சேலம் மாநகராட்சியில் செயல்திறன் உதவியாளர் காலிப்பணியிடங்களை, அங்கு பணியாற்றிவரும் ஊழியர்கள் மற்றும் ஆளுங் கட்சிப் புள்ளிகளின் வாரிசுகளுக்கு 2.40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
சேலம் மாநகராட்சியில், பொறியியல் பிரிவில், காலியாக இருந்த 6 செயல்திறன் உதவியாளர் நிலை-2 (ஸ்கில்டு அசிஸ்டன்ட் கிரேடு-2) பணியிடங்களுக்கு கடந்த 9.12.2022-ஆம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இந்தப் பதவிக்கு, பட்டய பொறியியல் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், நேர்காணலுக்கு 55 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த நேர்காணல் வெறும் கண்துடைப்புதான் என்றும், மாநகராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும், ஆளுங்கட்சி புள்ளிகளின் மகன்களுக்கும் ஏற்கனவே இந்த பணியிடங்கள் தலா 40 லட்சம் ரூபாய் வீதம் 2.40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கடந்த 17-12-2022ஆம் தேதி "நக்கீரன்' இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
நக்கீரன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, புதிதாக தேர்வுசெய்யப்பட்ட செயல்திறன் உதவியாளர் களுக்கு பணிநியமன ஆணையை வழங்காமல், மாநகராட்சி நிர்வாகம் ரகசியம் காத்துவந்தது. சற்று பரபரப்பு ஓய்ந்த நிலையில், அவர்களுக்கு கடந்த டிச. 23-ஆம் தேதி இரவோடு இரவாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. டிச. 26-ஆம் தேதி அனைவரும் பணியில் சேர்ந்துள்ளனர்.
நக்கீரன் அம்பலப்படுத்திய 9 பேர் கொண்ட பட்டியலில் இருந்து 3 பேருக்கும், புதிதாக 3 பேருக்கும் இந்தப் பணி யிடங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன. ஏற்கனவே முடிவுசெய்து வைத்திருந்த மூன்று பேர், கடைசி நேரத்தில் கேட்ட தொகை யைக் கொடுக்கமுடியாததால் புதிதாக மூவர் இணைக்கப் பட்டதாகக் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, சேலம் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.
""சேலம் மாநகராட்சியில் மேயர் ராமச் சந்திரன் தலைமையிலான புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, செயல்திறன் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பி, கல்லா கட்டிவிட அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் திட்டமிட்டு வேகவேகமாக காய்நகர்த்தினர்.
ஆரம்பத்தில் இந்தப் பணிக்கு தலா 25 லட் சம் ரூபாய் விலைநிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சேலம் மாநகராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்குள்ளேயே இந்தப் பணியிடங் களைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ஆனாலும், நிர்ணயிக்கப் பட்ட தொகை முழுமையாக வசூல் ஆகாமல் இருந்ததால், நேர்காணல் ஒத்திவைக்கப்பட் டது.
இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் செயல்திறன் உதவியாளர் நிலை-2 பதவியின் விலை 25 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஏற்கனவே நக்கீரன் இதழ் சுட்டிக் காட்டியபடி, சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிவரும் செல்வராஜின் மகன் கனிஷ்ஹரன், மேயர் ராமச்சந்திரனின் அலுவலக நேர்முக உதவியாளர் அனந்தசயனத்தின் மகன் ஹரீஷ், அஸ்தம்பட்டி மண்டலத்தில் வரித்தண்டலராக பணியாற்றி வரும் குப்புசாமியின் மகன் தமிழரசன் ஆகியோர் செயல்திறன் உதவியாளர் நிலை-2 பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு, பணியில் சேர்ந்துவிட்டனர்.
அதேபோல் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக உள்ள பழக்கடை கணேசனின் பரிந்துரையின்பேரில் சீலநாயக்கன் பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் ராமச்சந்திரன், அரியானூர் பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் ஞானேஸ்வரன், கிச்சிப் பாளையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் ஸ்ரீதரன் ஆகியோரும் இந்தப் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வரித்தண்டலர் குப்பு சாமியின் மனைவி, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜின் வீட்டில்தான் பணிப் பெண்ணாக வேலை செய்துவருகிறார். ஆணையருக்கு வசூல் செய்துகொடுப்பது முதல் கிச்சன் கேபினட்டுக்கு காய்கறி வாங்கிவருவது, அதிகாலையில் ஆணையரை எழுப்பி "வாக்கிங்' அழைத்துச் செல்வதுவரை, இந்த குப்புசாமிதான் "ஆல் இன் ஆல்'.
பெயரளவுக்கு ஒரு நேர்காணலை நடத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இனச்சுழற்சி விதிகளை மீறிய தாகவும் ஒரு புகார் கிளம்பி யுள்ளது. சண்முகம் மகன் ராமச்சந்திரனை பணி நியமனம் செய்ததில் இனச்சுழற்சி விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.
சேலத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் தாதை சிவராமன் கூறுகையில், “தற்போது நடந்த செயல்திறன் உதவியாளர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த பணி நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' என்றார்.
இதுகுறித்து விளக்கம் பெற நாம் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜை அலைபேசியில் அழைத்தோம். அவர் தொடர்புக்கு வரவில்லை.
இதையடுத்து, செயல்திறன் உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்ட கனிஷ்ஹரனின் தந்தையும், மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளருமான செல்வராஜிடம் கேட்டபோது, ""இதெல்லாம் வழக்கமாக நடப்பதுதானே சார், நேரில் உங்களைப் பார்த்துவிடுகிறேன்...'' என ரொம்பவே கேஷுவலாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
பணம் கொடுத்தால் எந்த வேலையையும் வாங்கிவிட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது சேலம் மாநகராட்சி.