vvv

"விலைவாசி இப்படி ஏறிகிட்டு போனா எப்படி குடும்பம் நடத்துவது?"" எனும் நடுத்தரவாசி குடும்பத்தினரின் புலம்பல் ஒருபக்கம்... ""காய்கறி லோடு ஏம்பா இன்னும் வரல?"" எனும் காய்கறி மார்க்கெட் வியாபாரியின் புலம்பல் ஒருபுறம்! என காய்கறி வரத்து குறைவாலும், காய்கறிகளின் அதிரடி விலை உயர்வாலும் அனைத்துத்தரப்பும் பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு என்ன உண்மைக் காரணமென்று கண்டறிய களத்திலிறங்கியது நக்கீரன்.

Advertisment

தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ராக்கெட் வேகத்தில் விலையேறியுள்ளது. 1996ல், 295 ஏக்கர் பரப்பளவில் திறக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 3,100 கடைகள் உள்ளன. அவற்றில் 1,000 மொத்த வியாபாரிகள் கடைகளும், 2,000க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளும் உள்ளன. தமிழகம் உள்பட வெளி மாநிலங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச்சேர்ந்த, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்.

காய்கறிகளின் திடீர் விலையேற்றம் குறித்து பல்லாவரத்தை சேர்ந்த வியாபாரி சத்திவேல் கூறுகையில், ""கடந்த மாதம் வெயிலை காரணம் காட்டி கணிசமாக விலை ஏறிச்சி. இந்த மாதம் மழையின் காரணமாக விலை உச்சத்தை தொட்டிருக்கு. கடந்த ஒரு வாரத்துக்குமுன் தக்காளி கிலோ 30 ரூபாய் வித்தது இப்போ கிலோ 55 ரூபாய், வெங்காயம் 30 ரூபாயிலிருந்து இப்போ கிலோ 55 ரூபாய், பூண்டு இரண்டாம் தரம் மூன்றாம் தரமே கிலோ 350 ரூபாய்க்கும், நான்காம் தரம் பொடிப்பூண்டோ கிலோ 260 ரூபாய்க்கும் விற்கிறோம். முன்னாடியெல்லாம் விடியற்காலை 3 மணிக்கு வருவோம், காய்கறி வாங்கிட்டு போயி 5 மணிக்கு கடைய திறப்போம். இப்போ வரத்து குறைவால, நள்ளிரவு 12 மணிக்கே வந்தாலும், கடைக்கு திரும்பப் போக 6 மணி, 7 மணி ஆகுது. அந்தளவுக்கு காய்கறி வியாபாரிகளுக்கிடையே போட்டியாக இருக்குது!"" என்றார்.

Advertisment

பச்சை காய்கறிகள் மொத்த வியாபாரி சுரேஷிடம் பேசினோம். ""தமிழகத்திலிருந்து முக்கியமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, கோவை, மேட்டுபாளையம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியிலிருந்து பச்சை காய்கறிகள் வந்தாலும் நம்ம தேவையைத் தீர்க்க மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவையே பிரதானமாக நம்பியிருக்கோம். வெயிலால அதிக வறட்சி மற்றும் திடீர் மழையால செடி, கொடிகள் அழிஞ்சி போனதால வரத்து குறைவாகி, டிமாண்ட் அதிகமாகிடுச்சு. அதான் விலைவாசி ஏறுது.

வெங்காயம், பூண்டு எல்லாம் கர்நாடகா, ஆந்திராவுலருந்து வந்தாலும், நாசிக் காய்கறிகள் மார்க்கெட்டுல நமக்கு தாராளமா கிடைக்கும். ஆனால் மற்ற மாநிலத்த சேர்ந்தவங்களும் விளைச்சல் இல்லாத காரணத்தால் நாசிக் மார்க்கெட்டத் தேடிப்போறதால, நமக்கு கிடைக்க வேண்டிய காய்கறிகள் கிடைப்பதில்லை. மேலும், உருளைக்கிழங்கு ஆக்ரா, இந்தூர்ல இருந்து வரும். அதுவும் இப்போ டிமாண்ட்'' என்றார்.

தக்காளி மெத்த வியாபாரியான சிராஜிதீனிடம் கேட்டபோது, ""தக்காளியில அஞ்சு தரம் இருக்கு. அதிகபட்சம் ஒரு பெட்டி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முதல் தரம் தக்காளி இப்போ 700 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதேபோல அடுத்தடுத்து, 600, 500, 400, 300 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. ஆந்திரா, கர்நாடகாவுலருந்துதான் நமக்கு அதிகமா தக்காளி வரும். வெயில், தொடர்மழையால செடிகள் அழிந்துபோனதால் வரத்து குறைவா இருக்கு. அதனால ஆட்டோமேட்டிக்கா விலை ஏறுது'' என்றார்.

