திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப் பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளையும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியே கைப்பற்றியது. பிரதீபா கனகராஜ் பேரூராட்சித் தலைவராகத் தேர்வானார். பிரதீபா மற்றும் அவரது கணவர் கனகராஜின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ச்சியாக மன்றக் கூட்டங்கள் அனைத்திலும் பெரும்பாலான கவுன்சிலர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கண்டனத்தைத் தெரிவித்த தோடு, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத் தையும் நடத்தியுள்ளார்கள்.

cc

இதுகுறித்து அதிருப்தி கவுன்சிலர்களிடம் விசாரித்ததில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை 80 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைத்துவிட்டு, பரா மரிப்புப் பணிக்கென 8 லட்சம் ரூபாய் ஒதுக்கியதால் அதிர்ச்சியடைந்தோம். இந்த தொகைக்கு புதிதாகவே கழிப்பறைகளைக் கட்டிவிடலாமே எனக்கூறி வெளிநடப்பு செய்தோம். அப்படியும் தீர்மானத்தைக் கொண்டுவந்து விட்டார்கள். அதேபோல், குப்பைக் கிடங்கு சுத்தப்படுத்த, அங்கன்வாடி, அலுவலகப் பராமரிப்புக்கு எனக்கூறி பல லட்சங்களை எடுத்துள்ளார்கள். இதன்மூலம் தலைவரின் கணவருக்கு கணிசமான தொகை போயிருக்கிறது. ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, சாக்கடை, குடிநீர் போன்ற பணிகளைச் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அப்படி இருந்தும்கூட பெரும்பாலான கவுன்சிலர்கள் இல்லாம லேயே தீர்மானம் போட்டு செயல்படுத்தி வருகிறார்கள். கேட்கப் போனால், உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்கிறார் கள். அப்புறம் எதற்காக நாங்க கவுன்சிலர்களாக வந்தோம் என்று தெரியவில்லை.

Advertisment

cc

அதேபோல், செயல் அலுவலர் நந்தகுமார் உடந்தையுடன் 55 வீடு களுக்கு பிளான் அப்ரூவல் கொடுத்து அதன்மூலமும் ஒரு வருமானத்தை தலைவரின் கணவர் பார்த்துள்ளார். தலைவரின் கணவர் கனகராஜ் தான் பேரூராட்சி அலுவலகத்தில் எப்போதுமிருந்து அதிகாரம் செலுத்துகிறார். தலைவரைப் பார்க்க முடியாததால் மக்களால் குறைகளைச் சொல்லமுடியவில்லை. எனவே எங்க அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும், மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரிடமும் பத்து கவுன்சிலர்கள் நேரடியாக முறையிட்டோம். இது தெரிந்ததும் தலைவரின் கணவர், அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்'' என்று வருந்துகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி தலைவர் பிரதீபாவிடம் கேட்டபோது, "கட்சிக்காக உழைத்ததால்தான் அமைச்சர் ஐ.பி. எனக்கு தலைவர் பதவி கொடுத்தார். இப்பதவி கிடைக்காத சிலர், அதை மனதில் வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, பணமும் எதிர்பார்க்கிறார்கள். அதைத் தராததால், என் கணவர் மிரட்டுவதாக பொய்யான தகவலைப் பரப்பிவருகிறார்கள்" என்றார்.

Advertisment