"ஹலோ தலைவரே, சர்வதேச அளவில் இந்துத்துவா அமைப்பொன்று உருவாகுது.''”
"ஆமாம்பா, பிரதமர் மோடியின் மூளையில் உருவான கருதானே இது.''”
"ஆமாங்க தலைவரே, சர்வதேச அளவில் வலதுசாரி இந்துத்துவா ஆதரவுத் தளம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும்ன்னு கொஞ்ச நாளாவே திட்டமிட்டு, இதற்காகவே மோடி தீவிரமாக இயங்க ஆரம்பிச்சிட்டார். அவர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அது தொடர்பான நபர்களையும் சந்தித்து, இதற் கான பணிகளையும் அவர் செய்துவருகிறாராம். அண்மைக் காலமாக இந்த அசைன்மெண்ட்டில் கோவை ஈஷா மைய ஜக்கி வாசுதேவும் இணைக்கப்பட்டிருக்கிறாராம். அதனால்தான் இப்போது ஜக்கி அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் என்கிறார்கள் ஈஷா தரப்பினரே. அங்கெல்லாம் அவருக்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் பா.ஜ.க. தலைமையே செய்து தருதாம். இந்த அசைன்மெண்ட்டில் இருப்பதால்தான் ஜக்கிக்கு இந்த அளவுக்கு மோடியிடம் செல்வாக்கு என்கிறது, அவரது வட்டாரமே.''”
"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியின் விவகாரம் ரொம்பவே சூடு பிடிச்சிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, மாஜி வேலு மணியைக் குறிவைத்து இப்போது மூன்றாவது முறையாக, அவர் எதிர்பார்க்காத இடங்களிலும் ரெய்டை நடத்தி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. கிடைத்த ஆவணங்களின் அடிப்படை யில் அவரது ஊழல்களுக்கு ஒத்து ஊதிய அதிகாரிகள் மீதும் தி.மு.க. அரசு குறிவைத்திருக் கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜய் கார்த்திகேயன் உள்ளிட்ட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடர, அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஒருபக்கம் மேலிடங்களைச் சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், கைது பயத்திலேயே இருக்கிறாராம் வேலுமணி.''”
"பவர் புள்ளிகளின் பார்வை கோடை வாசஸ்தலங்களின் பக்கம் திரும்பியிருக்குதே?''”
"நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரியுதுங்க தலைவரே, கையில் அதிகமா பணம் புழங்கும் அதிகாரப்புள்ளிகள், சொத்துக்களை வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தறாங்க. குறிப்பா அவங்க கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில் தங்கள் பினாமி பெயர்களில் காஃபி, டீ எஸ்டேட்டு வாங்குவதில் ஆர்வம் காட்டறாங்க. இது தொடர்பான டீலிங்குகள் நிறைய நடக்குது. சமீபத்தில் அமைச்சர் ஒருவர், ஊட்டியில் டீ எஸ்டேட் ஒன்றை வாங்கியிருக்கிறாராம். இப்படிப்பட்டவர்களின் பார்வை, டீ எஸ்டேட், ஏலக்காய் எஸ்டேட்டுன்னு சுடச்சுட மையங்கொள்ளுதாம்.''”
"அது சரிப்பா, சென்னை மாநகராட்சி கவனமில்லாமல் செயல்படுதுன்னு மாநகரவாசி கள் ஆதங்கப்படறாங்களே?''”
"கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிடிச்சி. இப்ப சின்னச் சின்னதா பெய்த மழைக்கே, செம்பரம்பாக்கம் ஏரி கணிசமாக நிரம்பிடிச்சி. அடைமழை ஆரம்பிச்சிதுன்னா, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பிடும். அதனால் சென்னை மாநகரம் மறுபடியும் வெள்ள அபாயத்தைச் சந்திக்க நேரும்னு சென்னைவாசிகள் கவலைப்படறாங்க. அதுக்குக் காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகம் இதில் இன்னும் அக்கறை காட்டலை. ஏன்னா, மழை நீர் கால்வாய்களைச் சரிசெய்யறேன் பேர்வழின்னு மெட்ரோ வாட்டர் தரப்பு, வேலை முடிஞ்ச பகுதிகளிலும் தோண்டிய பள்ளத்தை எல்லாம் மூடாமப் போட்டு வச்சி ருக்கு. இதெல்லாம் அடைமழை ஆரம்பிக் கிறதுக்குள்ளே முடிக்கலைன்னா சிக்கலைத்தான் ஏற்படுத்தும்ன்னு சொல்றாங்க.''”
"அதே சென்னை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் சிலர், மக்களுக்கு பிரச்சினையா இருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே பலமுறை நாம் சுட்டிக்காட்டியும் கவுன்சிலர் கள் தங்களை சரிபண்ணிக்காம ஆடறாங்க. சென்னையில் உள்ள 200 கவுன்சிலர்களில், 20 கவுன்சிலர்களைத் தவிர மற்ற அனைவருமே கட்டிங், மாமூல் விவகாரங்கள்னு தீவிரமா களமிறங்கி அனைத்துத் தரப்பினரையும் டார்ச் சர் பண்றாங்க. நல்லா இருக்கிற நடைபாதைகளை உடைப்போம்ன்னு மிரட்டிக் குடியிருப்பு வாசிகளிடமும் லஞ்சம் வாங்குறாங்க. இதில், தி.மு.க. கவுன்சிலர்களை விட, அதன் கூட்டணிக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. கவுன்சிலர்களின் டார்ச்சர்கள் அதிகமா இருக்கு தாம். அதனால் கவுன்சிலர்களைப் பார்த்தாலே சென்னை மக்கள் தெறிச்சி ஓடறாங்க. அதனால் எல்லைமீறும் கவுன்சிலர்கள் பற்றிய குறை களைப் பதிய ஒரு ஹெல்ப் லைன் எண்ணை அறிவிக்கணும்னு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்கிறாங்க.''”