வெங்காய மொத்த வியாபாரி பாலாஜி கூறுகையில், ""நம்ம நாட்டின் தேவையில் 70% வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மார்க்கெட்டுல இருந்துதான் கிடைக்குது. வருகை குறைவால எக்கச்சக்க விலை விக்குது. சமீபத்துல வெங்காயம் ஏற்றுமதியே தடை செய்யப்பட்டிருக்குது'' என்றார்.

கொத்தமல்லி மொத்த வியாபாரி விக்னேஷிடம் பேசினோம். ""300 ரூபாய்க்கு வித்த 6 கிலோ கொண்ட ஒரு கொத்தமல்லி கட்டு, இன்றைக்கு எங்களுக்கே 800 ரூபாய்க்கு விற்பனையாகுது. அதேகட்டை சில்லரை வியாபாரிகளிடம் 1,250 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அப்போ பொதுமக்களுக்கு எவ்வளவு விலைக்கு விற்பனை செய்வாங்கனு யோசிங்க. வரத்து மிகமிகக் குறைவு என்பதால் லோடு வந்து இறங்கியதுமே போட்டி போட்டுக்கிட்டு எடுத்துட்டு போறாங்க'' என்று கூறினார்.

வாழைக்காய் வியாபாரியான மகாலிங்கம், ""20 வருசமா கோயம்பேடு மார்க்கெட்டுல வியாபாரம் செய்யுறேன். இந்த அளவு விலைவாசி ஒரேயடியா ஏறியது கிடையாது. இதுமட்டுமல்ல, இஞ்சி, முருங்கைக்காய், கீரை வகைகள், வெற்றிலை முதல் வாழையிலை வரை விலையேற்றம்தான்'' என்று புலம்பினார்.

மூட்டை தூக்கும் தொழிலாளி சரவணன், ""சார் முன்பெல்லாம் மூட்டை தூக்கினால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்போ 300 கிடைத்தாலே பெரிய விஷயம் போல தோன்றுகிறது'' என்றார்.

காலிபிளவர் மொத்த வியாபாரி ஜான்சனிடம் பேசினோம் ""கடந்த 25 ஆண்டுகளாக கோயம்பேடு மார்க்கெட்டில் காலிபிளவர் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த மாதம் 8 பீஸ் கொண்ட ஒரு மூட்டை 150 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 350 ரூபாய் வரை விலை ஏறியுள்ளது. இதற்கு காரணம் வெயில் மற்றும் மழை என்று கூறுவார்கள். அது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் காய்கறிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுவதும் முக்கிய காரணமாக உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நாசிக், கர்நாடகா, ஆந்திரா காய்கறிச் சந்தைகளில் நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்வதால், இந்த விலையேற்றம் எப்போதுமில்லாத அளவுக்கு இருக்கிறது. இந்த ஆன்லைன் மொத்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், செயற்கையான காய்கறி விலையேற்றம் ஆண்டுமுழுக்கவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும், காய்கறி விளையும் நிலங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, அங்கே விளையக்கூடிய காய்கறிகளை மொத்தமாகத் தங்கள் நிறுவனத்துக்காக எடுத்துக்கொள்வதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவேண்டிய காய்கறி வரத்து குறைகிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தாவிட்டால், காய்கறி விற்பனையை நம்பியுள்ள பல லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும்'' என்றார் வேதனையுடன்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம். ""பருவநிலை மாற்றம் மற்றும் அதிக மழையால் வரத்து குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் செயற்கையாக விலையேற்றம் நடக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். அரசிடம் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்றி காய்கறி வர்த்தகத்தை முறைப்படுத்த வலியுறுத்தியுள்ளோம். அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் கடை வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் டி-மார்ட், லூலு மார்ட், ரிலைன்ஸ் மோர் போன்ற பெரிய, பெரிய கார்ப்பரேட் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டுள்ளது, மகாராஷ்டிராவை சேர்ந்த டி-மார்ட், கேரளாவை சேர்ந்த லுலு மால் போன்றவற்றுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் ஒரு தமிழர் அந்த மாநிலத்தில் சென்று இதேபோன்ற மால்கள் மற்றும் நிறுவனங்களை அமைக்க அந்த மாநில அரசு அனுமதி அளிப்பதில்லை. அரசு இதை கருத்தில்கொண்டு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பொதுமக்கள் விலையற்றத்தால் பாதிக்கப்படாமலும், அதேபோல இந்த தொழிலை நம்பியுள்ள ஒரு கோடி வியாபாரிகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க அரசின் முயற்சியால் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் அறைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.

இது தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பலமுறை தொடர்புகொண்டும், அவர் தொடர்பை எடுக்கவில்லை. காய்கறி விற்பனையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தினால்தான் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.