அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிறைத் துறையில் 15 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் வீடுகள், ஒப்பந்தக்காரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிறைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கூடலூர், கோவை, நெல்லை, சிங்காநல்லூர், சென்னை புழல் என 9 சிறைச்சாலைகளிலும் தண்டனைக் கைதிகள் மூலம் பேக்கரி பொருட்கள், சுங்குடிச் சேலைகள், ஊறுகாய், அப்பளம், எழுதுபொருட்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து சிறைத்துறை அங்காடிகளுக்கும், அரசு ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களும் கொடுக்கப்படுகின்றன. சிறைத்துறையில் சிறைக்கைதிகள் செய்யும் இந்த பொருட்களை வாங்கியதில் 15 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு வழக்கு பதியப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை சிறைத்துறையில் பணியாற்றும் எஸ்.பி. ஊர்மிளா, கூடுதல் எஸ்.பி. வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்குச் சொந்தமான வீடுகள், விற்பனை செய்த தனியார் நிறுவனங்கள், நிறுவன உரிமை யாளர்கள் என மதுரையைச் சேர்ந்த ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன், சென்னை சாந்தி, நெல்லை சங்கரசுப்பு, தன லெட்சுமி, சென்னை வெங்க டேஸ்வரி ஆகிய 11 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சூரியகலா கடந்த 3ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தி வழக்கு பதிவுசெய்தார். இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி, டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு, சூரியகலா, ரமேஷ்பிரபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஜனவரி 3ஆம் காலை 7 மணிக்கு மத்திய சிறைக்குள் நுழைந்தனர். அவர்கள் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக முறைகேடு வழக்கு தொடர்பாக சிறைத் துறையிலுள்ள பல்வேறு ஆவணங்களை ஆய்வுசெய்த னர். ஊழல், முறைகேடு தொடர்பாக அன்றைக்கு பணியிலிருந்த சில அலுவலர்கள், ஊழியர்களிடமும் விசாரித்தனர். வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை சிறையிலிருந்து கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்துவரும் வேளையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடு தொடர்பாக இந்திய கணக்குத் தணிக்கை துறை 2017, 18, 19 நிதியாண்டுக்கான வரவு- செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் பதிவேடுகளை கோர, சிறை நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்துவந்தது. இந்நிலையில் 100 கோடி மதிப்பிலான மூலப்பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களின் ஜி.எஸ்.டி .அறிக்கைகளை தணிக்கைத்துறை ஆய்வுசெய்ததில், முறைகேடு செய்தது தெரியவந்தது
ஆடிட்டிங் கணக்குகளின்படி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மதுரை சிறைத்துறை எஸ்.பி.யான ஊர்மிளா, சிறைத்துறை கூடுதல் எஸ்.பி. வசந்தகண்ணன், தற்போது மதுரை மத்திய சிறை, நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் தியாகராஜன் ஆகியோர் 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சிறைக் கைதிகள் உற்பத்திசெய்யும் எழுதுபொருட்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை நேரடியாக அரசுத் துறைகளான சிவகங்கை, தேவகோட்டையிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம், மதுரை மாவட்டம் பரவை டவுன் பஞ்சாயத்து, உசிலம்பட்டி தாலுகா அலுவலகம், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம், சிவகங்கை மாவட்டம் ஆதிதிராவிட நல வாரிய அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளுக்கு ரொட்டி பாக்கெட்டுக்களை இந்த மூன்று சிறைத்துறை அதிகாரிகள் கூட்டுச்சதி மூலம் சிறைத்துறை கைதிகள் தயாரித்ததுபோல் ஆவணங்களை போலியாக தயாரித்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு பொருட்கள் விற்பனை செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக இவர்களுக்கு உடந்தையாக இருந்த நிறுவனங்களிலிருந்து ஒப்பந்தம் பெற்றபோது லஞ்சமாக பெற்ற பணம் தொடர்பான முக்கிய ஆவ ணங்கள் பல சோதனையில் சிக்கின. அதில் குறிப்பாக ஊர்மிளா வீட்டிலிருந்து சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்த ஒப்பந்த நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றதற்கான பல ஆவணங்கள் சிக்கியுள்ளன எனத் தெரியவருகிறது.
சிறைச்சாலைகளில் நடக்கும் மெகா ஊழல் குறித்து மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், “"நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே இதுகுறித்து ஆர்.டி.ஐ. மூலம் விளக்கம் கேட்டிருந்தோம்.
ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து எந்த விளக்கமும் பதிலும் இதுவரை கொடுக்கவில்லை. சிறைத்துறை கைதிகள் மூலம் சிறைக்குள் பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகிறது. சிறைக்கைதிகள் பெட் ரோல் பல்க்கே நடத்துகிறார்கள். இப்படி உற்பத்தியாகும் பொருட்கள் தனியார் கடைகள், வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மானிட்டரிங் செய்ய என்ன சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்? அலுவலக விசிட்டராக மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக ஆய்வுசெய்யவேண்டும்.
ஆனால் ஆட்சியர் இதுவரை போனதே இல்லை. சிறைத்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், அந்த நான்கு சுவருக்குள் நடக்கும் விசயம் இரகசியமாகவே வைக்கப்படுகிறது. உயரதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை முறைகேடுகள், ஊழல், மனித உரிமை மீறல் இவையெல்லாம் தடுக்கப்படவேண்டும்''’ என்றார்
இதுகுறித்து மதுரை சிறைத்துறை யில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நம்மிடம், “"தமிழ்நாடு சிறைத்துறை ஆறு சரகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சரகத்தின் கீழும் இரண்டு மத்திய சிறைகள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட கிளைச் சிறைகள் இயங்கிவருகின்றன.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 5000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தமிழகத்தில் 138 சிறைச்சாலைகள் உள்ளன. ஐந்து சிறைத்துறை துணைத்தலைவர்களும், ஐந்து சரகத்திற்கும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
தலைமையிடத்தில் ஒரு சிறைத்துறை துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார். ஒவ்வொரு மத்திய சிறைக்கும் ஒரு கண்காணிப்பாளர் வீதம் பத்து சிறைக் கண்காணிப்பாளர்கள் பத்து மத்திய சிறைகளையும் நிர்வகித்து வருகிறார்கள். 22,000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர்.
சிறைத்துறைக்கு வாங்கவேண்டிய பொருட்களில் ஊழல், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களில் ஊழல், கட்டடப் பராமரிப்புச் செலவுகளில் ஊழல், சிறைத்துறை வாகனத்திற்கு டீசல், பெட்ரோல் மற்றும் வண்டி பராமரிப்பு களில் ஊழல், விசாரணைக் கைதிகள், தண்டனைக்கைதிகளுக்கு கொடுக்கும் சலுகைகளுக்காக கையூட்டு, அவர்களுக்கு கைத்தொழில் கற்றுக்கொடுத்து பன், ரொட்டி, கேக், எழுதுகோல், நோட்டு புத்தகங்கள், நைட்டி, கைலி, சுங்குடிச்சேலைகள் உற்பத்தி நடக்கிறது. இந்தத் திட்டங்களில் காவல்துறை அதிகாரிகளே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கீழ்மட்டத்திலிருந்து அனைத்து உயரதிகாரிகளையும் முழுமையாக சோதனை செய்தால், ஊழல் தொகை பலநூறு கோடியைத் தாண்டும். சிறைத்துறையில் ஒரு சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டியது அத்தியா வசியம்''’என்றார் வேதனையோடு.
சிறைத்துறை அதிகாரிகளே தவறு செய்தால் அவர்களுக்கு என்ன தண்டனை தருவது?!