"தமிழகம் முழுக்க சட்டவிரோத சூதாட்டக் கிளப்புகளும் நடக்குதே.''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சீட்டாட்ட கிளப்புகள் அதிகமாகவே நடக்குது. . இதெல்லாம் ஆளும் கட்சியைச் சேர்ந்த மாவட்ட வி.வி.ஐ.பி.க்களின் அமோக ஆதரவோடதான் நடக்குதாம். குறிப்பா சென்னையை எடுத்துக்கிட்டா, ராயபுரம் தெலுங்கு செட்டித் தெரு, வீராசாமித் தெரு ஆகிய ரெண்டு இடங்கள்லயும் சூதாட்ட கிளப்புகள் விடிய விடிய நடக்குது. அந்த கிளப்புகள் தி.மு.க.வின் மாவட்ட முக்கியஸ் தருக்கு வேண்டப்பட்டதாம். அதேபோல் ஒரு நம்பர் லாட்டரியும் இல்லீகலாக அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. இது வும் மாவட்ட தி.மு.க. வி.வி.ஐ.பி.யின் ஆசியுடன் தான் நடக்குதாம். மாவட்ட மாணவரணி நிர்வாகி ஒருவர், டாஸ்மாக் சரக்குகளை ஸ்டாக்கில் வச்சிக்கிட்டு, ரவுடி களின் பாதுகாப்போடு அந்த சரக்குகளை அதிகவிலைக்கு நள்ளிரவு 1 மணி வரை விற்றுவருகிறாராம். இதுபோல் அங்கங்கே நடப்பது உளவுத்துறைக்குத் தெரிந்தும், அதை மேலே கொண்டுபோறதில்லைங்கிற புகாரும் எழுந்திருக்கு.''”
"இந்த களேபரங்களுக்கு நடுவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பலராலும் பாராட்டப் படுகிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தஞ்சை மாவட்ட ஆட்சியரான தினேஷ் பொன்ராஜ், தன்னிடம் மனு கொடுக்க வருபவர்களில், வாய் பேச முடியாத, காது கேளாதவர்களின் பரிதவிப்பைப் புரிஞ்சிக்கிட்டு, இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், அவர்களின் சைகையை மொழி பெயர்க்கும் சிறப்பு மொழி பெயர்ப்பாளராக மைதிலி என்பவரை நியமித்திருக்கிறார். அதோடு இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடந்த 23-ந் தேதி கடிதம் எழுதி, தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதத்தைப் பார்த்த இறையன்பு, "மற்ற மாவட்டங்களுக்கும் இது ஒரு முன்னுதாரணம்'னு தினேஷ் பொன்ராஜைப் பாராட்டி பதில் கடிதம் எழுதுயதோடு, இப்படிப்பட்டவர்கள் மனு கொடுக்க வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை தரும்படியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.''”
"ஜெ’ வாழ்ந்த போயஸ் கார்டன் பங்களாவான வேதா இல்லம் விற்பனைக்கு வந்திருக்கே?''
"ஆமாங்க தலைவரே, ஜெ.வின் போயஸ் கார்டன் இப்ப விற்பனைக்கு வந்திருப்பது உண்மைதான். அங்க இப்ப, ஜெ.வின் அண்ணன் மகள் தீபாதான் இருக்கிறார். இந்த போயஸ் பங்களாவைப் பராமரிப்பது, தீபாவுக்கு யானையைக் கட்டி மேய்ப்பதுபோல் இருக்கிறதாம். அதனால் அதைச் சமாளிக்க முடியாத அவர், அதை விற்கும் முயற்சியில் இருக்கிறார். சசிகலாவை தீபா தரப்பு இதற்காக அப்ரோச் செய்தபோது, அவர் கோடிகளில் சொன்ன ரேட்டைப் பார்த்து, எனக்கு, அதன் எதிரில் நான் கட்டிவரும் சொகுசு பங்களா தயாராயிடிச்சி. அங்கே குடிபுக நல்லதொரு தருணத்துக்காகக் காத்திருக்கிறேன். அதனால் இது வேண்டாம்னு சொல்லிவிட்டாராம் சசி.''”
"நானும் இது தொடர்பா எனக்குக் கிடைச்ச ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். போயஸ் வீட்டை விற்பது தொடர்பாக, மாஜி அ.தி.மு.க. அமைச்சர் குழந்தைவேலுவின் மகன் ரவி மூலம், எடப்பாடியையும் தீபா தரப்பு மூவ் செய்திருக்கு. அந்த சமயத்தில்தான், பொதுக்குழுக் குழறுபடிகள் அரங்கேறியதாம். அதனால் "பொதுக்குழுவுக்கே அதிகம் செலவு செய்துவிட்டேனே. கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம்..." என்று அவரும் இழுக்க, பங்களா வாங்கலையோ பங்களா என கூவிக் கொண்டிருக்கிறது தீபா தரப்பு.''
_______________
இறுதிச் சுற்று அனுமதி கிடைக்குமா?
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் விவகாரத்தில் மாஜி வேலுமணியோடு சிக்கியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கைப் பதிவு செய்ய, அரசின் அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதி யிருக்கும் நிலையில், இதற்கான அனுமதியை சம்பந்தப் பட்ட அமைச்சர்களும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணைய ரும்தான் தரவேண்டும் என்று விதி இருப்பதால், அந்தக் கடிதங்களுக்கு அனுமதி கிடைப்பது கடினம் என்கிறார்கள் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. கந்தசாமியை இடமாற்றம் செய்ய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். கூட்டணி பகீரத முயற்சியை எடுத்துவருகிறது.
-இளையர்