15,437 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை கொண்ட மகாராஷ் டிரா மாநிலத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால், 5,381 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை யுள்ள தமிழகத்தில் 64 சுங்கச்சாவடிகள் உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் 15 சுங்கச்சாவடிகளே இருக்கவேண்டும். 64 சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பது வழிப்பறியே.
வாகனங்கள் இயங்கு வது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மூலமே. பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் கம்பெனிகள் நிர்ணயித்த விலைக்கு மேலாக ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் வரி வசூலிக்கின்றன. ஒன்றிய அரசு வசூலிக்கும் தொகையில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 2-ம் என்று அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஓராண்டில் மட்டும் ரூ.2,70,000 கோடி அடிப்படைக் கட்டமைப்பு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை மேம்பாட்டிற்கு என்று இவ்வளவு நிதியை வாகன உரிமையாளரிடம் வசூலித்துவிட்டு, அதற்குமேல் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது அப்பட்டமான கொள்ளை.
தேசிய நெடுஞ்சாலை ஆணையமே அமைக்கும் டோல்கேட் சாலைகளுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள். அப்படி நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் உறவுக்காரர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் பொய்க் கணக்குகளையே சமர்ப்பிக்கிறார்கள். ஒவ்வொரு சாவடியிலும் இரண்டு பில் போடு கிறார்கள். அதுதான் தற்போது மத்திய தணிக்கைக் குழுவால் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் போட்டு தணிக்கை செய்தால் பல லட்சம் கோடி ஊழல் அம்பலமாகும்'' என்றார்.
கோடிகளில் கொள் ளையடிக்கும் சுங்கச் சாவடிகளுக்கு மூடுவிழா நடத்துவது அவசியம்!
-அண்ணல்