ந்தியாவில் தயாரிக்கப்பட்ட “"கோவாக்சின்', “"கோவிஷீல்டு'“ தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன் பாட்டுக்கு ஜனவரி 3-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டு, ஜனவரி 13 முதல் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன.

coronavaccine

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தடுப்பூசிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்தும், அவற்றின் நம்பகத் தன்மை குறித்தும் பலமான எதிர்ப்புக்குரல்களும் கண்டனங்களும் எழத்தொடங்கியுள்ளன. அதற்கு துணை செய்வதுபோல கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் இறந்திருப்பதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தடுப்பூசி சார்ந்த அறிவியலறிஞரான கங்காதீப் கங், "தடுப்பூசியின் செயல் திறன் தரவுகள் பொதுவில் வெளிப்படுத்தப்படாத வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதீர்கள்'’என வெளிப்படையாகவே "கோவாக்சின்', “"கோவி ஷீல்டு'க்கு எதிராகக் குரல்கொடுத்தார்.

Advertisment

பொதுவாக புதிய மருந்துகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்முன் மூன்று கட்ட பரிசோதனை களையும், அவற்றுக்கான ஒப்புதல்களையும் தாண்டி வரவேண்டும்

"கோவாக்சின்' 2 கட்ட சோதனைகளை மட்டுமே தாண்டியிருக்கிறது. மாறாக, மூன்றாம் கட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது புதிதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களிடம், பரிசோதனையில் பங்கேற்றவர்களாக் கூறி கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

""மூன்றாம்கட்டச் சோதனையையும் முடித்துவிட்டு தடுப்பூசிகளை நடைமுறைக்குக் கொண்டுவரலாமே? எதற்காக இந்த இரு தடுப்பூசிகளுக்கும் விதிமுறைகளை மீறி அனுமதிவழங்கப்பட்டிருக்கிறது? ஏன் இந்த அவசரம்?'' என்கிறார்கள் எதிர்ப்பவர்கள்.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நடக்கும் திரைமறை வுச் செயல்பாடுகளை நக்கீரனுக்கு கடிதமாக எழுதியுள்ளார். அதில், ""அதிகார தொனியில் இந்தத் துறை நடைபோடுகிறது. மருத்துவர்களே நீங்கள் முதலில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு போட்டுவிடுங்கள் என்று நாள்தோறும் ஜூம் மீட்டிங் வைத்து அழுத்தம் தருகிறது.

coronavaccine

ஒருபக்கம் விருப்பமுள்ளவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம், இலக்கு சார்ந்து இந்த தடுப்பூசி போடப்படுவது இல்லையெனச் சொல்கிறார்கள் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோர். ஆனால் ஒவ்வொருநாளும் "எத்தனை பேருக்குப் போட்டீர்கள்' என்று கணக்கு கேட்கிறார்கள். "ஏன் இன்னும் அதிகமான பேருக்கு போடவில்லை' என்று ஆய்வு செய்கிறார்கள்.

வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அளவில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு குறையாமல் போடவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கிறார்கள். "ஏன் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்' என்று மருத்துவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். வெளியே ஊடகங்களுக்கு ஒரு மாதிரி அறிவித்துவிட்டு அதற்கு நேரெதிராக மாவட்ட அதிகாரிகளை வைத்து கீழ்நிலையிலுள்ள மருத்துவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள்.

கற்றறிந்த மருத்துவர்கள் கேள்விகேட்காமல் இதை போட்டுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்த அரசு மற்றும் அதிகாரிகள் முகத்தில் அமைதியாக கரியைப் பூசிக்கொண்டிருக்கிறார்கள் சுகாதாரத் துறையில் அடிமட்டத்தில் பணிபுரிபவர்கள்'' என்று முடிகிறது அந்தக் கடிதம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்து, டாக்டர் முதல் தூய்மைப் பணியாளர் முத்துமாரி உட்பட 100 மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் மண்டல அளவில் 10 மையங்கள் அமைக்கப்பட்டு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. 24 ஆயிரத்து 300 டோஸ்கள் மட்டும் கையிருப்பில் வைக்கப்பட்டு மற்றவை முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்களப் பணியாளர்கள் என்று கூறப்பட்டாலும், மருத்துவர்கள், செவிலியர்களைவிட தூய்மைப் பணியாளர்களையே பெரிதும் முன்னிறுத்துவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோதனைச்சாலை எலிபோன்று தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தப் படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்குமாறாக தூய்மைப் பணியாளர் ராம், “""கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் உயிரையே பணயம் வைத்து தான் பணியாற்றினோம். தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் எந்த தயக்கமும், பயமும் இல்லை. அதற்கு சான்றாகத்தான் முத்துமாரி மதுரையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். முத்துமாரியோடு மருத்துவர்களும்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இன்னும் எங்களுக்கு எந்த தடுப்பூசியும் போடவில்லை, இரண்டாம் கட்டமாகத்தான் எங்களுக்குப் போடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது''’ என்றார்.

இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனோ, ""தேசிய அளவில்தான் தூய்மைப் பணியாளர்கள், தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முதலில் மதுரையில் டாக்டர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மூன்றாவதாகத்தான் தூய்மைப் பணியாளரான முத்துமாரி என்பவர் அவராகவே முன்வந்து போட்டுக்கொண்டார். மற்ற மாநிலத்தில் இறந்தவர்கள் அந்த ஊசியால்தான் இறந்தார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆகையால் யாரும் பயப்படத் தேவையில்லை''’’ என்றார்.

கர்ப்பிணிப் பெண்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் "கோவாக்சின்' தடுப்பூசியைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-அ.அருண்பாண்டியன்