சிறு, குறு விவசாயிகளுக்கு, அரசு தரும் பயிர்க்கடன் உதவி பெரும் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அதிகபட்சமாக 1.60 லட்சம் ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது. நில அடமானத்தின்பேரில் 3 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற முடியும். இந்நிலையில், 1.4.2022 முதல் பயிர்க்கடன் வழங்குவதில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, விவசாயிகளை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாக அதிருப்தி கிளம்பி இருக்கிறது.

ee

இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயிகள் முன்னேற்றக் கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் நம்மிடம் பேசினார். "பயிர்க்கடன் பெறுவதில் இரண்டு நடைமுறைகள் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தன. ஒரு விவசாயி, எந்த ஊரில் சாகுபடி நிலம் வைத்திருந்தாலும், அவருடைய குடியிருப்பு எங்குள்ளதோ அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் பெற்றுக் கொள்ள லாம் என்பது ஒரு நடைமுறை. நிலம் எங்குள்ளதோ, அந்த எல்லைக்கு உட்பட்ட கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் பெற்றுக் கொள்வது இரண்டாவது நடைமுறை. ஆனாலும், 99 சதவீத பயிர்க்கடன்கள், வசிப்பிடத்தை ஆதாரமாகக்கொண்டே வழங்கப்பட்டது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் காலங்காலமாக பயிர்க்கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டு முதல், சாகுபடி நிலம் எங்குள்ளதோ, அந்தப் பகுதியி லுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் மட்டுமே பயிர்க் கடன் பெற முடியும் என்ற நடைமுறையை மட்டும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவால், இனி கூட்டுறவு சங்கத்தில் புதிதாகக் கணக்கு தொடங்க வேண்டியிருப்பதோடு, புதிதாக பங்குத்தொகையும் செலுத்த வேண்டும். ஜாமீன்தாரர் யாரையாவது புதிதாகத் தேடிப்பிடிக்க வேண்டும். எங்களைப் பற்றி முன்பின் அறிமுக மில்லாத ஊரில் எங்களுக்காக ஜாமீன் கொடுக்க யார் முன்வருவார்? ஒருவர், இரண்டு, மூன்று ஊர்களில் விளைநிலங்களை வாங்கிப் போட்டிருப் பார். புதிய நடைமுறையால், ஒவ்வொரு ஊரிலும் புதிதாக கணக்கு தொடங்கவேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள் ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் தத்தளித்து வருகின்றனர். எனவே விவசாயிகளை அலைக்கழிக்காமல் பழைய நடைமுறையின்படியே பயிர்க்கடன் வழங்க வேண்டும்'' என்றார் பாலசுப்ரமணியம்.

Advertisment

ee

Advertisment

சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், "எனக்கு மின்னாம்பள்ளியில் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தின் பேரில், இதுவரை எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் பெற்று வந்தேன். இப்போது, புதிய விதிகளைச் சுட்டிக்காட்டி மின்னாம்பள்ளி கூட்டுறவு சங்கத்திற்கு விரட்டி அடிக்கின்றனர். அங்கு எனக்கு யாரையுமே தெரியாது. நான் எப்படி ஜாமீனுக்கு ஆளைப் பிடித்து பயிர்க்கடன் பெற முடியும்?'' என்று புலம்பினார்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத்தலை வர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கூறுகையில், "பயிர்க்கடன் வழங்குவதில் மாநிலம் முழுமைக்கும் புதிதாக ஒரே நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை களை, கூட்டுறவு சங்கத்தின் துணை விதிகளில் சேர்க்கும்படியும் கூறப்பட்டுள் ளது. இந்த உத்தரவால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களுக்கும் புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வேறொரு சங்கத்துக்கு கணக்கை மாற்றும் போது, எங்கள் சங்கத்தில் அவர் வைத்திருந்த டெபாசிட், நகைக்கடன் உள்ளிட்ட வற்றை முடித்துக் கொள்வதால் எங்கள் வணிகமும் பாதிக்கிறது. புதிய விதிமுறையை ரத்து செய்யும்படி கூட்டுறவு சங்க செயலாளர்கள் இணைப்பதிவாளர், துணைப் பதிவாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அவர்களோ, இதெல்லாம் அரசு உத்தரவு என்று சொல்லி கையை விரித்து விட்டனர்''’என்கிறார்கள்.

இதுபற்றி சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிகுமாரிடம் கேட்டபோது, "கடந்த காலங்களில் பயிர்க்கடன் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்தன. நிலம் ஒரு மாவட்டத்திலும், பயிர்க்கடன் ஒரு மாவட்டத்திலும் கூட இருந்தது. அதனால் விவசாயி உண்மையிலேயே பயிர் செய்துள்ளாரா என்பதை ஆய்வு செய்வதில் சிக்கல் இருந்தது. இதையெல்லாம் களையும் நோக்கில்தான் பயிர்க்கடன் பெறுவதில், மாநிலம் முழுமைக்கும் ஒரே விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறச்செல்லும் விவசாயிகள், ஏற்கனவே வரவு, செலவு செய்து வரும் சங்கத்தில் உள்ள பங்குத்தொகையை அப்படியே மாற்றிக்கொள்ளலாம்'' என்றார்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரத்திடம் விளக்கம் பெறத் தொடர்பு கொண்டபோது, அழைப்பைத் துண்டித்தவர், "ப்ளீஸ் டெக்ஸ்ட் மீ' என்று நமக்கு எஸ்.எம்.எஸ். செய்திருந்தார். நாமும் விவசாயிகளின் பிரச்னை குறித்து எஸ்.எம்.எஸ். செய்தோம். அவரிடமிருந்து கடைசிவரை பதிலேதும் வரவில்லை. ஏற்கனவே, விளை பொருள்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்காமல் அல்லல்பட்டு வரும் விவசாயிகளை, பயிர்க்கடனுக்காக அலைக்கழிக்காமல், வங்கிச் சேவைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.